shadow

whatsim

“வாட்ஸ்அப்” – இன்றைய நிலையில் இதுவே பெரும்பாலான மக்களின் தாரக மந்திரம். இதை பொழுதுபோக்கின் உச்சகட்டம் என்று சொன்னாலும் மிகையாகாது. காலையில் எழுந்தது முதல் மாலையில் உறங்கச் செல்வது வரை (வாட்ஸ் அப் வந்த பிறகு பெரும்பாலானவர்கள் தூங்கும் நேரம் குறைந்திருக்கலாம்) வாட்ஸ்அப் என்கிற சமூக வலைதளம் அனைவரின் மொபைல் போன்களில் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய நிலையில் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை ஒவ்வொரு மாதமும் 70 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், அதே வாட்ஸ்அப் மூலம் நாள் ஒன்றுக்கு 3,000 கோடி மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன என்பதையும் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.

வாட்ஸ்அப் தனிக்காட்டு ராஜா!

பயன்படுத்துவது எளிது மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் கூட எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி சாட் செய்து, உடனுக்குடன் தகவல்களை, புகைப்படங்களை, வீடியோ ஆடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்கிற சேவைகள் வாட்ஸ்அப்பை தனிக்காட்டு ராஜாவாக உருவாக்கியிருக்கிறது. ஆனால் , நாடு விட்டு நாடு பயணம் செய்பவர்கள் வாட்ஸ்அப் சேவையை எளிதாக பயன்படுத்த இயலாது என்பதே இன்றளவும் இதன் மீதான குறையாக இருந்தது. காரணம் ரோமிங் கட்டணம். அதுமட்டுமின்றி நாம் பயன்படுத்தும் நெட்வொர்க் சேவை, நாம் போக நினைக்கும் நாட்டில் இல்லாமல் கூட போகலாம். இது போன்ற காரணங்களால் பயணத்தின் போது வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. 

குறையை நிறையாக்கிய வாட்சிம்!

எதேனும் ஒரு சேவையிலோ பொருளிலோ ஒரு விஷயம் குறையாக தெரிந்தால், அதை எவ்வாறு நிவர்த்தி செய்வது என சிந்தித்து அந்த குறையை நிறையாக மாற்றுவது சிறந்த தொழில் முனைவோருக்கு தேவையான ஒரு திறமை. அந்த திறமை இத்தாலி நாட்டை சேர்ந்த மேனுவல் ஜனெல்லா (Manual zanella)என்ற தொழில் முனைவோருக்கு இருந்ததாலோ என்னவோ, பயணத்தின் போது வாட்ஸ்அப் பயன்படுத்த தடையாக இருந்த இந்த பிரச்சணைகளுக்கு ஒரு தீர்வு கண்டதுடன் அதை தனக்கு சாதமான ஒரு தொழிலாகவும் மாற்றியுள்ளார்.

கட்டணம் ரூ.715!

இதற்கானா தீர்வாக அவர் கூறுவது வாட்சிம் (WHATSIM). இந்த சிம்மை பயன்படுத்தினால் இணைய தொடர்பு இல்லாமலேயே வாட்ஸ்அப்பை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் எந்த நாட்டில் இருந்தாலும். வருடம் முழுவதும் 715 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும் வாட்ஸ்அப் மெசேஜிங் மட்டும் தங்கு தடையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.  இந்த சேவை வழங்குவதற்காக 400 நெட்வொர்க் ஆப்ரேட்டர்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளார் அவர். நாம் இருக்கும் இடத்தில் இந்த 400 நெட்வொர்க்களின் எந்த சிக்னல் கிடைத்தாலும் அதை வாட்சிம் பயன்படுத்திக் கொள்ளுமாம். ஆனால் மல்டிமீடியா மெசேஜ்களை அனுப்புவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

சக்கை போடு, போடு ராஜா… இனி உன் காட்டுல மழைதான்!

Leave a Reply