கடந்த மாதம் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து டெல்டா பகுதி மாணவர்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததால் வரும் பிப்ரவரியில் நடத்த திட்டமிட்டிருக்கும் குரூப் 2 தேர்வை மே மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறுவதாக இருந்த குரூப்-2 முதன்மைத் தேர்வுகளை மூன்று மாதங்கள் முன்பாக, வரும் பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத காவிரி டெல்டா மாணவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களை கடந்த நவம்பர் 16-ந்தேதி தாக்கிய கஜா புயல் அப்பகுதிகளை சிதைத்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். அத்துடன் போட்டித்தேர்வுகளுக்கு படிப்பதற்காக மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமாகிவிட்டன. அவர்களால் உடனடியாக போட்டித்தேர்வுக்கு தயாராக முடியாது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இதே நிலைமை தான் காணப்படுகிறது.

குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக மே மாதத்தில் நடத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே மே மாதத்தில் தேர்வு நடத்த பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

Leave a Reply