அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் இந்திய பெண் துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, கை விலங்கிடப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இப்போது அவரை அமெரிக்க போலீசார் ஆடை அவிழ்த்து சோதனை நடத்தி இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் செயலை அமெரிக்கா ‘சரியானதுதான்’ என்று நியாயப்படுத்துகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித்தொடர்பாளர் மேரி ஹார்ப், வாஷிங்டனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பெண் துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே ஆடை அவிழ்த்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது பற்றியும், போதை அடிமைகளுடன் காவலில் அடைக்கப்பட்டது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “தூதரக ரீதியிலான பாதுகாப்பு அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அதிகார வரம்பின் கீழ் உள்ளது. அது, துணைத்தூதர் கைது நடவடிக்கையின்போது ஒழுங்கான விதிமுறைகளைத்தான் பின்பற்றி உள்ளது” என பதில் அளித்தார்.

அவரிடம், தேவயானி மனித நேயமற்ற முறையில் நடத்தப்பட்ட விதம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இதுகுறித்து அமெரிக்க போலீசார்தான் பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

அவர் தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில், “தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையின்கீழ், இந்திய துணைத்தூதர் தூதரக செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும்போது மட்டுமே கோர்ட்டில் விலக்கு உரிமை பெற்றுள்ளார். பல்வேறு வகையிலான சிறப்பு விலக்கு உரிமைகள் உள்ளன. இது அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ளது. இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில், அவர் குறித்த வகையிலான விலக்கு உரிமையின்கீழ் வருகிறார். எனவே அவர் வழக்கு விசாரணையின்கீழ் உள்ளதால் குற்றவாளி என்ற வகையில் கைது செய்ய தகுதியானவர்” என கூறினார்.

Leave a Reply