shadow

டெல்லியை தகர்க்க எங்களுக்கு 5 நிமிடம் போதும். பாகிஸ்தான் மிரட்டல்
delhi
இந்திய தலைநகர் டெல்லியை அணுகுண்டு மூலம் ஐந்தே நிமிடங்களில் எங்களால் தகர்க்க முடியும் என பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்காதிர்கான் மிரட்டல் தொனியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி பாகிஸ்தான் முதன்முதலாக அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த சோதனையை நடத்திய அணு விஞ்ஞானி அப்ல்துகாதிர்கான் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் 1984ஆம் ஆண்டே அணு வல்லமையை பெற்றிருக்க முடியும். ஆனால் அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக் அணுகுண்டு வெடித்து சோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். அணுகுண்டு வெடித்து சோதித்தால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்து வரும் நிதியுதவி நின்று விடும் என அவர் நம்பினார். அதனால்தான் அணுகுண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ராவல்பிண்டி அருகில் உள்ள காஹூதாவில் இருந்து டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை பாகிஸ்தானிடம் இருக்கிறது. எனது பணிகள் இல்லாமல், பாகிஸ்தான் ஒருபோதும் உலகின் முதல் இஸ்லாமிய அணு ஆயுத நாடாக மாறி இருக்க முடியாது. மிக கடினமான ஒரு சூழ்நிலையில்தான் நாம் அணு ஆயுத நாடாக மாறினோம். பர்வேஸ் முஷாரப் காலத்தில் அணு விஞ்ஞானிகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படவில்லை. நாட்டின் அணு ஆயுத திட்டத்துக்காக நாங்கள் அரும்பாடு பட்டும் மோசமாக நடத்தப்படுகிறோம்” என்று கூறினார்.

இதே அப்துல் காதிர்கான், 2004ஆம் ஆண்டு, முஷாரப் ஆட்சிக்காலத்தில் அணு ஆயுத தொழில்நுட்ப பரவலுக்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ஆம் ஆண்டுதான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

Leave a Reply