shadow

தலைமை செயலாளருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன. ஒரு பார்வை

ஒரு தலைமை செயலாளருக்கு எத்தனை அதிகாரங்கள் இருக்கின்றதோ கிட்டத்தட்ட அந்த அத்தனை அதிகாரங்களையும் தவறாக பயன்படுத்தி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் ராம்மோகன்ராவ். இந்நிலையில் புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்ட கிரிஜா வைத்தியநாதன் சற்று முன்னர் தலைமைசெயலாளாராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில் ஒரு தலைமை செயலாளருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போமா…

1. மாநில முதல்வருக்கு முதன்மை ஆலோசகராக இருப்பவர். அரசின் நிர்வாக விஷயங்களைச் செயல்படுத்துபவர். மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் திட்டங்களையும் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் தலைமைச் செயலாளரின் முக்கியப் பணி.

2. அமைச்சரவைக் குழுவின் செயலாளரும் இவர்தான். அமைச்சரவைக் குழு கூட்டங்களைத் திட்டமிடுவதும், அந்தக் கூட்டத்தின் இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைத் திட்டமிடுவதும் தலைமைச் செயலாளரின் பொறுப்பு. அரசு விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை நிர்வகிக்கும் அதிகாரமும் இந்தப் பதவிக்கு உண்டு.

3. அரசின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளின் செயலாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. அதேபோல் அனைத்துத் துறைகளின் பணியாளர்களும் இவரது கட்டுப்பாட்டுக்கு உள்ளானவர்கள்.

4. குடிமையியல் பணி தொடர்பான விவகாரங்களும் இந்தப் பொறுப்பின் கீழ்தான் வரும். முக்கிய அரசு உயர் அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் ஆகியவற்றையும் தலைமைச்செயலாளரே பார்ப்பார். அரசுத் துறைகளுக்கு வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளும், உத்தரவுகளும் தலைமைச் செயலாளர் பெயரில் வெளியிடப்படும்.

5. மண்டல அளவிலான மாநில அரசுகள் ஆணையத்திலும் மாநிலத்தின் சார்பாக அதன் தலைமைச்செயலாளரே பிரதிநிதியாக செயல்படுவார்.

6. தலைமைச் செயலகத்தின் நிர்வாகப் பணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், யார் யாருக்கு எந்த அறை? என்று ஒதுக்கீடு செய்வதற்கும் தலைமைச்செயலாளருக்கே அதிகாரம் உண்டு.

7. மைய ஆவணக் காப்பகம், தலைமைச் செயலக நூலகம் ஆகியவற்றையும் நிர்வகிப்பார். தலைமைச் செயலகத்தில் உள்ள காவலாளிகளும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பர்.

8. முக்கியமாக எமர்ஜென்சி அமல்படுத்தப்படும் சமயங்களில், மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் அவரின் கீழ்தான் இருக்கும்.

9. எந்தவொரு நெருக்கடி, அசாதாரண சூழ்நிலையிலும் அரசின் பக்கம் நின்று, அவசியமாக எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான ஆலோசனை தர வேண்டியது தலைமைச் செயலாளருடைய பொறுப்பு.

10. அரசு தொடர்பான டெண்டர்கள், கான்ட்ராக்ட்டுகள், நிலம் கையகப்படுத்துதல் என அனைத்தும் தலைமைச் செயலாளரின் கீழ்தான் செயல்படும். 

Leave a Reply