குபேரனின் புதல்வர்களே வழிபட்ட ஆலயம் எது தெரியுமா?

குபேரனின் புதல்வர்களே வழிபட்ட ஆலயம் எது தெரியுமா?

செல்வம் செழிக்க வேண்டுமானால் எல்லோரும் குபேரனைத்தான் வழிபடுவார்கள். ஆனால் குபேரனின் புதல்வர்கள் வணங்கிய ஆலயம் ஒன்று திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயத்தை பற்றி பார்ப்போம்

சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தைச் சுற்றி, உயரமான மதில் சுவர்கள் உள்ளன. மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் முன் உள்ள முகப்பைக் கடந்ததும் நீண்ட நடைபாதையும், அடுத்து இன்னொரு முகப்பும் உள்ளது.

அதையடுத்து அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் உள்ளன. நந்தியும் பீடமும் மகாமண்டபத்தின் நடுவே அமைந்திருக்கிறது. அடுத்துள்ள அர்த்த மண்டபம் காணப்படுகிறது. கருவறையில் இறைவன் சுந்தரேஸ் வரர் லிங்கத்திருமேனியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஐந்தடி உயரத்தில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் இறைவன் வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

ஆம். இத்தல இறைவனின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் ஆனது. எனவே இத்தல லிங்கம் ‘மரகத லிங்கம்’ என்றே அழைக்கப்படுகிறது. அர்ச்சகர் கற்பூர தீபாரதனை காட்டும் போது அந்த ஒளி இறைவனின் திருமேனியில் பட்டு, இறைவன் திருமேனி பளபளவென ஜொலிக்கும். இந்த அழகைக் கண்டு நம் மனம் வியந்து பக்திப் பரவசப் படுவதை தவிர்க்க இயலாது. அந்த கரும்பச்சை மரகத மேனியால் ஆன மரகத லிங்கத்தின் முன் நின்று நாம் தரிசனம் செய்யும் போது மெல்லிய அதிர்வலைகள் நம் மனதிற்குள் ஏற்படுவதை நம்மால் நிச்சயம் உணர முடியும்.

மகா மண்டபத்தின் இடதுபுறம் இறைவி மீனாட்சி அம்மனின் சன்னிதி உள்ளது. முன் கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் கொண்டு, கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்து நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள் அன்னை மீனாட்சி.

மகா மண்டபத்தில் இருந்து இறைவனையும், இறைவியையும் நாம் ஒரு சேர தரிசிக்கலாம்

Leave a Reply