ஆஸ்திரேலிய அணியுடன் ஒரு டி20 மற்றும் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தியா , ஆஸ்திரேலிய அணிகளிடையே ஒரு டி20 மற்றும் 7 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளன. டி20 போட்டி ராஜ்கோட்டில் அக். 10ம் தேதியும், முதல் ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் அக். 13ம் தேதியும் நடக்கிறது.

டி20 மற்றும் முதல் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு, சென்னையில் நேற்று நடந்தது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர் வீரர்களைத் தேர்வு செய்தனர். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் நடந்த போட்டிகள் மற்றும் சேலஞ்சர் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய (கடைசி 6 இன்னிங்ஸ்: 123, 40, 61, 52, 84, 29) அனுபவ ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அவர் கடைசியாக இந்த ஆண்டு ஜன. 27ம் தேதி தர்மசாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கினார். அதன் பிறகு மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனுபவ தொடக்க வீரர்கள் வீரேந்திர சேவக், கவுதம் கம்பீர் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. சேலஞ்சர் டிராபி தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டும், இவர்கள் கணிசமாக ரன் குவித்து தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்க்கத் தவறிவிட்டனர். இங்கிலாந்தில் நடந்த மினி உலக கோப்பை தொடரில் விளையாடிய தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், முரளி விஜய், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக யுவராஜ், அம்பாதி ராயுடு, ஜெய்தேவ் உனத்காட், முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, வினய் குமார், அமித் மிஷ்ரா, அம்பாதி ராயுடு, முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்காட்.

Leave a Reply