அத்தியாவசியமாகிறதா மாற்று மணல்?

அத்தியாவசியமாகிறதா மாற்று மணல்?

தமிழகத்தில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்; மூன்று ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளுவது நிறுத்தப்படும்; தற்போது பயன்படுத்தும் மணலுக்கு மாற்றாக மாற்று மணலைப் பயன்படுத்த வேண்டும்” – இது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு. இந்த அறிவிப்பு ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களைக் கொஞ்சம் ஆட்டம் காண வைத்துள்ளது. இன்னொரு புறம் ‘ஆற்றில் மணல் அள்ளுவதை உடனே நிறுத்த வேண்டும்’ என்று சூழல் ஆர்வலர்களும் அரசை நெருக்குகிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சிக்கு ஆற்றை சுரண்டி எடுத்த மணலும் ஒரு காரணம் என்பதைப் பாமர மக்களும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். விளைவு, மாற்று மணலை நோக்கி எல்லோரும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது?

தமிழகத்தில் மணலின் தேவை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி யூனிட் மணல் தமிழகத்துக்குத் தேவைப்படுகிறது. வானளாவிய கட்டிடங்கள் கட்டுமானங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சென்னையில் மட்டும் தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 7ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரையிலான மணல் லோடுகள் தேவைப்படுகின்றன என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறன.

தமிழகத்தில் தேவை அதிகரிக்க அதிகரிக்க அள்ளப்படும் மணல் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னொரு புறம் கர்நாடகா, கேரளாவில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்ட பிறகு தமிழகத்திலிருந்து மணல் கடத்தல் கன ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகளின் இயற்கை வளமும் தொடர்ந்து அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. இதைத் தடுப்பதற்காகக் கூறப்படும் யோசனைதான் எம்-சாண்ட் (Manufactured Sand) எனப்படும் மாற்று மணல்.

செயற்கையாக இந்த மணலை உருவாக்கி பயன்படுத்தினால் ஆறுகளின் மணல் உபயோகம் குறையும். இதன் காரணமாக காவிரி, பாலாறு, தாமிரபரணி போன்ற தமிழக ஆறுகள் தப்பிக்கும் என்பது அரசின் யோசனை. மேலும் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் முன்னெடுக்கப்படும் கட்டுமான திட்டங்கள் மற்றும் வீடு கட்டித் தரும் திட்டங்களாலும் மணலின் தேவை முன்பைவிட இன்னும் அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களில் மணல் பற்றாக்குறை அதிகரிக்கும் அளவுக்கு மணல் தேவையும் அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் துறை தள்ளாடி வருவதாகக் கூறப்பட்டாலும் தமிழகத்தில் கட்டுமானத்துறையின் வேகம் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு ஆண்டும் கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது; தேவையும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் மாற்று மணல் அவசியத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

எம்-சாண்ட் எனப்படும் மாற்று மணல் எப்படி உருவாக்கப்படுகிறது? கருங்கற்களை உடைத்து இயந்திரங்கள் மூலம் அது பொடியாக்கி செயற்கையாக உருவாக்கப்படும் மணல்தான் எம்-சாண்ட். ஏற்கெனவே தமிழகத்தில் அரசு கட்டுமானங்களில் மாற்று மணல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் வீடு கட்டுவோரும், பில்டர்களும் மாற்று மணலை பயன்படுத்தி வரவே செய்கிறார்கள். இந்த மணல் தகுந்த அளவுகளில் தரமாகத் தயாரிக்கப்படுவதால், கட்டப்படும் கட்டிடங்களில் பிரச்சினை இல்லை என்றே பில்டர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், பூச்சு வேலைகளுக்கு மாற்று மணல் ஏற்றதாக இல்லை என்ற மாற்று கருத்தும் இல்லாமல் இல்லை. ஆனால், அதற்கும் மாற்று மணலில் தீர்வு இருக்கவே செய்கிறது. ஜல்லி தயாரிக்கும்போது கிடைக்கும் கிரஷர் தூசுகளைப் பூச்சுக்குப் பயன்படுத்த முடியும். ஆந்திரா, கர்நாடகா மற்றும் சில வட மாநிலங்களில் கிரஷர் தூசுகளைப் பூச்சுக்குப் பயன்படுத்தும் வழக்கம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. பூச்சுக்கு ஏற்றதாக இந்தத் தூசை சொல்கிறார்கள் இத்தொழிலில் உள்ளவர்கள். இதை கட்டுமானத் தொழிலில் நீண்ட நாட்களாக உள்ள தொழிலாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், மாற்று மணல் தொடர்ந்து கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ரியல் எஸ்டேட் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. தொடர்ந்துமாற்று மணல் சீராகக் கிடைக்கும்பட்சத்தில் வீடு கட்டுவோருக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்று நம்பலாம். தற்போதைய சூழலில் மாற்று மணலைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது.

செயற்கையாக இந்த மணலை உருவாக்கி பயன்படுத்தினால் ஆறுகளின் மணல் உபயோகம் குறையும். இதன் காரணமாக காவிரி, பாலாறு, தாமிரபரணி போன்ற தமிழக ஆறுகள் தப்பிக்கும் என்பது அரசின் யோசனை.

Leave a Reply

Your email address will not be published.