ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோயில் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோயிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர்.

கோயில் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது. கோயிலின் நுழைவு வாயிலில் காசி பிள்ளையார் என்ற பெயரில் விநாயகர் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில், மாடக் கோயில் வகையைச் சார்ந்ததாகும்.

மாடக்கோயில் வரலாறு

திருவானைக்காவலில் சிலந்தி, யானை சம்புலிங்கப் பெருமானை வழிபட்டன. யானை காவிரியிலிருந்து நீர் கொண்டு வந்து சம்புலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கமாக இருந்துவந்தது. சிலந்தியும் கூடுகட்டி வழிப்பட்டது. யானை அபிஷேகம் செய்யும்போது அந்தக் கூட்டை கலைத்துவிட்டது. இதனால் சினமடைந்த சிலந்தி யானையின் துதிக்கையினுள் நுழைந்தது. இதனால் யானையும் சிலந்தியும் இறந்துவிட்டன. இதில் யானைக்கு மோட்சமும், சிலந்திக்கு மறு பிறவியும் கிடைத்தன.

சிலந்தியின் மறுபிறவியாகக் கோச்செங்கணான் என்ற சோழன் மன்னனாகப் பிறந்தான். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். எழுபத்து இரண்டு மாடக்கோயில்கள் கட்டினார். யானையால் ஏற முடியாத வகையில் மாடக் கோயில்கள் அமைக்கப்பட்டன. அதில் திருநல்லூர் பெருங்கோயிலாகும். இக்கோயிலில் நவக்கிரகம் கிடையாது. கைலாய மலைக்கு நிகரான கோயில் இது என்கின்றனர்.

இக்கோயிலில்தான் மூலவர் ஐந்து நிறங்களில் மாறி மாறிக் காட்சியளிக்கிறார். தாமிர, இளஞ்சிவப்பு, உருக்கிய தங்கம், நவரத்தினப் பச்சை மற்றும் இன்னதென்று கூற இயலாத நிறங்களில் காட்சி அளிக்கிறார். இந்த மூல லிங்கம் இன்ன பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூற இயலாது. சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது திருமண தோஷப் பரிகாரத் தலமாகும். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு கல்யாண சுந்தரரேஸ்வரரையும், கிரிசுந்தரியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் மிக விரைவில் திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்.

இத்திருநல்லூர் திருநாவுகரசருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை அளித்த தலமாகும். பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சடாரி வைக்கும் வழக்கம் உண்டு. சிவாலயங்களில் இவ்வழக்கம் இல்லை. ஆனால் இத்திருநல்லூர் திருக்கோயிலில் சிவபெருமானது திருவடி பதிக்கப்பெற்ற முடி ஒன்றை தரிசனம் செய்ய வருகிறவர்களின் தலையில் வைக்கும் வழக்கம் இன்றும் இருந்துவருகிறது. இது பாடல்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு சக்தியாய் அருள்பாலிக்கும் அம்பிகை கிரிசுந்தரி, திருமலைச்சொக்கி என்ற திருநாமத்துடன் பேரழகுடன் அருள்பாலிக்கிறார்.

அமரநீதி நாயனார்

இவர் இத்திருநல்லூருக்கு வந்து மடம் ஒன்று அமைத்துத் தங்கி, இங்கு வரும் அடியவர்க்கு உணவு அளித்துவந்தார். அப்பொழுது ஒரு நாள் நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரப் பெருமான் பிரம்மச்சாரி உருவில் கையில் தண்டும், கோவணமும் உடையவராய் இவரது மடத்தை அடைந்தார்.

தாம் நதியில் நீராடி வருவதாகவும், தன்னிடமிருந்த ஒரு கோவணத்தை பத்திரமாக வைத்துகொள்ளுமாறும் சொல்லிவிட்டு சென்றவர், அந்தக் கோவணத்தை மறையச் செய்தார். நீராடிவிட்டு வந்து பிரம்மச்சாரி கோவணத்தைக் கேட்க, அமரநீதி நாயனார் வைத்த இடத்தில் கோவணம் காணாது திகைத்தார். பதிலாக வேறொரு கோவணத்தை ஏற்குமாறு கூறினார்.

ஆனால் பிரம்மச்சாரி மறுத்து தன் கோவணத்தின் எடைக்குக் கோவணம் அளிக்குமாறு கூறினார். அமரநீதி நாயனார் தன்னிடமிருந்து அனைத்துக் கோவணங்களையும் தராசு தட்டில் வைத்தும் தராசு தட்டு நேர் நிற்கவில்லை. பின் தன் மனைவி, மகவுடன் தானும் தராசு தட்டில் ஏறி நிற்க தராசு தட்டு சமமாயிற்று. பின் பிரம்மச்சாரி உருமாறி உமாபதியாகக் காட்சியளித்து அமரநீதி நாயனாரை அவர் மனைவி, மகவுடன் திருக்கைலாயத்துக்கு அழைத்துக்கொண்டார் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.

இது மும்மூர்த்திகளும் வழிபட்ட தலமாகும். மகாவிஷ்ணு இரணியனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக, இத்திருக்கோயிலில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டார் எனத் தல புராணம் கூறுகிறது.

அஷ்டபுஜ மகாகாளி

இங்கு எட்டுக் கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் மகாகாளி. குழந்தை வரம் வேண்டுவோர் படியில் நெய் மெழுகி கோலமிட்டு வணங்கிச் சென்றால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இக்காளியை அகஸ்தியர், காகபுஜண்டர் ஆகியோர் பூஜித்தனர்.

தல வரலாறு

சிவபெருமானின் திருமணக் காட்சியை காண்பதற்காக பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கைலாய மலைக்குச் சென்றன. அப்பொழுது பூமி வடக்கே பள்ளமாகவும், தெற்கே உயரமாகவும் ஆனது. சிவபெருமான் அகஸ்தியரிடம் தெற்கே சென்று சமப்படுத்தும்படி கூறினார். தென்னகம் வந்த அகத்தியர் நல்லூரில் இருந்தபடி, எனக்கு சிவபெருமானின் திருமணக் காட்சியை காண முடியாமல் போய்விட்டதென்று வருந்தினார். அப்போது சிவபெருமான் திருமணக் கோலத்தில் அகஸ்தியருக்குக் காட்சி கொடுத்தார் என்கிறது சிவ புராணம். அத்திருமணக் கோலம் மூலவரின் பின்புறம் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.