shadow

அனைவருக்கும் வீடு சாத்தியமானது எப்படி?
singapore
அமோஸ் யீ என்ற 16 வயது சிங்கப்பூர் சிறுவன் 2015-ல் நான்கு வார சிறைத்தண்டனை பெறுகிறான். காரணம் என்ன தெரியுமா? லீ குவான் யூவை விமர்சித்ததுதான்.

“மேலோட்டமாகப் பார்த்தால் அவர் ஒரு வெற்றிகரமான மனிதர் போலத் தென்படலாம். சிறிய துறைமுகமாக இருந்த சிங்கப்பூரைத் துடிப்புமிக்க ஒரு மாநகராக, விண்ணைத் தொடும் கட்டிடங்கள், சூதாட்ட விடுதிகள் நிரம்பியதாக அவர் மாற்றினார்.

மார்கரெட் தாட்சர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலருக்கும் லீ குவான் யூவை மிகவும் பிடித்திருந்தது. வெளிநாட்டுக்காரர்கள், கோடீஸ்வரர்கள் பலரும் இங்கே முதலீடு செய்ய ஆசைப்படுகிறார்கள். ஆனால், ஆழமாகப் பார்த்தால் லீ குவான் யூவின் சிங்கப்பூரின் உண்மையான முகம் உங்களுக்குத் தெரியும்.

பணமும் அந்தஸ்தும்தான் சந்தோஷம் என்று லீ குவான் யூ உண்மையிலேயே நம்பினார். அது எவ்வளவு மாயை என்பதை அவர் புரிந்துகொள்ளத் தவறியது அப்பட்டமாகத் தெரிந்தது. உலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றாக ஆனோம், கூடவே உலகத்திலேயே மிகவும் மனஅழுத்தம் கொண்டவர்களாகவும் ஆனோம்” என்று அந்தச் சிறுவன் எழுதியிருந்தான்.

சீன வம்சாவளியினரான லீ குவான் யூ நான்காம் தலைமுறை சிங்கப்பூர்வாசி. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் லண்டனின் பொருளாதாரக் கல்லூரியிலும் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தில் படித்திருந்தாலும் ஆங்கிலேயர் மீது வழிபாட்டுணர்வு அற்றவர். “அவர்கள் ஏன் நம்மை ஆள வேண்டும். நம்மை விட ஒன்றும் உயர்ந்தவர்கள் அல்லவே அவர்கள்” என்று அவர் பின்னாளில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்குப் பகுதியளவு சுயாட்சியை பிரிட்டன் வழங்கிய பிறகு 1959-ல் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டுசேர்ந்து பிஏபி என்ற கூட்டணியை அமைத்து வெற்றி பெற்றார் லீ குவான் யூ. இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசப்பட்டதில் பொருளாதாரத்தில் ஆரம்பித்து எல்லாமே தரைமட்டமாகியிருந்தது.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு லீ குவான் யூவின் பிஏபி ஒரு புத்தம் புதிய, நவீன, சுதந்திர நாட்டை மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு நகரமாக சிங்கப்பூரை உருவாக்கவும் முடிவெடுத்தது.

“புத்திக்கூர்மையும் உத்வேகமும் மிகுந்தவர். சற்றே முன்கோபியும் கூட. தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதார மையமாக சிங்கப்பூரை மாற்றும் கனவு கொண்டவர்” என்று நியூயார்க்கரின் ராபர்ட் ஷாப்லென் 1960-களில் லீ குவான் யூவைப் பற்றிச் சொல்கிறார். அதே நேரத்தில் ஷாப்லென் என்பவரோ, “சிங்கப்பூரின், லீயின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று ஆக்கபூர்வமான எதிர்த்தரப்பு ஏதும் இல்லாமல்போனதே” என்கிறார். கடைசிவரை எதிர்த் தரப்பையும் எதிர்ப்பையும் ஒடுக்கிக் கொண்டே லீ குவான் யூ இருந்தார்.

மாபெரும் வீட்டு வசதித் திட்டம்

சிங்கப்பூர் காலனியின் நிறுவனரான சர் ஸ்டாம்ஃபோர்டு ரேஃபிள்ஸ் 1819-ல் சிங்கப்பூரை ‘கீழை உலகின் மான்செஸ்டர்’ ஆக ஆக்கக் கனவு கண்டார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அது செழித்து வளர்ந்தது. எனினும் தொடர்ச்சியாகப் பல நாட்டு மக்களும் அங்கே புலம்பெயர்ந்து வந்ததால் அது தள்ளாடியது.

ஆபத்தான வளர்ச்சி என்றே அந்த வளர்ச்சியைச் சொல்ல வேண்டும். ஆகவே, முறையான நகரமைப்புத் திட்டத்தை ரேஃபிள்ஸ் முன்வைத்தார். சதுரசதுரமாக வடிவமைக்கப்பட்ட தெருக்கள், வியாபார மையங்கள், இனவாரியாகப் பிரிக்கப்பட்ட குடியிருப்பு மாவட்டங்கள் என்று 1822-ல் சிங்கப்பூர் வடிவமைக்கப்பட்டது.

அப்படியும் சிங்கப்பூரின் வீட்டுவசதி முறை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தள்ளாடியது. அதாவது லீயின் ஆட்சியில் ‘வீட்டுவசதி மேம்பாட்டு வாரியம்’ வரும் வரை. 1960-ல் தேசிய மேம்பாட்டுக்கான அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தொடங்கப்பட்ட இந்த வாரியம் அதிவேகத்தில் முடுக்கிவிடப்பட்டது.

10-லிருந்து 15 மாடிகள் வரை கொண்ட கட்டிடங்களை உடனடியாகக் கட்ட ஆரம்பித்தார்கள். இந்த வாரியம் தொடங்கப்பட்ட முதல் ஐந்தாண்டுகளிலேயே 50,000-க்கும் மேற்பட்ட கட்டிடப் பிரிவுகளைக் கட்டிமுடித்தார்கள். அந்த வாரியம் தொடங்கப்பட்டதிலிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அடுக்ககங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

இப்படியாகச் சமூகக் குடியிருப்புகள் என்ற கருத்தாக்கத்தை வேறு எந்த நகரமும் முன்னெடுக்காத வகையில் சிங்கப்பூர் முன்னெடுத்தது. இன்று சிங்கப்பூரின் 80% மக்கள்தொகை வீட்டுவசதி வாரியத்தின் கட்டிடங்களிலேயே வசிக்கிறது. இந்தத் திட்டத்தை ‘சிங்கப்பூரின் அடையாளம்’ என்று வீட்டுவசதி வாரியம் பெருமையுடன் அறிவிக்கிறது.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படும்போது சிங்கப்பூரில் இருந்த 2,40,000 ஆக்கிரமிப்பாளர்களை என்ன செய்வது என்பது பெரும் பிரச்சினையாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் மலேசியாவிலிருந்து 1950-களில் புலம்பெயர்ந்த வர்கள். இதனால் ‘குடிசைகள் அகற்றும் திட்டம்’ ஒன்று மூர்க்கமாக முன்னெடுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து எதிர்ப்பும் எழுந்தது.

குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு வீடுகளைக் குறைந்த வாடகையிலும், பொது வைப்புநிதியின் உதவியைக் கொண்டும் ஒதுக்குவது என்பதை வீட்டுவசதி வாரியம் தனது முதன்மையான நடவடிக்கையாகக் கருதியது. ஆனாலும், ஆக்கிரமிப்பாளர்கள் இதற்கு உடனடியாக ஒத்துக்கொள்ளவில்லை.

1961-ல் பெரும் தீ விபத்தொன்று சேரிப் பகுதிகளில் நிகழ்ந்தது. இதனால் 4 பேர் கொல்லப் பட்டார்கள், 85 பேர் படுகாயம் அடைந்தார்கள், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடிழந்தார்கள். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் அவர்களை மறுகுடியமர்த்தியது. இரண்டே வாரத்தில் இந்தப் பணி செய்து முடிக்கப்பட்டது. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் புதுக்குடியிருப்பு கட்டப்பட்டது.

“சிங்கப்பூர் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இந்த வாரியம் தனது முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் தான் என்னவெல்லாம் செய்து முடிக்க வேண்டுமென்று திட்டமிட்டதோ அவை எல்லாவற்றையும் செய்து முடித்தது. அநேகமாக இதுபோன்று உலகில் வேறெந்த நாட்டிலும் நடந்ததில்லை” என்று சிங்கப்பூர் அரசின் 1965-ம் ஆண்டு விளம்பரம் ஒன்று கூறுகிறது. அந்த விளம்பரப் படத்தில் லீ குவான் யூவும் இடம்பெறுகிறார். வளர்ந்துகொண்டேயிருக்கும் கட்டிடங்களுக்கு மத்தியில் அவர் நிற்கிறார்.

விளம்பர வர்ணனையாளர் இப்படி முடிக்கிறார்: ‘சிங்கப்பூர் மக்கள் தங்கள் அரசிடமிருந்து உயர் தரத்தை எதிர்பார்க்கிறார்கள். கடினமாக உழைக்கத் தயாராக இருக்கும் அவர்கள் மேம்பட்ட திறன்களையுடையவர்கள். அவர்களைப் பொறுத்தவரை வானம்தான் எல்லை.’

லீ குவான் யூ ஆண்ட மூன்று தசாப்தங்களில் வீட்டுவசதிக் கட்டிடங்கள் 22,975 என்ற எண்ணிக்கையிலிருந்து 5,57,575-ஆக அதிகரித்தன. வெவ்வேறு இன மக்களைப் பிரித்துக் குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என்ற ரேஃபிள்ஸின் திட்டத்துக்கு மாறாக எல்லா இன மக்களும் கலந்திருக்கும் விதத்தில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. தனித்தனியாகப் பிரித்துவைக்கப்பட்டிருந்தால் இன மோதல்களின்போது குறிப்பிட்ட இனங்கள் பாதிக்கப் படும் என்பதால்தான் இந்தக் கலப்பு அமைப்பு.

அதேபோல் தனிநபர் வருமானமும் லீ குவான் யூ ஆட்சிக் காலத்தில் 15 மடங்கு அதிகரித்தது. வெளி வர்த்தகம் கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகரித்தது. குடிமக்களின் ஆயுட்காலம் 65 வயதிலிருந்து 74-ஆக அதிகரித்தது. மக்கள்தொகை 16 லட்சத்திலிருந்து 30 லட்சமாக அதிகரித்தது.

சிங்கப்பூர் இப்படிப் பெருவளர்ச்சி பெற்றாலும் அதன் ஜனநாயகக் கூறுகள் அடிவாங்கவே செய்தன என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதீதக் கட்டுப்பாடு, ஒழுங்கு, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினால் கொடுமையான தண்டனை, மாற்றுத் தரப்புகள் ஏதும் இல்லாத அரசியல் சூழல், அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தால் தண்டிக்கப்படுதல் என்று ஜனநாயகத்துக்கு எதிர்த் திசையில் சிங்கப்பூர் பயணித்துக்கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டப் படுகிறது. எனினும், அதன் கட்டமைப்புகள், முன்னேற்றம் போன்றவை உலகத்தினர் எல்லோராலும் வியந்தே பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *