shadow

hema-main1
கணவரை இழந்த பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பிரபல நடிகையும் மதுரா தொகுதி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.யுமான ஹேமமாலினிக்கு பெரும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக பிகார் அமைச்சர் லேஷி சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். விதவை பெண்களிடம் ஹேமமாலினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நேற்று முன் தினம் மதுரா நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய நடிகை ஹேமமாலினி  “”உத்தரப் பிரதேசத்தில் கணவரை இழந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அடிப்படை வசதி இல்லாமல் வாழ்கின்ற நிலையில் பிகார், மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்கள் பிருந்தாவன் நகருக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள கோயில்களில் தங்க வேண்டும்” என்று கூறினார்.

அவரது இந்தக் கருத்துக்கு பிகார் அமைச்சர் லேஷி சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் பாட்னாவில் வியாழக்கிழமை கூறியதாவது:

கிருஷ்ண பகவான் பிறந்த ஊரான பிருந்தாவன் நகருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அங்கு செல்ல யாருக்கும் தடை விதிக்க முடியாது. மற்ற மாநிலங்களை சேர்ந்த பெண்கள் இங்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. ஹேமமாலினி அனைவரையும் கவர்ந்த, தலைசிறந்த நடிகை. எனினும், அவரது இந்தக் கருத்து நாட்டு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திவிடும் என்று லேஷி சிங் கூறினார்.

பீகார் அமைச்சரின் கருத்துக்கு நேற்று பதிலளித்த ஹேமாமாலினி, “பிகார், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்கள் பிருந்தாவன் நகருக்கு கூட்டம் கூட்டமாக வரக்கூடாது என்றுதான் கூறினேன்.  பிகார், மேற்கு வங்கத்திலும் உள்ள கோயில்களில் அவர்கள் தங்குவதற்கு அந்த மாநில அரசுகள் போதிய வசதிகளைச் செய்து தரவில்லை. நான் யாரையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை.

கணவரை இழந்த பெண்கள், வீதிகளில் பிச்சை எடுக்கும் அவல நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உரிய வசதிகளைச் செய்து தர வேண்டும். அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று ஹேமமாலினி கூறினார்.

Leave a Reply