shadow

typoid_2637945f

சுற்றுப்புறச் சூழல் சீர்கெடுவதால் ஏற்படுகிற தொற்றுநோய்களில் மிக முக்கியமானது, டைபாய்டு காய்ச்சல். மழைக் காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்குவதால், குடிநீரும் தெருக் கழிவுகளும் கலந்து நோய்க் கிருமிகள் வாழ வசதியாகிறது. இதனால் அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம்வரை உள்ள காலத்தை டைபாய்டு காய்ச்சலுக்கான காலகட்டம் என்று சொல்கிறார்கள்.

இது, சிறு குழந்தைகள் முதல் முதியோர்வரை யாரையும் தாக்கும் தன்மை கொண்டது. என்றாலும், எங்கெல்லாம் சுத்தம் இல்லையோ, கழிப்பறை வசதி இல்லையோ, அங்கு வாழ்கிற குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை இந்த நோய் எளிதில் தாக்கிவிடுகிறது.

நோய் வரும் வழி

‘சால்மோனெல்லா டைபி’ (Salmonella typhi) எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதை சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் அவை வெளியேறுகின்றன. இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள், இந்தக் கிருமிகளைச் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருகின்றன. வீட்டில் முறையாகப் பாதுகாக்கப்படாத குடிநீரிலும் உணவிலும் இவை கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த உணவையும் குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது.

இந்த நோய் இன்னொரு முறையிலும் வருகிறது. ஏற்கெனவே, டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில் இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள்வரை வசிக்கும். அப்போது அந்த நபரின் மலத்திலும் சிறுநீரிலும் அவருக்குத் தெரியாமலேயே அவை வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும். இந்த நபர்களை ‘நோய் கடத்துநர்கள்’ (Carriers) என்கிறார்கள்.

அறிகுறிகள்

நாட்பட்ட காய்ச்சல், உடல்வலி, தலைவலி இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். தலைவலி கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்றுவலி வரும். உணவைச் சாப்பிட முடியாது. இதனால், நோயாளிக்குச் சோர்வு அதிகரித்து, மயக்கம் வரும்.

சிக்கல்கள்

இந்தக் காய்ச்சல் குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு’ (Febrile Fits) வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் தொடக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக்குருதிநோய்’(Septicaemia) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து நேரலாம்.

என்ன பரிசோதனை?

1. ரத்த அணுக்கள் பரிசோதனை

* காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்த நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்தால், முடிவுகள் 90 சதவீதம் சரியாக இருக்கும்.

* டைபாய்டுக்கான ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு இதைச் செய்ய வேண்டியது முக்கியம்.

* வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை (Complete Blood Count Test) செய்யப்படும். இதன்மூலம் நோயாளியின் பொது ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

* டைபாய்டு வந்தவருக்கு ரத்த வெள்ளையணுக்களின் மொத்த எண்ணிக்கையும் நியூட்ரோபில் அணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.

* குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்கு வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

2. ரத்த நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Blood Culture)

* காய்ச்சல் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்குள் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

* ரத்தத்தை எடுத்து ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை உறுதி செய்ய மிகச் சிறந்த பரிசோதனை இதுதான்.

3. வைடால் ரத்தப் பரிசோதனை (Widal Test).

* இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான். டைபாய்டு வந்தவருக்கு இந்த நோய்க் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது.

* இதில் ‘டியூப்’ பரிசோதனை, ‘சிலைட்’ பரிசோதனை என்று இரண்டு வகைகள் உண்டு.

* இவற்றில் ஒன்றை, நோய் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில் செய்துகொள்ள வேண்டும்.

* டைபாய்டு ஆன்டிஜெனை நோயாளியின் ரத்தத்தில் கலக்கும்போது அதில் எதிர் அணுக்கள் இருந்தால், அவற்றுடன் ஆன்டிஜென்கள் இணைந்து இணையணுக்களை (Agglutinin) உருவாக்கும்.

* இப்பரிசோதனையில் ஓ, ஹெச் என்று இரண்டு வகை இணையணுக்கள் அளக்கப்படுகின்றன.

* இவற்றில் ‘ஓ’ இணையணு டைபாய்டு கிருமி வகையைச் சார்ந்ததால், இதன் அளவு முக்கியம்.

* டியூப் பரிசோதனையில் ‘ஓ’ இணையணு 1 : 180 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால், சிலைட் பரிசோதனையில் 1 : 80 எனும் அளவுக்கு அதிகமாக இருந்தால் டைபாய்டு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.

* நோய் ஆரம்பித்த நான்கு மாதங்கள்வரை இந்த அளவுகள் குறையாமல் இருக்கும். எனவே, இதற்கிடையில் இந்தப் பரிசோதனையை மீண்டும் செய்துகொண்டு, இன்னமும் நோய் குணமாகவில்லை என்று தவறாக எண்ணுபவர்கள் உண்டு.

* சமீபத்தில் டைபாய்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இந்தப் பரிசோதனையைச் செய்ய நேரிட்டால், அவர்களுக்கு நோய் இல்லாவிட்டாலும், இந்த அளவுகள் அதிகமாக இருப்பதாகக் காண்பிக்கும்; பயப்படத் தேவையில்லை.

4. அட்டைப் பரிசோதனை (CARD Test)

* நோயாளியின் ரத்தத்தில் டைபாய்டு கிருமிகளுக்கான ஐஜி.எம். (IgM), ஐஜி.ஜி. (IgG) எதிர் அணுக்களை மிக விரைவாகக் கண்டறியும் பரிசோதனை இது.

* இந்த அணுக்கள் ரத்தத்தில் இருந்தால் 60 சதவீதம் நோய் உறுதி.

* பரிசோதனையின் முடிவு உடனே தெரிந்துவிடும்.

* நோய் ஏற்பட்ட முதல் வாரத்தில் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

5. மலம் நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Feces Culture)

* காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதென்றால் மூன்றாம் வாரத் தொடக்கத்தில், இதைச் செய்துகொள்ள வேண்டும்.

* மலத்தை ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை உறுதிசெய்ய இதுவும் உதவும்.

6. சிறுநீர் நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Urine Culture)

* காய்ச்சல் ஏற்பட்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டதென்றால், நான்காவது வாரத் தொடக்கத்தில் இதைச் செய்துகொள்ளலாம்.

* சிறுநீரை ஒரு வளர் ஊடகத்தில் ஊற்றி, கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

* டைபாய்டு காய்ச்சலை இதன்மூலமும் உறுதி செய்யலாம்.

7. பி.சி.ஆர். பரிசோதனை (PCR Polymerase Chain Reaction Test)

* நோயாளியின் ரத்தத்தில் டைபாய்டு பாக்டீரியாவின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து, நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.

* 99 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.

* மிக நுண்ணிய தொழில்நுட்பம் கொண்டது.

* இப்போது இந்தப் பரிசோதனை பிரபலமாகிவருகிறது.

* செலவு கொஞ்சம் அதிகம்.

Leave a Reply