விஷாலின் அதிரடி அறிக்கையால் பிரச்சனை பெரிதாகுமா?

கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பாளர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சனை இருந்து வருகிறது. சில சமயம் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து படப்பிடிப்பையே ரத்து செய்யும் அளவுக்கு கொண்டுபோய் விடுகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையால் ஃபெப்சி தொழிலாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விபரம் இதுதான்:

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இடையே பல நிலைகளில் சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் சம்மேளத்தில் அங்கமாக இருக்கும் ஒருசில அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட்டு அடிக்கடி பேச்சுவார்த்தை மற்றும் படப்பிடிப்புகளில் தடங்கல்களை ஏற்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்புகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வருகிறார்கள். சம்மேளனமும் அவற்றை கண்டுகொள்ளாமலும், தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர்களை இழிவுபடுத்துவதையும் கண்டிக்காமல் இருந்து வருகிறது.

இதுபோன்ற விஷயங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறாது. இவற்றால் ஒவ்வொருமுறையும் திட்டமிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தியும், இறுதியில் அவர்களாகவே ஒரு சம்பளம் நிர்ணயித்து அராஜக முறையில் தயாரிப்பாளர்களின் பலவீனத்தை பயனப்டுத்தி அதை நிரந்தரமான சம்பளமாக நிர்ணயித்து வருகிறார்கள். ஆனால் இனிமேலும் தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களை கைவிட இயலாது.

சம்மேளனமோ, தொழிலாளர்களோ தயாரிப்பாளர்களுக்கு எதிரி அல்ல. உழைக்கும் தொழிலாளர்கள் அதற்குரிய ஊதியத்தை முறையாக வழங்குவது தயாரிப்பாளர்களின் கடமை ஆகும். அதே வேளையில் அநியாயமான முறையில் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுவதை ஒருபோதும் ஏற்க இயலாது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இனிமேல் தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயிக்கும் சம்பள விவரங்களின்படி தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம். அதேபோல் இன்று முதல் (25.07.2017) தயாரிப்பாளர்களை தங்களுக்கு உடன்படும் யாருடனும் தேவையான அளவில் ஆட்களை வைத்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *