shadow

download

சுறுசுறுப்பான பணியால் பிறர் மனம் கவரும், மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு குரு, ராகு, சுக்கிரனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. ராசிநாதன் செவ்வாய் உச்சபலத்துடன் சனி பார்வையுடன், பரிவர்த்தனையும் பெற்றுள்ளார். இதனால், வாழ்வில் கடின உழைப்பால் சேர்த்த சொத்துகளை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை, ஆதரவு திருப்திகர அளவில் கிடைக்கும். வாகன பயன்பாடு அளவுடன் இருக்கும்.புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் பெறுவர். எதிர்ப்பாளரால் வருகிற தொந்தரவு பலமிழக்கும். உடல்நலம் ஆரோக்கியம் பெறும். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணப்பரிவர்த்தனைகளில் நிதானமும், பாதுகாப்பும் வேண்டும். இயந்திரப்பிரிவு பணியாளர்கள், பாதுகாப்பு நடைமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும். குடும்ப பெண்கள், கணவரின் வாழ்வியல் சிரமம் தீர உதவுவீர்கள். மாணவர்கள், நண்பர்களின் நல்ல கருத்துகளில் சில உண்மையை அறிந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம்: 19.12.14 மாலை 3:59 மணி முதல் 20.12.14 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதால், அரசு தொடர்பான உதவி பெறலாம்.

குடும்பச்செலவை பணவரவுக்கேற்ப திட்டமிடும், ரிஷப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிநாதன் சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் புதனுடன் அனுகூலமாக உள்ளார். மீனத்தில் உள்ள கேது பகவான், மனதில் ஞானம் நிறைந்த சிந்தனைகளை தருவார். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில், பொறுமையான அணுகுமுறை ஓரளவு நற்பலன் தரும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.புத்திரரின் நல்ல செயல், பெருமை தேடித்தரும். பூர்வ சொத்துகளில் அபிவிருத்தி ஏற்படும். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணையின் செயல்திறன், தாமத கதியில் இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி, உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள், வேலையில் அக்கறையுடன் ஈடுபடுவது, நற்பெயர் பாதுகாக்க உதவும். பெண்கள், குடும்ப நலன் சிறக்க, ஆன்மிக வழிபாடு மேற்கொள்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால், புதிய செயல் நிறைவேற வழிபிறக்கும்.

நல்ல கருத்துகளை மனப்பூர்வமாக ஏற்கும், மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சனி பகவான் மற்றும் சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். குடும்பத்தின் முக்கிய செலவுக்காக நகை, சொத்தின் பேரில் பணம் கடன் பெறுகிற அவசியம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை, உரிய திட்டமிடலுக்கு பின்னர் துவங்கலாம். தாய் வழி உறவினர்களிடம், உங்கள் மீதான அதிருப்தியை தகுந்த முறையில் சரி செய்யுங்கள்.புத்திரர் உடல்நலத்திற்கு, சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். அதிர்ஷ்டவசமாக எதிர்ப்பு விலகி, வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வாய்ப்பு வரும். இல்லறத்துணையின் மனதில், குடும்பத்தின் எதிர்கால வாழ்வு பற்றிய அக்கறை மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் சலுகை வழங்குவதால் உற்பத்தி, விற்பனை அளவு சராசரி நிலையை அடையும். பணியாளர்கள், பணி இலக்கை கால அவகாசத்தில் நிறைவேற்றுவீர்கள். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்கக் கூடாது. மாணவர்கள், படிப்பு தவிர பிற விஷயங்களில் விவாதம் பேச வேண்டாம்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால், நல்லோரின் ஆசி, உதவி கிடைக்கும்.

பழகுபவர்களின் உணர்வுகளை மதித்திடும், கடக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு இரண்டில் குரு, மூன்றில் ராகு, ஆறாம் இடத்தில் புதன், சூரியன் அனுகூல அமர்வில் உள்ளனர். பிறர் மனம் விரும்பும் வகையில் இனிய வார்த்தை பேசுவீர்கள். செயல் முழு அளவில் நன்மை தரும். சமூகத்தில் அந்தஸ்து கூடும். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும். புத்திரர், ஆர்வமிகுதியால் கவனக்குறைவாக செயல்படுவர். உங்களின் கண்காணிப்பு, வழிகாட்டுதல் சிரமம் வராமல் தவிர்க்கும். உறவினர், நண்பர் வீட்டு விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். இல்லறத்துணையிடம் பழைய விவகாரம் பற்றி பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, வருகிற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்தவும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, நன்மை பெற அனுகூலம் உண்டு. குடும்ப பெண்கள், கணவரின் ஆலோசனைப்படி செயல்படுவீர்கள். மாணவர்கள், அதிக நேரம் படித்து கூடுதல் தேர்ச்சி பெறுவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால், தொழில் வளர்ச்சி பெற நல்ல வாய்ப்பு வரும்.

பணிகளின் முக்கியத்துவம் கருதி செயல்படும், சிம்ம ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சந்திரன் மற்றும் ஆறாம் இடத்தில் உச்சம் பெற்ற சுக – சவுபாக்ய ஸ்தான அதிபதி செவ்வாய் நற்பலன் தருவர். சுக்கிரனும் அனுகூலமாக உள்ளார். பொது விவாதங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தம்பி, தங்கையின் அன்பும், உதவியும் கிடைக்கும். தொலை துார வாகனப்பயணம் இரவு நேரங்களில் செல்ல வேண்டாம். தாய்வழி உறவினர்களின் வருகை, வீட்டில் குதுாகலம் ஏற்படுத்தும். மகளின் ஜாதக யோகபலம், குடும்பத்தின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்ற கூடுதல் பணவரவு தரும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகையை உண்ண வேண்டாம். இல்லறத்துணை தன் கருத்துகளை எளிய முறையில் சொல்வார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி மேற்கொள்ள, தாராள பணவசதி இருக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும். குடும்ப பெண்கள், வீட்டு அலங்கார பொருட்கள் வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள், படிப்பு தொடர்பான சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வர்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால், குடும்பத்தில் மங்களத்தன்மை நிறைந்திருக்கும்.

உறவினர் உதவியை மனமுவந்து ஏற்றிடும், கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி பகவான், நான்கில் புதன், சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். ஏழரைச்சனி விலகி, மனதில் புதிய உத்வேகம் ஏற்படும். குடும்ப நலனின் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். உறவினர்களின் அன்பும், உதவியும் அதிகம் கிடைக்கும். உடல்நல ஆரோக்கியம் பேணுவதால், பணி சீராக நிறைவேறும். புத்திரரின் பிடிவாத குணம் நிறைந்த செயல், மனவருத்தம் தரலாம். கெடுபிடியான அணுகுமுறை உள்ளவரிடம் பணக்கடன் பெறக்கூடாது. இல்லறத்துணை உங்களின் நல்ல குணம் பாராட்டுவார். தொழில், வியாபார நடைமுறை செழித்து வளர, புதியவர்களின் ஆதரவு துணை நிற்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவீர்கள். பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்க நல்யோகம் உண்டு. மாணவர்கள், புதிய கலை பயில்வதில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: அய்யப்பனை வழிபடுவதால், புத்திரர் நற்குண, நற்செயலை பின்பற்றுவர்.

உண்மை, நேர்மை வாழ்வை உயர்த்தும் என்கிற, துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றில் சூரியன், சுக்கிரன், ஆறாம் இடத்தில் கேது, ஆதாய ஸ்தானத்தில் குரு அனுகூல அமர்வில் உள்ளனர். மனதில் புத்துணர்வு, செயல்களில் புதிய பரிமாணம் ஏற்படும். தன்னைச் சார்ந்தவர்களின் எண்ணம் உணர்ந்து பேசுவீர்கள். வாழ்வில் முன்னேற்றம் பெற, கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.புத்திரர் செயல்களை கவனித்து ஒழுங்குபடுத்துவது நல்லது. சூரியனின் அருளால் எதிர்ப்பு விலகி, அரசு தொடர்பான உதவி எளிதில் கிடைக்கும். இல்லறத்துணை குடும்ப பொறுப்பு உணர்ந்து செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழித்து, உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள், தொழில் நுட்பத்தை கூடுதலாக அறிந்து கொள்வீர்கள். பெண்கள், உறவினர்களிடம் நற்பெயரும், உதவியும் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள், புதிய பயிற்சி முறையால் படிப்பில் தமக்குரிய பெருமையை பாதுகாத்துக் கொள்வீர்கள்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதால், மனதில் புதிய ஞானம் பிறக்கும்.

உயர்ந்த வாழ்வு பெற்றும் பணிவுடன் செயல்படும், விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன், மூன்றாம் இடத்தில் ராசிநாதன் செவ்வாய் உச்சபலத்துடன் அனுகூலமாக உள்ளனர். மனதில் புதிதாக வருகிற குழப்பமான சிந்தனைகளை, உங்களின் நலம் விரும்புபவர்களிடம் கலந்து பேசி சரி செய்யுங்கள். அலைச்சல் என கருதும் வெளியூர் பயணத்தை தவிர்க்கவும். உடன் பிறந்தவர், உதவிகரமாக நடந்து கொள்வர். தாயின் கூடுதல் அன்பு, மனதில் நெகிழ்ச்சி தரும். புத்திரர், தன் செயல்களில் பின் தங்குகின்ற கிரக நிலை உள்ளது; நம்பிக்கை வளர்க்கும் விதத்தில் உதவுங்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகையை உண்ண வேண்டாம். இல்லறத்துணை, உங்களின் கவுரவம் அதிகரிக்க வழி சொல்வார். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு மட்டுமே, சராசரி பணவரவைத் தரும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை தவறாமல் பின்பற்றவும். பெண்கள், அதிக பயன்தராத வீட்டு உபயோக பொருளை வாங்க வேண்டாம். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால் படிப்பில் கவனம் வளரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால், பிறரிடம் ஏமாறாமல் தப்பிக்கலாம்.

தன்னால் இயன்ற பணி மட்டும் மேற்கொள்ளும், தனுசு ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு அசுர குருவாகிய சுக்கிரன், தேவகுரு வியாழன் மட்டுமே நற்பலன் தருவர். மனம், உடலில் சோம்பலின் தாக்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உறவினர்களின் மனக்குமுறல்களை, பரிவுடன் கேட்டு சரி செய்வீர்கள். சிலர், புதிய வாகனம் வாங்க நல்ல யோகம் உண்டு. புத்திரர் நெருப்பு, மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில், உரிய பயிற்சிக்குப் பின் அனுமதிக்கலாம். பகைமை குணத்துடன் விலகியவர், உங்களின் நல்அன்பை உணர்ந்து சொந்தம் பாராட்டுவர். இல்லறத்துணை, கருத்து ஒற்றுமையுடன் குடும்ப பணிகளில் கவனம் கொள்வார். தொழில், வியாபாரத்தில் போட்டியை எதிர்கொள்ள பொறுமையும், புதிய யுக்திகளும் மட்டுமே உதவும். பணியாளர்கள், தகுதி மீறிய அளவில் பணக்கடன் எதுவும் பெற வேண்டாம். குடும்ப பெண்கள், மன நிம்மதியுடன் செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் கருத்துகளை வேதம் எனக் கருதி செயல்படுவர்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதால், தொழில் சார்ந்த போட்டி குறையும்.

பொறுமை குணம் பின்பற்றி பெருமை அடையும், மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு கேது, சனி, சுக்கிரனின் அமர்வு, சிறப்பாக பலன் தரும் வகையில் உள்ளது. சில பணி நிறைவேற்றுவதில் தாமதம் குறுக்கிடலாம்; மாற்று உபாயம் நல்வழி தரும். ஆன்மிக வழிபாடு செய்வதில் ஆர்வம் வளரும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தரக் கூடாது. சிலர், வீடு, பணியிடம் மாறுகிற சூழ்நிலை ஏற்படலாம். புத்திரர் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். எதிரியால் வருகிற தொந்தரவு, மனவருத்தம் தரும். அளவான உழைப்பு, சீரான ஓய்வு உங்களின் உடல்நலம் பாதுகாக்கும். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் ஓரளவு வளர்ச்சி பெற்று, பணவரவை அதிகரிக்கும். பணியாளர்கள், பணி இலக்கை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். பெண்கள், உறவினர் குடும்பம் ஒற்றுமையுடன் வாழ உதவுவர். மாணவர்கள், சாகச விளையாட்டுக்களில் ஈடுபடக் கூடாது.

சந்திராஷ்டமம்: 13.12.14 நள்ளிரவு 12:01 மணி முதல், 14.12.14 இரவு 8:53 மணி வரை.

பரிகாரம்: லட்சுமி வராகரை வழிபடுவதால், குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும்.

சூழ்நிலையின் போக்கு உணர்ந்து செயல்படும், கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு பகவான், லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். உங்களின் செயல் சிறப்பாக அமைந்து நண்பர், உறவினர்களின் பாராட்டு பெறும். நிலுவைப் பணம் வசூலாகும். முக்கிய வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். வெளியூர் பயணத்தில், புதியவர்களிடம் அளவுடன் பேசுவது நல்லது. சிலர், புதிய வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரர், உங்கள் சொல்படி நடந்து வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி உருவாக்குவர். அறிமுகம் இல்லாதவர் தரும் உணவை உண்ண வேண்டாம். இல்லறத்துணை, சேமிப்பு பணம் தந்து முக்கியமான பொருள் வாங்க உதவுவார். தொழில், வியாபாரம் சார்ந்த வகையில், அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பணியாளர்கள், நேரம் தவறாமையை பின்பற்றுவதால், இலக்கு சீராக நிறைவேறும். பெண்கள், தாய் வழி உறவினர்களிடம் மனக்கிலேசம் வராமல் பேசுவது நல்லது. மாணவர்கள், நன்றாக படித்து பாராட்டு, வெகுமதி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 14.12.14 இரவு 8:54 மணிமுதல், 17.12.14 காலை 7:02 மணி வரை.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபடுவதால் விவகாரம் அணுகாத சுமூக வாழ்வு ஏற்படும்.

சொந்த வேலையில் அதிக அக்கறை கொண்ட, மீன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் பதினொன்றாம் இடத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் அனுகூல அமர்வில் உள்ளனர். அஷ்டமச்சனியின் தாக்கம் விலகி, பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். உறவினர்களின் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பூர்வ சொத்தில் பணவரவு கூடும். புத்திரரின் சேர்க்கை சகவாசம் தெரிந்து, தேவையான அறிவுரை சொல்வீர்கள். பிணி தொந்தரவு விலகி, உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணையின் மனதில் உங்களின் செயல், சில தருணங்களில் புரியாத புதிர் போல தென்படும். தொழிலில் சில மாற்றம் செய்து உற்பத்தி, விற்பனை அளவை அதிகரிப்பீர்கள். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், கணவரின் நல்அன்பு கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்த்து படிப்பில் கூடுதல் தேர்ச்சி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 17.12.14 காலை 7:03 மணி முதல், 19.12.14 மாலை 3:59 மணி வரை.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால், செயலில் கூடுதல் நன்மை கிடைக்கும்.

Leave a Reply