shadow

திருப்பதி ஏழுமலையானின் முதல் தரிசனம் யாருக்கு? யாதவ குலத்தோருக்கு தொடருமா?

tirumala-tirupati-balajiதினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் திருப்பதி ஏழுமலையான் தோன்றிய வரலாற்றில் யாதவ சமூகத்திற்கு பெரும்பங்கு உள்ளது. அதாவது மகா விஷ்ணு, தன்னை விட்டுப் பிரிந்த மகாலட்சுமியை தேடி பூலோகத்திற்கு பெருமாளாக வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து விடுகிறார். பல நாட்கள் அவர் மயக்கத்தில் இருந்ததால் அவரை சுற்றிலும் புற்று கட்டி விடுகிறது. இந்நிலையில், பிரம்மாவும், சிவனும் பசுவும், கன்றுமாக மாறி பூலோகத்திற்கு வருகின்றனர். இதில் பசு தினமும் புற்றில் உள்ள பெருமாளுக்கு தானாகவே பாலை சுரந்து பெருமாளின் பசியை ஆற்றுகிறார்.

இதனை கவனித்த பசுவை காக்கும் யாதவன், அந்த புற்றை அடித்து துவம்சம் செய்த போது, புற்றுக்குள் பெருமாள் காட்சி அளிக்கிறார் என புராணங்கள் கூறுகின்றன. இதுவே திருப்பதி கோயிலின் தல புராணமும் கூட.

பூலோகத்தில் பெருமாள் முதலில் யாதவருக்கு காட்சி அளித்ததால், இன்றுவரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யாதவ குலத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களாக கருதப்படும் இந்த யாதவர்களுக்கு தற்போது 65 வயது ஆகியுள்ளது. அரசு ஊழியர் என்பதால் பணி ஓய்வு பெற வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். ஓய்வு பெற்ற பின்னர் இவர்களுக்கு ஏழுமலையானின் முதல் தரிசன வாய்ப்பு தொடர்ந்து கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சுப்ரபாத சேவைக்கு அதிகாலை 2.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களை அழைத்து வருவது சன்னதி யாதவ குலத்தவர்களே. இது வம்சாவழியாக வரும் ஒரு சம்பிரதாயமாகும்

கடந்த 1996-ம் ஆண்டு, ஆந்திர அரசு மிராசு வழக்கத்தை ரத்து செய்து யாதவ குலத்தோரை தேவஸ்தான ஊழியர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டது. அரசு ஊழியர்கள் 65 வயது நிரம்பிய உடன் ஓய்வு பெற வேண்டும் என்ற நிலையில், தற்போது சன்னதி யாதவ வம்சத்தில் பணியாற்றுபவர் ஓய்வு பெறும் வயதை அடைந்துள்ளனர். தேவஸ்தானமும், தற்போது சன்னதி யாதவ வம்சத்தினரை ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

சன்னதி யாதவ குலத்தோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போர்க்கொடி தூக்கி உள்ளனர். வம்சாவழியாக ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்து வரும் அர்ச்சகர்களுக்கு அரசு வாய்ப்பு வழங்கியது போன்று சன்னதி யாதவ குலத்தோரும் தொடர்ந்து பணியில் நீடிக்க வாய்ப்பு வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக சன்னதி யாதவ வம்சத்தைச் சேர்ந்த நரசிம்மயாதவ் நேற்று திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறினார்

Leave a Reply