shadow

May-31திரைப்படங்களில் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தும் காட்சி வரும்போது எல்லாம் எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு திரைத்துறையினர் மத்தியில் அதிருப்தி எழுந்தது. பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த உத்தரவை எதிர்த்து பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இதற்குத் தடைவிதித்து கடந்த மே 7-ம் தேதி தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். உலக புகையிலை இல்லா தினம் அனுசரிக்க   ப்படும் இந்த நேரத்தில், வந்திருக்கும் தீர்ப்பு குறிப்பிடத்தக்கது.

நலமான வாழ்வுக்கு பகையாகிப்போன, புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் ஆறு லட்சம் பேர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தாதவர்கள். அருகில் இருப்பவர் புகைத்து வெளியேவிட்ட புகையை சுவாசித்ததாலேயே நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். உலக அளவில் தவிர்க்கக்கூடிய மரணங்கள் நிகழக் காரணமாக இருப்பதில் முதல் இடத்தில் இருப்பது புகையிலைப் பொருட்கள்தான்.

இந்த ஆண்டு புகையிலை இல்லா தினம் வலியுறுத்தும் அம்சமே புகையிலைப் பொருட்கள் மீதான வரியை அதிகரித்து, பாதிப்பு மற்றும் இறப்பைப்  பெருமளவு குறைக்க வேண்டும் என்பதுதான்.

புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் டி.ராஜாவிடம் கேட்டோம். ‘புகையிலையில் உள்ள நிகோட்டின் என்ற ரசாயனம் அதைப் பயன்படுத்துபவர்களை அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும்போது அதில் உள்ள நிகோட்டின் மிக விரைவாக மூளைக்குச் சென்றதும், ‘நன்றாக இருக்கிறது’ என்ற உணர்வு ஏற்படுகிறது.

இந்தியாவில் புகையிலையை மெல்வது, புகையிலைப் பொருட்கள் கலந்த பான், மூக்குப்பொடி, பீடி, சிகரெட் என்று பல வகைகளில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது. சிகரெட் பிடிப்பது பாதிப்பதுடன், உங்களைச் சுற்றியுள்ள உறவுகள், நண்பர்களையும் பாதிக்கிறது. 90 சதவிகிதம் நுரையீரல் புற்றுநோய் வருவதற்குக் காரணம் சிகரெட் பழக்கம்தான். இதுதவிர, வாய், உதடு, தொண்டை, குரல் பெட்டி, உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புக்களையும் இது பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது சிகரெட் பழக்கம்.

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தி, எத்தனை வருடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. அவரவர் உடல் அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்து ஒரு சில வருடங்களில் இருந்து, 20-25 ஆண்டுகள் கழித்துகூட பாதிப்பு ஏற்படலாம். ஆனால், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது ஒரு சில நிமிடங்களில் இருந்தே பாதிப்பு விலகத் தொடங்கிவிடுகிறது. புகையிலைப் பொருட்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதை இன்றே, இப்போதே செய்வது நல்லது’ என்றார்.

”உயிரைக் குடிக்கும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதை விட்டொழிப்பது ஒன்றே நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது” என்ற டாக்டர் ராஜா,  

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மேற்கொள்ளவேண்டிய வழிகளைச் சொன்னார்.

”சிகரெட் புகைப்பது என்பது உடல் மற்றும் மனரீதியான பழக்கம். பலருக்கு சிகரெட் புகைப்பது என்பது ஒரு கட்டாயச் சடங்காகிவிட்டது. என்ன நேர்ந்தாலும் சிகரெட் பிடித்தே தீர வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.

புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டீர்களா? இன்றே அந்தப் பழக்கத்தை நிறுத்துங்கள். முடியாதவர்கள் இரண்டு வாரங்களுக்குள் ஒரு நாளைக் குறித்து அதில் இருந்து சிகரெட் பிடிப்பது இல்லை என்று உறுதிமொழி எடுங்கள்.

  உங்கள் குடும்பத்தினர், நண்பர்களிடம் இதைப்பற்றி பேசி, அவர்களின் முழு ஒத்துழைப்பை அளிக்கும்படி கேளுங்கள். மீண்டும் சிகரெட் பிடிக்காமல் இருக்க ஊக்கப்படுத்தும்படி சொல்லுங்கள்.

  சிகரெட் பிடிப்பவர்கள் முன்னால் நிற்காதீர்கள். பெட்டிக்கடை, டீ கடைகளின் முன்பு சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கும்போது நமக்கும் சிகரெட் பிடிக்கத் தூண்டும். இதுபோன்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

  நீங்கள் எப்போதும் பிஸியாக இருப்பதுபோல வைத்துக்கொள்ளுங்கள். வேறு வேலை இல்லாத நேரத்தில்தான் பெரும்பாலும் சிகரெட் புகைக்கத் தோன்றும். இதற்காக உடற்பயிற்சி செய்யுங்கள், சினிமாவுக்குச் செல்லுங்கள், எதையாவது எழுதுங்கள்.

  சிகரெட் பிடிக்கத் தூண்டும் லைட்டர் உள்ளிட்ட பொருட்களைத் தூர வீசுங்கள். சிகரெட் பிடிக்காத நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள். இது உங்களுக்கு அவர்கள் மத்தியில் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீக்கும்.

 சிகரெட் புகைப்பது தடை செய்யப்பட்ட, கண்காணிப்புக்கு உள்ள இடங்களுக்குச் செல்லுங்கள். சட்டத்துக்குப் பயந்தாவது சிகரெட் பிடிப்பதை நிறுத்துவீர்கள்.

 ஆரோக்கியமானதைச் சாப்பிடுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள்.

உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். அவர் நிகோட்டின் ரீபிளேஸ்மென்ட் தெரப்பி உள்ளிட்ட சில சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

உடலுக்குப் பகையாகும் புகை!

புகையிலைப் பழக்கத்தால் மட்டும் 20-ம் நூற்றாண்டில் 10 கோடி பேர் உயிரிழந்திருக்கின்றனர். புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கவில்லை என்றால், இந்த நூற்றாண்டில் மட்டும் 30 கோடி பேர் உயிரிழப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 10 லட்சம் பேர் புகையிலைப் பொருட்களால் உயிரிழக்கின்றனர்.

மாற்றல்ல இசிகரெட்!

இன்று சிகரெட் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் இ-சிகரெட் பயன்படுத்தலாம். இதனால் பாதிப்பு இல்லை என்ற வகையில் விளம்பரம் செய்யப்படுகிறது. புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் மிகக் குறைவாக உள்ளது என்று வேண்டுமானால் சொல்லாமே தவிர, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை இது தவிர்ப்பது இல்லை. மேலும், இ-சிகரெட் பழக்கத்துக்கு மாறியதால் புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள் என்று யாரும் இல்லை. இ-சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகையால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு இ-சிகரெட் ஒரு மாற்றல்ல. கத்தி போய் வாள் வந்த கதையாக இ-சிகரெட் மாறிவிடக் கூடாது.

 

அதிக வரி போட்டால்… ஆபத்து குறையும்!

புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க புகையிலைப் பொருட்கள் மீதான வரியை பல மடங்கு அதிகரிக்க வேண்டும். ஆனால்,  எடுத்த எடுப்பில் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்துவிட முடியாது. ஆனால், வரி விதிப்பை அதிகரிப்பதன் மூலம் புகையிலைப் பொருட்கள் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதற்கென ஒரு வரையறையை உருவாக்கியுள்ளது.  இதில், புகையிலைப் பொருட்கள் அதிகப் பயன்பாடு உள்ள நாடுகள், புகையிலைப் பொருட்கள் மீதான வரியைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதன் மூலம் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு பெருமளவு குறையும்.

விலை அதிகமாக இருக்கும்போது அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குறைந்த வருவாய் உள்ள பிரிவினர் மத்தியில் புகையிலைப் பொருட்கள் பயன்பாடு பெருமளவு குறைந்திருந்தது. 10 சதவிகிதம் வரி உயர்த்துவதன் மூலம் நான்கு சதவிகிதம் அளவுக்கு வரை புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறையும்.

Leave a Reply