shadow

vaiko and bjpபாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியே வர மதிமுக தொண்டர்கள் தொடர்ந்து வைகோவுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதனால் கூடிய விரைவில் வைகோ கூட்டணியில் இருந்து வெளியே வருவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த முதல் தமிழக கட்சி மதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அலையால் மாபெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த மதிமுகவு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் வெற்றி பெற்றவுடன் நடந்த பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்ததிலேயே மதிமுகவுக்கும் பாஜகவுக்குமான உரசல் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது.

தற்போது ஐந்து தமிழர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குதண்டனை அளித்த விவகாரத்தில் மத்திய அரசை வைகோ கடுமையாக விமர்சித்து வருகிறார்.  பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் மதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுமாறு மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதனால் அதிருப்தியடைந்துள்ள மதிமுகவினர், கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

 உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா சென்றுள்ள வைகோ, நாளை சென்னை திரும்புகிறார். தொண்டர்களின் நெருக்கடி காரணமாக, விரைவில் ஆட்சிமன்றக் குழுவைக் கூட்டி பாஜகவுடனான கூட்டணியில் தொடர்வதா, விலகுவதா என்பது குறித்து முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.

Leave a Reply