கோவை பெரியகடைவீதியில் கவரிங் நகை வைத்து 5 பவுன் தங்க சங்கிலி திருட்டு

 

கோவை  பெரியகடைவீதியில் கடந்த 15 ஆண்டுகளாக சரவணா ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது.

இந்த கடையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி மேலாளர் சிவகுமார் பணியில் இருந்த போது 2 பெண்கள் பர்தா அணிந்த படி கடைக்குள் வந்தனர்.

அவர்கள் 5 பவுன் தங்க செயின் வேண்டும் என கேட்டனர்.கடையில் இருந்த ஊழியர் அவர்களுக்கு நகைகளை காண்பித்து கொண்டிருந்தார்.

அவர்கள் ஒவ்வொரு நகையாக வாங்கி பார்த்தனர்.பின்னர், செயின் வேண்டாம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

அவர்கள் சென்ற பின்னர், கடை ஊழியர் நகைகளை எடுத்து வைப்பதற்காக சோதனை செய்தார். அப்போது அதில் 5 பவுன் எடையில் கவரிங் நகை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த 2 பெண்களும் கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி கவரிங் செயினை வைத்துவிட்டு 5 பவுன் தங்க செயினை திருடி சென்றது தெரியவந்தது.

இதை அறிந்த மேலாளர் சிவக்குமார் பெரியகடைவீதி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை  கைப்பற்றி ஆய்வு செய்தனர்.