shadow

சட்டமே துணை: திருமண சீர்வரிசைப் பட்டியல்

1தீபிகாவுக்கு மனம் வெறுத்துவிட்டது. அழுது தீர்த்த பிறகும் ஆற்றாமையும் வேதனையும் ஒரு சேர அழுத்தின. அப்பாவும் அம்மாவும் அவளும் பார்த்துப் பார்த்து வாங்கிய பொருட்கள், திருமணம் முடித்த கையோடு தீபிகாவின் புகுந்த வீட்டுக்குச் சென்றன.

அவள் கணவன் சுயமாகச் சிந்திக்க முடியாதவன் என்பதாலும், ஒரே மகன் மனைவியின் பக்கமே சாய்ந்துவிடுவானோ என்ற அச்சம் காரணமாகவும் தீபிகாவின் மாமியார் அவளுடன் நல்லுறவைப் பேணவில்லை. தினம் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார். குழந்தை உண்டாகவில்லை என்று சண்டை. மருத்துவர்கள் கணவன், மனைவி இருவரையும் ஒன்றாகச் சிகிச்சைக்கு வரும்படி கூறினார்கள். மருமகனும் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று தீபிகா வின் அம்மா கூறிய தருணத்திலேயே பெரும் சண்டை போட ஆரம்பித்துவிட்டார் மாமியார்.

நியாயமற்ற தீர்வு

ஆகாத மருமகள் கால் பட்டால் குற்றம், கை பட்டால் குற்றம் என்று பிரச்சினைகள் பெருகியதே தவிர, ஓயவில்லை. நியாயமற்ற தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. தீபிகா கணவனுடன் வாழ வேண்டும் என்றால், தீபிகாவும் அவள் பெற்றோரும் மகனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் மாமியார். தொலைபேசியில் பேசக் கூடாது, அவள் பெற்றோர் வரக் கூடாது போன்ற குடும்ப வன்முறைகள் நிபந்தனைகளாயின.

அவள் கணவனோ தீபிகாவுடன் வாழத் தனக்கு விருப்பம் என்று ஒருமுறைகூட சொல்லவில்லை. ஒரு வருடமாக நடந்து முடிந்த பல சுற்றுப் பஞ்சாயத்தில் அவளுடைய சீர்வரிசைப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு, மனமொத்த விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தாகிவிட்டது. சீர்வரிசைப் பொருட்களைத் திரும்பப் பெறும்போதுதான் மனமுடைந்து அழுதாள் தீபிகா.

சீர்வரிசை பஞ்சாயத்து

நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதுமாகக் கிடைக்கவில்லை. பஞ்சாயத்தில் பேசிய தீபிகாவின் கணவனும் மாமியாரும், “அவள் என்ன கொண்டு வந்தாள் என்றே தெரியாது. இங்கு இருப்பது இவ்வளவுதான். அவர்கள் கொடுத்த பொருட்களை அப்படியே பீரோவில் வைத்திருந்தோம்” என்று சொன்னார்கள். வாழ்க்கையும் தொலைந்து, உழைத்துச் சேகரித்த சீர்வரிசைப் பொருட்களும் தொலைந்து போயின. காவல் நிலையத்தில் புகார் செய்து, பொருட்களைப் பெற முடிவெடுத்தனர். பொருட்கள் கிடைக்காவிட்டாலும் எப்.ஜ.ஆர். போடுவது என்று முடிவானது.

காவல் நிலையத்தில் அவள் கணவரும் மாமியாரும் சத்தியம் செய்து, அவ்வளவு நகைகள்தான் போடப்பட்டதாகக் கூறினார்கள். தீபிகாவுக்கும் அவள் குடும்பத்துக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. உயர் அதிகாரி விஷயத்தைப் புரிந்துகொண்டார். பொய் சொன்னால் வழக்கு போட்டுவிடுவேன் என்று சொன்னார். தீபிகாவின் மாமனாரையும் அழைத்து விசாரித்தார். அம்மாவும் மகனும் உண்மையை மறைப்பதைத் தெரிந்துகொண்டார். ஆனால், என்னென்ன பொருட்கள் தரப்பட்டன என்பதற்கு எந்தச் சாட்சியமும் இல்லை.

நகைக்கு சாட்சி உண்டா?

திருமணத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படங் களில் இருந்த நகைகளைக் காட்டினாள் தீபிகா. ஆனால் அவை தங்கமா, கவரிங் நகைகளா? அவற்றில் எது தீபிகாவுக்குச் சொந்தமானது? அவை அனைத்தும் அவள் கணவன் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனவா என்ற விவரங்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று சட்டபூர்வமான விளக்கத்தைக் கொடுத்தார் அதிகாரி.

தீபிகாவின் பெற்றோர் சீர்வரிசைப் பட்டியல் தயாரித்துக் கொடுத்தார்களா என்றும் விசாரித்தார். எதுவும் செய்யவில்லை என்றும் தங்கள் மகளுக்காக நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொடுத்து அனுப்பியதாகச் சொன்னார்கள். பட்டியல் போட்டு சீர்வரிசை கொடுத்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா என்ற அச்சம் பெண் வீட்டில் இருக்கும். ஆனால் பட்டியல் இல்லாமல் இருந்தால் வழக்கை எப்படி நடத்துவது? எதை வைத்து நிரூபிப்பது என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை அதிகாரி கேட்டார்.

சிக்கல் தீர்க்கும் பட்டியல்

தீபிகாவின் அம்மா, “வாழப்போகும் வீட்டுக்கு யாராவது சீர்வரிசைப் பட்டியல் எழுதிக் கொடுப்பார்களா? அதை நகல் எடுத்து வைப்பார்களா?” என்று கேட்டார். அப்போதுதான் அவர்களுக்குத் தெரிந்தது, ‘சீர்வரிசைப் பட்டியல் விதிமுறைகள்’ என்று தமிழ்நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது என்று. அதன்படி, சீர்வரிசைப் பொருட்களைக் கொடுத்து, ஒரு பட்டியல் தயாரித்து, மணமகன், மணமகள் தவிர இரு தரப்பிலும் சாட்சிகள் கையெழுத்துப் பெற்று, பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஆளுக்கொரு நகலை வைத்திருக்க வேண்டும்.

95% குடும்பங்களில் இந்தப் பிரச்சினை இல்லை. பிரச்சினை என்று வரும்போது யாருக்கும் நஷ்டமின்றி, நியாயமான முறையில் சீர்வரிசையைத் திருப்பித் தருவதற்கு மணமகன் வீட்டாருக்கும், தம் பொருட்களை நல்ல முறையில் திரும்பப் பெறுவதற்குப் பெண் வீட்டாருக்கும் இது வசதியாக இருக்கும். சிலநேரம் மனைவி வீட்டார் பொய்யாகப் புகார் கூறி, கணவன் வீட்டார் பாதிக்கப்பட்டாலும் இந்தப் பட்டியல் உறுதுணையாக இருக்கும்.

இப்படியெல்லாம் பட்டியல் போடுவது அநாகரிகம் என்று சிலர் கருதலாம். அப்படியானால் பெண் வீட்டிலிருந்து தங்கமும் வெள்ளியும் பொருட்களும் வாங்குவதும் அநாகரிகம்தானே?

தமிழகத்தில் பல சமூகங்களில் இந்தப் பழக்கம் காலம் காலமாக இருந்தே வந்திருக்கிறது. எனவே, சீர்வரிசைப் பட்டியல் விதிமுறைகளைத் தெரிந்துகொள்வதும், நடைமுறைபடுத்துவதும் காலத்தின் தேவை.

இன்றைக்குத் திருமணச் சந்தையில் இரு மணங்கள் கலக்கும் திருமணங்களாக இல்லாமல், இரு பணங்கள் கலக்கும் திருமணங்களாக மாறிவிட்ட நிலையில் சீர்வரிசைப் பட்டியல் விதிமுறைகளை எல்லோரும் நடைமுறைப்படுத்துவது தேவையில்லாத சிக்கல்களைத் தீர்க்கும்

Leave a Reply