கி.வீரமணிக்கு பிரபல நடிகர் கடும் கண்டனம்

கி.வீரமணிக்கு பிரபல நடிகர் கடும் கண்டனம்

சமீபத்தில் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய கி.வீரமணிக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவின் குணசித்திர நடிகர் ராஜ்கிரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், கி.வீரமணிக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

கி.வீரமணி ஐயா அவர்களுக்கு,

கடவுள் இல்லை என்பது,
உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம்…

கடவுள் உண்டு என்பது,
எங்கள் நம்பிக்கை.

மதங்கள் பலவாக இருந்தாலும்,
அவை அனைத்தின் குறிக்கோளும் ஒன்றே…
அது,
மனிதனை மேன்மைப்படுத்துவது.

அன்பும், மனித நேயமும் தான்,
மனிதனை மேன்மைப்படுத்தும்.

அதைத்தான் எல்லா மதங்களும்
போதிக்கின்றன…

அந்த போதனைகளை,
ஒவ்வொரு மதமும்
ஒவ்வொரு விதமாகச்செய்கிறது…

அந்த வகையில்,
இந்து மதம்,
ராமர் பெருமானையும்,
கிருஷ்ணர் பெருமானையும்,
ஆஞ்சநெயர் பெருமானையும்,
சிவ பெருமானையும், பார்வதித்தாயையும்,
விநாயகப்பெருமானையும்,
முருகப்பெருமானையும்,
அவதார தெய்வங்களாக
வழிபடச்சொல்வதன் மூலம்,

மனிதனை மேன்மைப்படுத்தும்
போதனைகளைச்செய்கிறது…

இந்த அவதார தெய்வங்கள் மூலம்
சொல்லப்படும் அனைத்து செய்திகளும்
வாழ்க்கைத்தத்துவங்கள்…
அதற்குள் ஊடுருவி பார்த்தால் தான்,
உண்மைகள் புரியும்.

இந்த அடிப்படையை புரிந்து கொள்வதற்கு, நீங்கள் நிறைய படித்து,
தெளிய வேண்டியதிருக்கும்…

எல்லா மத தத்துவங்களையும்
கசடற கற்றுத்தெளியாமல்,
“கடவுள் இல்லை” என்று
இரண்டு வார்த்தைகளில்
சொல்லி விட்டுப்போய்விட முடியாது…

கற்றுத்தெளிய,
அரசியல்வாதிகளுக்கு நேரமும் இருக்காது…

ஐயா பெரியார், மதங்களின் பெயரால்
நடக்கும் அக்கிரமங்களை ஒழிப்பதற்கு
வேறு வழியே இல்லாமல் தான்,
கடவுள் மறுப்பு கொள்கையை
கையிலெடுத்தாரே தவிர,
கடவுள் நம்பிக்கை இல்லை
என்பதற்காக அல்ல, என்பது என் கருத்து.

அவருக்கு கடவுள் நம்பிக்கை
இல்லாமல் இருந்திருந்தால்,
சாகும் வரை, “ராமசாமி” என்ற பெயரை
தூக்கிச்சுமந்திருக்க மாட்டார்…

“கடவுள் நம்பிக்கை இருக்கு, இல்லை”
என்பதை விட்டு விடுவோம்…

பிறர் மனதை நோகச்செய்வதும்,
பிறர் மத நம்பிக்கைகளை காயப்படுத்துவதும், பகுத்தறிவாகுமா…?

பகுத்தறிவின் உச்சக்கட்ட மேம்பாடு,
அன்பும், மனித நேயமுமாகவே இருக்கும்.

Leave a Reply