shadow

rajini in bjpபா.ஜனதா கட்சியில் ரஜினியை இழுப்பதில் மோடி ஆர்வமாக இருப்பதாகவும், அவரது உத்தரவுப்படியே பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா, ரஜினியுடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அமித்ஷா- ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்திரராஜன்  பதில் அளித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே ரஜினியை பாஜகவில் இழுக்க முயற்சி நடந்தது.  தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த நரேந்திர மோடி, சென்னையில் ரஜினிகாந்த் வீட்டுக்கே சென்று அவரை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டார். ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.

இந்நிலையில், ரஜினிகாந்தை பா.ஜனதாவுக்கு இழுக்க வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. ஜெயலலிதா ஜெயில் இருப்பதாலும், திமுக முற்றிலும் செல்வாக்கு இழந்துவிட்டதாலும், ரஜினியை பாரதிய ஜனதாவில் இழுத்து கட்சியை தமிழகத்தில் பலப்படுத்த இதுதான் சரியான நேரம் என மோடி நினைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாகத்தான் அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா, ரஜினியுடன் 3 முறை போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவின் பேச்சுக்கு பிறகு ரஜினி தரப்பிலும் மாற்றங்கள் தென்படுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், பா.ஜ.க தலைவர் அமித்ஷா- ரஜினிகாந்த் சந்திப்பு தொடர்பாக எதுவும் தெரியாது என்றும், பா.ஜ.க.விற்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தால் வரவேற்போம் என்றும் கூறியிருக்கிறார்.

பெங்களூரு ரசிகர் மன்ற தலைவர் இளவரசன், ரஜினியை நேரில் சந்தித்து ’நீங்க அரசியலுக்கு வரணும்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதை கேட்ட ரஜினி, ’கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்று பதில் அளித்துள்ளார். இதனால் அவர் அரசியலுக்கு வரும் காலம் கனிந்து வருவதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Reply