shadow

online-shoppingகடந்த சில வாரங்களாக இ-காமர்ஸ் துறை பற்றிய விவாதங்களும், அதன் ஆஃபர்கள் குறித்த சர்ச்சைகளும் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் அளிக்கப்படும் கவர்ச்சிகரமான தள்ளுபடி விலையைப் பார்த்து மயங்காத வாடிக்கையாளர்களே இல்லை. ஆசையில் பொருளை வாங்கிவிட்டு, பிற்பாடு அவஸ்தையை அனுபவித்தவர்கள் பலர். ஆன்லைனில் நாம் பொருள்களை வாங்கும்போது செய்யும் தவறுகள் என்னென்ன? இதில் எவ்வளவு விழிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.

ஏற்றி இறக்கும் ஆஃபர்!

இ-காமர்ஸில் பொருள் வாங்குபவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது, விலையைத்தான். சமீபத்தில் பிரபல இ-காமர்ஸ் இணையதளம் ஒன்று ஃபாலோ செய்த டெக்னிக் திகைக்க வைத்தது. ஒரு குறிப்பிட்ட விலையைப் பொருளின் விலையாக நிர்ணயித்துவிட்டு, அதில் 60% ஆஃபரை வழங்கியது. ஆனால், அந்த இணையதளம் காட்சிக்கு வைத்த பொருளின் புகைப்படத்தில் அதிகப்பட்ச விற்பனை விலை (MRP) குறைவாகத்தான் அச்சிடப்பட்டிருந்தது. உண்மையில் ஒப்பிட்டுப்பார்த்தால், ஆஃபர் விலையானது அச்சிடப்பட்ட விலையைவிட அதிகம். இப்படி விலையை உயர்த்தி, பின்னர் அதில் தள்ளுபடி வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன ஆன்லைன் நிறுவனங்கள். ஆக, ஒரு பொருளின் விலை நேரடியாக விற்கப்படும் கடைகளில் எவ்வளவு என நன்கு விசாரித்து, ஆன்லைனில் நிஜமாகவே குறைவாக இருந்தால் மட்டுமே வாங்கலாம்.

நிதானம் முக்கியம்!

இன்னும் சில மணி நேரங்களுக்கே ஆஃபர் என ஆன்லைனில் செய்யப்படும் விளம்பரங்களைப் பார்த்து நீங்கள் அவசரப்பட வேண்டாம். காரணம், பொருள்களை வாங்கும்முன், அந்தப் பொருளின் விலை எப்படியெல்லாம் மாறி தற்போது இந்த விலையில் இருக்கிறது என்பதை வரைபடமாக வழங்கும் அளவிலான தொழில் நுட்பத்தைக் கூகுள் வழங்கியுள்ளது. உங்கள் கூகுள் க்ரோம் ப்ரெளஸரில் ‘கம்பேர் ஹாட்கே’ (Compare Hatke) எனும் இணைப்பை இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும், நீங்கள் எந்த இ-காமர்ஸ் இணையதளத்தில் எந்தப் பொருளைத் தேடினாலும், அதன் முந்தைய விலையை வரைபடமாக தந்துவிடும். இதற்கு அதிகபட்சம் இரண்டு நிமிடம்கூட ஆகாது. இந்த இரண்டு நிமிடத்துக்கு அவசரப்பட்டால் குறைந்த விலையில் வர்த்தகமான பொருளை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.
 
மிகக் குறைந்த விலையா, உஷார்!

குறிப்பாக, சில பொருள்கள் ‘ஒன்லி ஆன்லைன்’ என்ற முறையில் விற்கப்படுவதை வாங்கும்போது சற்றுக் கவனமாக வாங்குங்கள். அதனை நம்மால் விலை ரீதியாகவோ அல்லது யாராவது ஒருவரின் அனுபவத்தில் இருந்தோ, அவற்றைப் பற்றிய கருத்தைப் பெறுவது என்பது கடினமான விஷயம் தான். ஆனால், அவர்கள் அளித்திருக்கும் வசதிகளுக்கு இந்த விலை சரிதானா என்று பாருங்கள். அதிகமாக இருந்தால் வாங்குவதைத் தவிர்க்கலாம். விலை மிகவும் குறைவாக இருந்தால், சற்றுத் தரம் குறைந்த அல்லது இரண்டாம் தர பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம். அதனால் மிகக் குறைந்த விலையில் பொருள்களை ஆன்லைனில் வாங்குவதை, அதுவும் ஒன்லி ஆன்லைனில் வாங்குவதைத் தவிருங்கள்.

உத்தரவாதம் உண்டா?

நிஜமான தள்ளுபடி விலையில் பொருள்களை வாங்குகிற அதேநேரத்தில், அந்தப்  பொருளுக்கான கேரன்டி சர்ட்டிஃபிகேட்டைப் பார்த்து வாங்கு வதும் முக்கியம். எந்த ஒரு பொருளுக்கு கீழேயும் தரப்பட்டிருக்கும் விவரங்களை நம்மில் பலரும் படித்துப் பார்ப்பதே இல்லை. அதில், இதனை வழங்கும் சப்ளையர் உத்தரவாதமானவரா என்பதை அறிய ‘செக்யூர் ஷாப்பிங் சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டிருக்கும். அப்படி வழங்கப்பட்ட பொருள்களுக்குத் தான் ஏதாவது தவறு நடந்தால், இழப்பீடோ அல்லது சர்வீஸோ திரும்பக் கேட்க முடியும். சான்றிதழ் பெறாதப் பொருள்கள் ரிஸ்க் நிறைந்தவையே!

கேஷ் ஆன் டெலிவரி!

இதேபோல், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்து பவர்கள் வெரிசைன், எஸ்எஸ்எல் போன்ற பாதுகாப்பான வழிகளில் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறதா என்பதையும் கவனியுங்கள். பாதுகாப்பற்ற முறையில் பணப் பரிமாற்றம் செய்து பணத்தை இழக்காதீர்கள். கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரி முறையைப் பின்பற்ற பாருங்கள். ஏனெனில், நீங்கள் ஆர்டர் செய்த பொருள் உங்களை வந்து சேரவில்லை என்றாலும் அதனால் நீங்கள் பணத்தை இழக்கப் போவதில்லை. தவிர, சமீபத்தில் நடந்த மெகா விற்பனையில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்தவர்களுக்கு கிரெடிட் கார்டில் பணம் கட்டியவர்களைவிட சீக்கிரமாகவே பொருள்கள் வந்து சேர்ந்திருக்கிறதாம்!

வருகிறவர் சரியான ஆளா?

கேஷ் ஆன் டெலிவரி முறையில் பொருள்களை வாங்கும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். உங்களுக்குப் பொருள்களைக் கொண்டுவந்து தரும் நபர் அதிகாரப்பூர்வ நிறுவனத்தின் டெலிவரி நபர்தானா என்பதைக் கவனியுங்கள். அவர் உங்களிடம் வாங்கும் கையெழுத்து மற்றும் உங்களிடம் பொருளை வாங்கியவுடன் அவர் நிறுவனத்துக்கு அவரிடம் உள்ள கருவி மூலம் செய்தியைத் தெரிவிப்பார். உடனே உங்கள் செல்போனுக்கு நீங்கள் ஆர்டர் செய்த நிறுவனத்திலிருந்து எஸ்எம்எஸ் வரவேண்டும். சில நேரம் உங்கள் மெயிலுக்கு இன்வாய்ஸ் அனுப்புமாறு செய்திருப்பார்கள்; அதனையும் கவனித்துப் பாருங்கள். அப்படி இல்லையெனில், சமீபத்தில் ஒரு கும்பல் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் இதுதான் என வெறும் பெட்டியைக் கொடுத்து  பணத்தை ஏமாற்றியிருக்கிறது.

இதுபோன்ற விஷயங்களைக் கவனித்து இ-காமர்ஸ் தவறுகளில் சிக்கி பணத்தை இழக்காமல் பாதுகாப்பாகப் பர்ச்சேஸ் செய்யுங்கள்!


Leave a Reply