shadow

சென்னை ஐகோர்ட்டில் விஷ்ணுப்ரியாவின் தந்தை மனுதாக்கல். சிபிஐ மாறுமா வழக்கு?
vishnupriya
உயரதிகாரிகள் நெருக்குதல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் திருச்செங்கொடு டி.எஸ்.,பி விஷ்ணுப்ரியா வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், விஷ்ணுபிரியா மர்மச்சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விஷ்ணுபிரியாவின் தந்தை எம்.ரவி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ”என்னுடைய மகள் விஷ்ணுபிரியா, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில், சில உயர் அதிகாரிகள், தனக்கு கடுமையான நெருக்கடியை தருவதாக எங்களிடம் கூறினாள்.

இதற்கிடையில், என் மகளை போனில் தொடர்பு கொண்ட நாமக்கல் போலீஸ் எஸ்.பி. செந்தில்குமார், சரக டி.ஐ.ஜி. வித்யாகுல்கர்னி ஆகியோர் உடனடியாக திருச்செங்கோட்டிற்கு புறப்பட்டு வரும்படி என் மகளுக்கு உத்தரவிட்டனர். அப்போது என் மகள் புறப்படும்போது, ‘கோகுல்ராஜ் கொலையில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தன்னை வற்புறுத்துவதாகவும், இந்த வழக்கின் விசாரணையை திசை திருப்புவதாகவும் கூறிவிட்டு சென்றார்.

இந்நிலையில், நாமக்கல் எஸ்.பி. செந்தில்குமார், எனக்கு போன் செய்து விஷ்ணுபிரியாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனே புறப்பட்டு வாருங்கள் என்று கூறினார். நாங்கள் புறப்பட்டு கொண்டிருந்தபோது, மீண்டும் போன் செய்து, விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தன்னை மன்னிக்க வேண்டும் என்று விஷ்ணுபிரியா எழுதி வைத்துள்ளார் என கூறினார்.

விஷ்ணுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதால், தான் நேரடியாக சென்று கதவை உடைத்து திறக்க உள்ளதாகவும் போலீஸ் அவர் கூறினார். ஆனால், பூட்டப்பட்டுள்ள அறைக்குள் உள்ள விஷ்ணுபிரியா எழுதிய கடிதம், கதவை திறப்பதற்கு முன்பாகவே எப்படி எஸ்.பி.க்கு கிடைத்தது? என்ற சந்தேகம் என் மனதில் ஏற்பட்டது.

திருச்செங்கோட்டிற்கு நாங்கள் செல்வதற்கு முன்பே, என் மகளின் உடலை போலீசார் மீட்டு சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாமல், சேலத்துக்கு ஏன் கொண்டு சென்றீர்கள்? என்று கேட்டபோது, சேலத்தில்தான் குளிர்சாதன வசதிகள் உள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அதை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் செயல்பட்டனர். என் மகள் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரங்கள், தோடுகளை போலீசார் எங்களிடம் ஒப்படைக்கவில்லை.

பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வண்டி இருந்தும், அதில் ஏற்றாமல் மற்றொரு வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிவிட்டார். மேலும், தற்கொலை சம்பவம் நடந்த அறைக்குள் சென்ற எஸ்.பி. செந்தில்குமார், என் மகளின் செல்போன்கள், லேப்டாப், கேமிரா உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார். என் மகள் எழுதியதாக கூறப்படும் கடிதங்கள், அவள் எழுதியது இல்லை.

என் மகள் கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து விசாரித்தபோது, தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், பலமுறை போனில் பேசியுள்ளார். இந்த வழக்கில் மாவட்ட எஸ்.பி., டி.ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளின் தலையீடு உள்ளதால், என் மகள் தற்கொலை குறித்து நடைபெறும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நியாயமானதாக இருக்காது என்று நினைக்கிறேன். இந்த வழக்கின் வேகத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், தவறான தகவல்களையும் போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர். இதுதவிர, என் மகள் நேர்மையான, தைரியமான பெண் ஆவார். அவர் தற்கொலை செய்யும் முடிவு எடுக்க வாய்ப்பே இல்லை. எனவே, விஷ்ணுபிரியா மர்மச்சாவு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்”

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மாலை விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply