shadow

வளம் பெறுமா சென்னை வர்த்தக ரியல் எஸ்டேட்?
real estate

தமிழகத்திலிருந்து மட்டுமில்லாமல் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமானோர் வேலை வாய்ப்புகளுக்காகத் தலைநகர் சென்னையை நோக்கி வந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வேலைக்கான உத்தரவாதம் அளிக்கும் நகரமாகச் சென்னை உள்ளது.

இதற்காகச் சென்னையில் அநேக அலுவலகங்கள் செயல்பட்டுவருவதும் புதிதாகப் பல அலுவலகங்கள் உருவாகிக்கொண்டேயிருப்பதும் வாடிக்கை. புதிது புதிதாகப் பல நிறுவனங்கள் அமைக்கப்படும்போது அவற்றின் அலுவலகங்கள் செயல்படக் கட்டிடங்கள் தேவைப்படுகின்றன. இந்தக் கட்டிடங்களை உருவாக்கி வழங்கும் பணியைச் செய்துவருகிறது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். சென்னையில் அலுவலகங்களுக்குத் தேவையான இட வசதி குறித்து ஜேஎல்எல் நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த அலுவலகச் சந்தையானது, எவ்வளவு அலுவலக இடம் தேவையோ அவற்றைவிடக் குறைந்த அளவு இடத்தையே வழங்கிவருகிறது என்கிறது இந்த ஆய்வறிக்கை. இதன் காரணமாக அலுவலகங்களுக்கான வாடகை, குத்தகை போன்றவை உயர்ந்துவருகிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2017-ல் இந்த நிலை மாறி, புதிதாக உருவாக்கப்படும் அலுவலகக் கட்டிடங்களைவிட அதிக அளவில் அலுவலகக் கட்டிடங்கள் பயன்படுத்தப்படும். அதாவது ஏற்கனவே காலியாக உள்ள இடங்களும் பயன்படுத்தப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பொதுவாக சென்னையில் ஆண்டுதோறும் 38 லட்சத்திலிருந்து 40 லட்சம் சதுர அடி வரையான இடம் அலுவலகங்களுக்காகத் தேவைப்படுகிறது. இந்த நிலையில் பெரிய மாற்றமின்றி இதே அளவுக்கான இடம் ஆண்டு தோறும் தேவைப்படுகிறது. 2015-ம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 52 லட்சம் சதுர அடி இடம் தேவைப்பட்டது. ஆகவே இந்த அளவுக்கான இடத்தை ரியல் எஸ்டேட் துறையால் அளிக்க முடியவில்லை. ஆகவே இருந்த இடங்களையே அத்தனை அலுவலகங்களும் ஆக்கிரமித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாடகையும் குத்தகைத் தொகையும் உயர்ந்துவிட்டன.

சென்னை அலுவலகச் சந்தையின் பரப்பானது 5.4 கோடி சதுர அடியாக இருந்தது. இதில் 12.6 சதவீத இடம் காலியாக இருந்தது. இது பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்த காலி இடத்தின் சதவீதத்தைவிட அதிகம். ஏனெனில் பெங்களூருவில் அலுவலகச் சந்தையின் பரப்பு 9.3 கோடி சதுர அடி அங்கே 4.8 சதவீத இடம் தான் காலியாக இருந்தது. அதே போல் ஹைதராபாத்தில் 3.7 கோடி பரப்பு கொண்ட அலுவலகச் சந்தையில் 9.9 சதவீத இடம் காலியாக இருந்தது.

2016-ல் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள். காலி மனையின் சதவீதம் குறையத் தொடங்கியிருக்கிறது என்றும் இது 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்துக்கு வந்துவிடும் என்றும் ஜேஎல்எல் நிறுவன அறிக்கை குறிப்பிடுகிறது. அலுவலகத்துக்கான இடங்களின் தேவையைச் சமாளிப்பதில் புதிய கட்டிடங்கள் வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் காரணமாக ஏற்கனவே இருக்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும் என்பதால் காலி மனையின் சதவீதம் குறைந்தவிடும் என்று நம்பப்படுகிறது.

மேலும் நுகர்வோரின் ஆதிக்கத்திலிருந்த இந்த சந்தையானது இந்த ஆண்டிலிருந்து நில உரிமையாளரின் ஆதிக்கத்துக்கு வந்துவிடும் என்றும் தெரிகிறது. அலுவலகக் கட்டிடம் அமைந்திருக்கும் இடத்தையும் அதில் கிடக்கும் வசதிவாய்ப்பையும் பொறுத்து வாடகை உயர்வு அமையும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

சென்னை அலுவலகச் சந்தையின் காலி மனை சதவீதம் 12.6 என்பது அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்த்ததுதான். அதைக் கழித்துவிட்டோமென்றால் நகரத்தில் மட்டும் சுமார் ஆறிலிருந்து ஏழு சதவீதம் அளவு தான் காலி இடம் இருக்கும். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான இடத் தேவையைப் பூர்த்திசெய்ய அரசு ஏதாவது தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்காதவரையிலும், அலுவலக இடங்களைத் தேர்ந்தெடுக்க நிறுவனங்களுக்கான வாய்ப்பானது மிகவும் சொற்பமே. ஆகவே இருக்கும் இடத்தை எப்படியாவது அலுவலகங்கள் ஆக்கிரமிக்க வேண்டும் என்பதே நிலைமை என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையினர்.

தற்போது ஐடி நிறுவனங்கள் அதிகமாக அமைந்திருக்கும் பகுதிகளைத் தவிர்த்து புதிய பகுதிகளில் தொழில்நுட்பப் பூங்காக்களை அரசு உருவாக்கினால் நல்லது என்று அவர்கள் கருதுகிறார்கள். மேலும் சென்னையில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை விரிவாக்கம் செய்வதற்காகப் பெரிய இடங்களைத் தேடி வருகின்றன. அவற்றின் தேவையை அறிந்து பூர்த்திசெய்ய வேண்டிய நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளன.

சென்னையில் 2015-ம் ஆண்டில் புதிதாக 3.81 கோடி சதுர அடி அலுவலக இடம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இதில் 3.62 கோடி சதுர அடி இடம் அலுவலகங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஜேஎல்எல் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் 2016-ல் 3.23 கோடி சதுர அடி இடம் பயன்படுத்தப்படும் என்றும் புதிதாக 3.6 கோடி சதுர அடி இடம் கட்டி முடிக்கப்படும் என்றும், 2017-ல் புதிதாக 3.19 கோடி சதுர அடி இடம் உருவாக்கப்படும் ஆனால், 3.28 கோடி சதுர அடி இடம் அலுவலகங்களால் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த எண்ணிக்கைகளை உற்றுக் கவனித்தீர்கள் என்றால் சென்னையில் காலி மனையின் சதவீதம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதை உணர முடியும். இணைய வர்த்தகம், தொலைதொடர்பு, உடல் நலம் ஆகிய விவகாரங்களைக் கவனிக்கும் நிறுவனங்கள் தங்கள் பரப்பை அதிகரித்து வருகின்றன என்றும் இதனால் அலுலக இடங்களுக்கான தேவை பெருகுகிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

 

Leave a Reply