shadow

தமிழக அரசுடன் காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்: குமாரசாமி

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையத்திற்கான பிரதிநிதிகளும் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. முழு அளவில் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுவிட்டால் இனி காவிரி பிரச்சனையே நான்கு மாநிலங்களுக்கு இடையே வர வாய்ப்பில்லை

இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்றும், எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

நேற்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியதாவது: காவிரி பிரச்சினையில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே ஒரு இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். அதுபற்றி நாங்கள் பேசினோம்.

இரு மாநிலங்களும் பரஸ்பரம் இணக்கமான நல்லுறவை தொடர வேண்டும் என்று அவர் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சகோதரத்துவ மனப்பான்மையுடன் இரு மாநிலங்களும் நட்புறவோடு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு என இரு மாநில விவசாயிகளுமே எங்களுக்கு முக்கியமானவர்கள். காவிரி பிரச்சினையில் கர்நாடக விவசாயிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை தான். இவற்றை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். பிரச்சினைகளையும் இரு மாநில விவசாயிகள் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Leave a Reply