shadow

தேமுதிகவுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தது ஏன்? ஒரு விரிவான அலசல்
karunanidhi
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை பெரிய கூட்டணி எதுவும் இம்முறை இருக்கபோவதில்லை. பாஜக மட்டும் அதிமுக கூட்டணியில் இணைய ஒரு வாய்ப்பு உள்ளது. மேலும் அதிமுக தேர்தலை தனியாக சந்திக்க தயார் நிலையில் உள்ளது. கடைசி நேரத்தில் வெள்ள நிவாரண நிதியாக ஒரு பெரிய தொகையை மக்களுக்கு வழங்கினால் எளிதாக மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக நிலைமையோ படு பரிதாபமாக உள்ளது. அதிமுகவைபோல் தனியாக நிற்க திமுக தயாராக இல்லை. அதே நேரத்தில் திமுக தலைமையை ஏற்க மற்ற கட்சிகளும் தற்போது விரும்பவில்லை என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன. திமுகவுடன் இதற்கு முன் கூட்டணியில் இருந்த மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆகியவை தனியாக மக்கள் நலக்கூட்டணி என்னும் மூன்றாவது அணி ஆரம்பித்துள்ளதால் திமுக அதிர்ச்சியில் உள்ளது. மேலும் வட மாவட்டங்களில் செல்வாக்காக இருக்கும் பாமகவோ தனித்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக அறிவித்து முதல்வர் வேட்பாளரையும் அறிவித்துவிட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணையும் வாய்ப்பு இருந்தாலும் இந்த கூட்டணி அதிமுகவை வீழ்த்தும் அளவுக்கு பலமானதாக இருக்காது என்பதுதான் உண்மை. எனவே திமுகவுக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தேமுதிக ஒன்றுதான். தேமுதிக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் திமுகவுடன் கூட்டணியில் இணைந்தால் மட்டுமே அதிமுகவுக்கு ஒரு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும். ஆனால் தற்போது தேமுதிகவும், மக்கள் நல கூட்டணியை நெருங்கி வருவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று வேறு வழியில்லாமல் விஜயகாந்தின் தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு திமுக தலைவர் கருணாநிதி வாய்விட்டு அழைப்பு விடுத்துள்ளார். கருணாநிதியின் அழைப்பை தேமுதிக ஏற்குமா? அல்லது மக்கள் நலக்கூட்டணியில் இணையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply