shadow

நிரவ் மோடி இந்தியா வந்தால் செருப்பை கழற்றி அடிப்பேன்: சொன்னது யார் தெரியுமா?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் உத்தரவாத கடிதம் பெற்று பல்வேறு வெளிநாட்டு வங்கியில் சட்டவிரோதமாக ரூ.11500 கோடி கடன் பெற்று தலைமறைவாகிவிட்ட வைரவியாபாரி நீரவ் மோடியை பிடிக்க சிபிஐ தீவிர முயற்சி எடுத்து வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தவராக கூறப்படுபவரும் லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங்குக்கு விண்ணப்பங்களைத் தயார் செய்து கொடுத்தவருவமான அர்ஜுன் பாட்டீல் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அர்ஜூன்பாட்டீலின் மனைவி சுஜாதா பாட்டீல் நிரவ் மோடி இந்தியா வந்தால் அவரை செருப்பை கழற்றி அடிப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளது. அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:

நிரவ் மோடி இந்தியாவுக்கு வரட்டும் அவரைக் செருப்பை கழற்றி அடிக்கவில்லை எனில் பார்த்துக் கொள்ளுங்கள். அர்ஜுனுக்கு ரூ.30,000 சம்பளம், இதைத் தவிர் ஒத்த ரூபாயைக் கூட அவர் சம்பாதித்ததில்லை. நிறுவனம் என்ன கூறியதோ அதைத்தான் என் கணவர் செய்தார். சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை. பெரிய மீனை விட்டு இவரைப் பிடித்து கைது செய்துள்ளார்கள்.

இந்த நாட்டில் கொலைகாரர்களும் பாலியல் பலாத்காரர்களும் சுதந்திரமாக உலவுகின்றனர். ஆனால் அப்பாவி கணவரைக் கைது செய்கின்றனர். எங்கள் வீட்டை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர் ஆனால் அங்கு எதுவும் இல்லை. ஏனெனில் எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இப்போது நடப்பதைப் பார்த்தால் டிவி சீரியல் போல் உள்ளது. சிபிஐ, நிரவ் மோடி, ஊடகங்கள்தான் இதற்குப் பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறியதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply