shadow

ஆஞ்சநேயரிடம் மனம் உருக, உருக நம்மை பிடித்த தோஷங்கள், கரைந்தோடிவிடும்.

சில ஆலயங்களில் மூலவரை விட சன்னதியில் உள்ள இறைவன் மக்களிடம் அதிகப்படியான வழிபாடுகளை பெறுபவராக இருப்பார். அதற்குகாரணம் அந்த இறைமூர்த்தம் பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் வழங்கும் அருள்கடலாகத் திகழ்வார்.

அந்த சன்னதி அமையப் பெற்றதன் பின்னணியில் உள்ள புராண நிகழ்வு கூட மக்களை ஈர்ப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அந்த வகையில் வைணவத்தலங்களில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி மக்கள் மிகவும் விரும்பி வழிபாடு செய்யும் சன்னதியாக திகழ்கின்றன.

கலியுக்தில் கண்கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். ‘சர்வமங்கள கார்யானு கூலம் ‘ என்று ஆஞ்சநேயர் வழிபாட்டின் பலனைக் குறிப்பிடுவார்கள்.

அதாவது தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தன்னிடம் உள்ள எல்லா ஆற்றலையும் கொடுத்து மனதில் வலிமையை ஏற்படுத்துவார் என்பது ஆஞ்சநேய வழிபாட்டின் ஐதீகமாகும். அவர் வாயுவின் புத்திரர் என்பதால் அவர் காற்றோடு காற்றாக கலந்து, எங்கும் நிறைந்து நம்மை காப்பதாக நம்புகிறார்கள்.

பலவித தோற்றங்களில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர், தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்று வகைகளிலும் வரப்பிரசாதமாக இருந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.சேவை செய்வதற்காகவே அவதாரம் எடுத்தவர் ஆஞ்சநேயர். மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த போது, அவருக்கு சேவை செய்வதையே தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு ஆஞ்சநேயர் வாழ்ந்தார்.

இதனால் ராமபிரானுக்கு எங்கெங்கு ஆலயம் உள்ளதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைப்பட்டுள்ளது இவை தவிர ஆஞ்சநேயருக்கு என்றே தனியாக ஆலயங்களும் உண்டு. தென் இந்தியாவை விட, வட இந்தியாவில்தான் ஆஞ்சநேயருக்கு அதிகமான கோவில்கள் உள்ளன.

ராம அவதாரம் நிறைவு பெற்றுவிட்ட போதிலும் ஆஞ்சநேயர் இன்னமும் சிரஞ்சீவியாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அதனால் தான் ராமாயண சொற்பொழிவுகள், ராம கீர்த்தனம் ஆகியவை எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் ஆஞ்சநேயர் அமர்ந்து ஸ்ரீராம தியானத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்கிறார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ராம நாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கு நிச்சயம் ஆஞ்சநேயர் இருப்பார். அந்த வகையில் யார் ஒருவர் ராமநாமத்தை ஜெபிக்கிறார்களோ, அவர்களிடம் ஆஞ்சநேயர் நெருங்கிவிடுவார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இறை அவதாரங்களில் ஆஞ்சநேயருக்கு மட்டுமே இந்த சிறப்பு உண்டு. எனவே வைணவத் தலங்களுக்கு வழிபாடு செய்யச்செல்லும் போது, மறக்காமல் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் அர்த்தம் பொதிந்துள்ளது. அந்த தர்ப்பயத்தை அறிந்து, உணர்ந்து நாம் ஆஞ்ச நேயரை வழிபாடு செய்தல் வேண்டும்.

பெரும்பாலும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. எப்போதும் ராமருக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு களைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உளுந்து தானியத்தில் அஞ்சனாதேவி வடை தயாரித்து கொடுத்தாள். இதனால் தான் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.

வெற்றிலை மாலை வழிபாடு, வெண்ணெய் காப்பு அலங்காரம் ஆகியவையும் பக்தர்களால் ஆஞ்சநேயருக்கு விரும்பி செய்யப்படுகிறது. இலங்கை அசோகவனத்தில் தன்னை சந்திக்க வந்த அனுமனை வாழ்த்தி அருகில் இருந்த வெற்றிலையைப்பறித்து சீதை மாலையாக அணிவித்தார். அன்று முதல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது வழக்கமாகி விட்டது.

அதுபோல ராமரின் ஆயுள் பலத்துக்காக நெற்றியில் செந்தூரம் பூசுவதாக சீதாதேவி கூறியதை கேட்ட ஆஞ்சநேயர், ‘என் பிரபு ராமனின் ஆயுள் கூடுமென்றால் நானும் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொள்வேன்’ என்று பூசிக்கொண்டார். இதில் இருந்தே ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.

சனி, செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீராமஜெயம் கூறி ஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

ஆஞ்சநேயருக்கு வாலில் தான் சக்தி அதிகம் என்பதால் வாலில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து 48 நாட்கள் வழிபாடு செய்தால் உரிய பலனை பெறலாம். இது நவக்கிரக வழிபாட்டுக்கு நிகரானது.

மனதில் தாங்க முடியாத அளவுக்கு வேதனை உள்ளதா? ஆஞ்சநேயரின் சிறப்புகளை கூறும் சுந்தர காண்டம் படியுங்கள். துன்பங்கள் தூசியாக பறந்தோடி விடும். அவரை நினைத்தாலே புத்தி வரும், பக்தி வரும், புகழ் வரும், செல்வம் வரும், மன உறுதி வரும், வீரம் வரும்.அனைத்துக்கும் மேலாக அவர் கடும் பிரம்மச்சார்யத்தை கடை பிடிப்பதால் நம் மனதில் ஒரு நொடி கூட தேவை இல்லாத காம உணர்வு வரவே வராது. ஆஞ்சநேய விரதம் இருந்தால், குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கி வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே நட்பு அதிகரிக்கும். இதன் மூலம் குபேரனுக்கு இணையான வாழ்வை பெறலாம்.

தினமும் காலை அருகில் உள்ள பெருமாள் ஆலயத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டு, உங்கள் பணிகளை செய்து வந்தால் வெற்றி மீது வெற்றி வரும். 13 முடிச்சுள்ள அனுமன் விரத கயிறை கையில் கட்டிக் கொண்டால் உங்களது எல்லா முயற்சிகளும் இடையூறு இல்லாமல் நிறைவேறும்.

ஆஞ்சநேயரின் சன்னதி முன்பு நின்று, அவரது மூல மந்திரத்தை 9 தடவை சொல்லி வழிபட்டால் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். கடுமையான வியாதிகள் குணமாகும்.

ஆஞ்சநேயரிடம் யார் ஒருவர் மனதை பறி கொடுக்கிறாரோ அவர் மனம் தெளிவடையும். அவரால் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். ஆஞ்சநேயரின் தீவிர பக்தராக மாறி விட்டால், ஆஞ்சநேயரின் முழு பலமும் அவருக்கு வந்து விடும் என்பது ஐதீகம்.

எனவே பெருமாள் ஆலயத்தில் வழிபாடு செய்யும் போது ஆஞ்சநேயரிடம் மனம் விட்டு பேசுங்கள். ‘யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே! கருணைக் கடலே! பிரபோ… என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி தந்து சாதித்து தாருங்கள்’ என்று கேளுங்கள்.

ஆஞ்சநேயர் பணிவின் அணிகலனாகவும், ராஜதந்திரத்தில் சாமர்த்திய சாலியாகவும், வாக்கு சாதூர்யத்தில் வல்லவராகவும், வீரத்தில் நிகர் இல்லாதவராகவும், விளங்கி வருகிறார். அவரை வழிபட்டால் இத்தனை சிறப்புகளும் நமக்கும் நிச்சயம் வந்துசேரும்.