ஈரோட்டில் மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு ,ஈரோடு தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தம்.

ஈரோட்டில் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை தானம் என்ற பெயரில் கரு முட்டை விற்பனை செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட சிறப்பு போலீஸ் குழுவினர் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக சிறுமியின் தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி என்ற பெண், சிறுமிக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஜான் என்பவர் என 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தனியார் மருத்துவமனையை தமிழக அரசு சீல் வைத்தது.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டதையடுத்து சீல் அகற்ற கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கம் போல் மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இதை விசாரித்த கோர்ட்டு நேற்று மீண்டும் சீல் வைக்க உத்தரவிட்டது.
இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் டாக்டர்கள் ராஜா, அபுல்ஹாசன் ஆகியோர் கூறியதாவது:-
40 ஆண்டுகளாக இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். திடீரென்று சீல் வைக்கப்பட்டால் இதில் சிகிச்சை பெற்றவர்கள் எங்கு செல்வார்கள்.

பல்துறை மருத்துவமனையாக உள்ள நிலையில், ஒரு பிரிவில் தவறு நடந்ததாக கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த மருத்துவமனைக்கு சீல் வைப்பது என்பது ஏற்புடையது அல்ல.

மேலும் கோர்ட்டு தீர்ப்பு நகல் கையில் கிடைக்காத நிலையில், அவசரமாக ஒட்டுமொத்த மருத்துவமனைக்கு சீல் வைப்பது தவறான நடவடிக்கையாகும்.