shadow

அளவுக்கு மீறினால் மாத்திரையும் நஞ்சு!

பாலிபார்மசி’ (Polypharmacy -அதிக மாத்திரைகளை உட்கொள்ளுதல்), `செல்ஃப் மெடிக்கேஷன்’ (சுய மருத்துவம்), `ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்’..! இந்த மூன்று பிரச்னைகளும் இன்றைய மருத்துவ உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக முன்னிற்பவை. நோய்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டும்தான் இந்த பிரச்னைகளுக்கான முக்கியக் காரணமா? `வள‌ர்ந்த நாடுகளில் Rx (மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மட்டும்) ம‌திப்பீடு உள்ள மருந்துகள் பலவும் இந்தியாவில் ஓ.டி.சி பிரிவில் (Over-the-Counter – மருந்துச் சீட்டின்றி) மருந்தகங்களிலேயே எளிதாகக் கிடைப்பதும், மருந்துகள் பற்றிய போதுமான விழிப்புஉணர்வு இல்லாமல், தவறான மருந்து எடுத்துக்கொள்ளும் முறையும்தான் இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணங்கள்’ என்கின்றன சமீபத்திய மருத்துவ ஆய்வுகள்.

சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்வதைப் போல மாறி வருகிறது, மருந்தகங்களில் இன்று மாத்திரைகள் வாங்கும் கலாசாரம். காய்ச்சலுக்கு பாரசிட்டமால், கை கால் வலிக்கு பெயின் கில்லர், அசதிக்கு சத்து மாத்திரைகள் தொடங்கி, சாதாரண சளிக்கே தீவிரமான ஆன்டி பயாட்டிக்ஸ் எனக் கையில் கிடைப்பதையெல்லாம் வாயில் போட்டுக்கொள்வது சரிதானா? அதிகமான மாத்திரைகளை உட்கொள்வதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும், அவை ஏன் ஏற்படுகின்றன என்பன பற்றி சற்றே ஆழ்ந்து யோசிக்கவேண்டிய நேரம் இது.

இந்தியாவில் 50 சதவிகிதத்துக்கும் மேலான பெண்கள் `ஆர்த்ரைட்டிஸ்’ என்கிற மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களில் 10 சதவிகிதம் பேர்கூட அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை. உடம்புவலி எனக் கூறி வலி நிவாரணிகளுக்கு அடிமையாகி, இறுதியில் மருத்துவமனைகளில் மூட்டுவலியுடன் சிறுநீரகச் செயலிழப்புக்கும் சேர்த்து அனுமதிக்கப் படுபவர்கள்தான் அதிகம். இம்மாதிரியான மருத்துவ அறியாமை நீங்க வேண்டுமானால், அதிகமான மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளை அறிவதோடு அதற்கான காரணங்களையும் அறிவதுதான் சரியான தீர்வாக அமையும்.

காய்ச்சல் – பாராசிட்டமால்

மிக அதிகமான காய்ச்சல் உள்ள நோயாளிக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 4,000 மி.கி வரை இந்த மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். ஆனால், மருத்துவர்கள் அதிகபட்சமாக 2,000 மி.கி வரையிலும்கூட பரிந்துரைப்பார்கள். அதாவது, 650 அல்லது 500 மில்லி கிராம்களில் கிடைக்கும் இந்த மாத்திரையை அதிகமான காய்ச்சலின் போதும் மூன்று அல்லது நான்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலே போதுமானது என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில், அதிகபட்ச அளவு என்பது ஒவ்வொருவரின் உடலைப் பொறுத்தும் மாறுபடும். இந்த மாத்திரையை ஒரே நாளில் 4,000 மில்லி கிராமுக்கு அதிகமாக எடுக்கும்போதோ அல்லது தொடர்ச்சியாக எடுத்து வரும்போதோ பாராசிட்டமாலில் உள்ள `அசிட்டமினோஃபென்’ (Acetaminophen) என்ற வேதிப்பொருள் அதிகப்படியாக வளர்சிதை மாற்றம் அடைந்து கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருளாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆரம்பத்தில் பசியின்மை, வாந்தி, வியர்த்துப்போதல், கண்கள் மஞ்சள் நிறமாகுதலில் தொடங்கி இறுதியில் கல்லீரல் அழற்சியில் முடிந்துவிடும்.

வலி நிவாரணிகள்

உடலின் எந்த உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த உறுப்பில் ஏற்படும் வலிதான் நோயின் முதல் அறிகுறி. தலைவலி என்பது மைக்ரேன், கண்ணின் குறைபாடு, உயர் ரத்த அழுத்தம் இப்படி எதன் அறிகுறியாகவும் இருக்கலாம். நாம் எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் தற்காலிகமாக வலிக்கு நிவாரணத்தை அளித்து, மருத்துவ மனைக்குச் செல்வதை மறக்கச் செய்து, நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகின்றன. அதிக பட்சமாக மூன்று நாள்களுக்கு மேல் வலி நிவாரணிகளைப் பரிந்துரைக்காமல் தொடர்வலி இருக்கும்போது நோயாளிகளுக்கு அடுத்தகட்டப் பரிசோதனையைப் பரிந்துரைப்பதும் இதனால்தான். இந்த வலி நிவாரணிகளை அதிக அள‌வில் உட்கொள்ளும்போது இவை உள்ளுறுப்புகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். அதிகப்படியான வலி நிவாரணிகள் சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்து வதால், சிறுநீரகம் செயலிழப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதயப் பாதிப்புக்காக ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்பவர்கள், வலி நிவாரணிகளை அதிக அளவில் எடுக்கும்போது, அவை ஆஸ்பிரினின் செயல்பாட்டைக் குறையச்செய்து ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

சாதாரண சளிக்கு ஆன்டிபயாட்டிக்ஸ்

சளி, சாதாரணமானதாகவும் இருக்கலாம் அல்லது நுரையீரல் தொற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். சாதாரண சளியாக இருந்தால், எந்தவித மாத்திரைகளும் இன்றி ஒரே வாரத்தில் தானாகவே குணமாகிவிடும். ஆனால், கடைகளில் சென்று சளி, இருமல் எனச் சொல்லி ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை வாங்கிப் போடுவது பிரச்னையை அதிகமாக்கும். மருந்துக் கடைகளில் கொடுக்கப்படும் ஆன்டி பாக்டீரியல் மாத்திரைகள், வைரஸை அழிப்பதில்லை. மாறாக, நமது உடலில் இருக்கும் தேவையான சில நுண்ணுயிரிகளை அழித்து, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கச் செய்து விடுகின்றன. அதிக நாள்கள் சளிப் பிரச்னை நீடித்தால், மருத்துவமனைக்குச் சென்று கிருமிக்கான பரிசோதனையைச் செய்து அதற்கேற்ற ஆன்டிபயாட்டிக்ஸ் எடுத்துக் கொள்வதுதான் சரி. ஆன்டிபயாட்டிக்ஸ் எடுக்கும்போது ஆன்டிபயாட்டிக்ஸ் ரெசிஸ்டன்ஸ் உருவாகி, அந்த மருந்தானது நமது உடலுக்கு அவசியமாகத் தேவைப்படும் நேரத்தில் இந்த மாத்திரைகளால் செயல்பட முடியாமல் போகலாம்.

ஆன்டிஹிஸ்டமைன் (antihistamine) மருந்துகள்

சளிக்குக் கொடுக்கப்படும் டானிக், அலெர்ஜிக்கு அளிக்கப்படும் மாத்திரை அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். இதில் இருக்கும் முக்கியப் பிரச்னை இந்த மருந்துகளுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தும் தன்மை இருப்பதுதான். குழந்தைகளுக்கு சளிக்கு மட்டுமின்றி தூங்குவதற்காகவும் தற்போது இந்த மருந்துகள் அதிக அளவில் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றன. சிறு வயதிலேயே குழந்தைக்கு ஒரு போதையை ஏற்படுத்துவது போன்றதுதான் இதுவும். ஆன்டி ஹிஸ்டமைன் மருந்துகளுக்கு உடலின் சுரப்பைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. இந்த மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது வாயில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், குழந்தைகளுக்கு ஒருவித மந்தத்தன்மையையும் ஏற்படுத்திவிடும்.

அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள்

தூக்கப் பிரச்னைகளுக்காக மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தூக்க மாத்திரையைப் பயன்படுத்துகிறவர்களைத் தவிர, மற்றவர்கள் கண்டிப்பாக தூக்க மாத்திரைகளை உபயோகிக்கக் கூடாது. இவை, நமது மூளையின் செயல்பாட்டை அமைதிப்படுத்தி, கட்டுப்படுத்தக்கூடியவை. தேவையின்றி இவற்றை உட்கொள்ளும்போது ஒருவித போதையை ஏற்படுவதோடு, மனஅழுத்தம் போன்ற பிரச்னையும் ஏற்படும்.

கார்டிகோஸ்டீராய்ட்ஸ் (Corticosteroids)

இவை ஆஸ்துமா நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுபவை. அதிக நாட்களுக்கு கார்டிகோஸ்டீராய்டு மருந்தைப் பயன்படுத்தும் ஆஸ்துமா நோயாளிகள், மாத்திரைகளைவிட இன்ஹேலர்களைப் பயன்படுத்துவதுதான் நல்லது. அதிகஅளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளில் கார்டி கோஸ்டீராய்டுகளுக்கு முக்கிய இடம் உண்டு. மாத்திரைகளாக எடுக்கும்போது, ஸ்டீராய்டு உடலில் அதிக அளவில் உறிஞ்சப்படுவதால் சர்க்கரைநோய், நோய் எதிர்ப்புச் சக்திக் குறைபாடு, கண்களில் உயர் அழுத்தம் (Glaucoma) போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Leave a Reply