shadow

முதல்வர் வேட்பாளராக அன்புமணியை ஏற்க முடியாது. தமிழிசை அதிரடி
tamilisai
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் தன்னிச்சையாக அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பாமக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் அன்புமணி தலைமையை ஏற்றுக்கொண்டால் தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயார் என அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கூறிய நிலையில்,  பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜ, ‘தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சேர்ந்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என்றும் 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

தமிழகத்தில் மாற்றம் ஏற்பட விரும்புவோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம் என்று அழைப்பு விடுத்த தமிழிசை, எளிய மக்கள் அணுக முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தமிழிசை இப்படி தெரிவித்திருப்பது பாமகவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பா.ஜனதா கூட்டணியில் பாமக இடம்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் நெருக்கத்தில் ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கக்கூடும். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரும், தனித்து போட்டி என்றே கூறிவிட்டு, கடைசி நேரத்தில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்ற உதாரணம் உள்ளது என்பதால், இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்ல முடியாது. மேலும் அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் தனித்து போட்டியிட வாய்ப்பில்லை என்றே அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply