shadow

விசாரணை. திரைவிமர்சனம்

visaranai-1நண்பர்களுடன் வேலை தேடி ஆந்திராவுக்கு வரும் நாயகன் தினேஷ் குண்டூரில் மளிகைக் கடை ஒன்றில் வேலைக்கு சேர்கிறார். தங்குவதற்கு இடம் இல்லாததால் நண்பர்களுடன் அங்குள்ள ஒரு பூங்காவில் தங்கியிருக்கிறார்கள்.

ஒருநாள் மளிகைக் கடையை திறக்க வரும் தினேஷை ஆந்திரா போலீஸ் திடீரென கைது செய்கிறது. தன்னைப்போலவே தன்னுடைய நண்பர்களும் ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது தினேஷுக்கு தெரிகிறது.

ஆந்திராவில் ஒரு பெரும் பணக்காரர் வீட்டில் காணாமல் போன நகைகளும், பணத்தையும் யார் திருடினார்கள் என்பது தெரியாததால், அந்த வழக்கை முடித்து வைப்பதற்காக இவர்களை அந்த குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி விசாரணை என்ற பெயரில் போலீசார் பலவகையில் அவர்களை துன்புறுத்துகிறார்கள்.

இதே நேரத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய ஆடிட்டரான கிஷோரை ஊழல் வழக்கில் கைது செய்ய தமிழக காவல் துறை முயற்சி செய்கிறது. இதை அறிந்த கிஷோர் குண்டூர் நீதிமன்றத்தில் சரணடைய பார்க்கிறார். ஆனால், அவர் சரணடையும் முன்பே அவரை கைது செய்ய முயற்சிக்கிறது தமிழக காவல்துறை. இதற்காக, தமிழக காவல்துறை அதிகாரியான சமுத்திரகனி குண்டூர் வருகிறார்.

வருகிற சமயத்தில் நீதிமன்றத்தில் தினேஷ் மற்றும் அவர்களது நண்பர்களை காப்பாற்றி தன்னுடன் அழைத்து செல்கிறார். தங்களை காப்பாற்றிய சமுத்திரகனிக்காக, அவர் சொல்லும் வேலையை செய்ய தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முடிவெடுக்கிறார்கள். அதன்படி கிஷோரை கடத்தி சமுத்திரகனியிடம் ஒப்படைக்கிறார்கள்.

ஊர் திரும்பும் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரில் ஒருவர் வழியில் சொந்த ஊர் சென்று விடுகிறார். மற்றவர்கள் போலீசாரிடமே இருக்கும் நிலை உருவாகிறது. கைதான ஆடிட்டர் கிஷோரிடம் தமிழக போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

கிஷோர், உண்மையை சொன்னால் அரசியல் பிரமுகர்கள் சிலர் சிக்கிக் கொள்வார்கள். எனவே, அவரை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் நடக்கும் சித்ரவதை காரணமாக ஆடிட்டர் இறந்து போகிறார்.

இதிலிருந்து போலீசார் தப்புவதற்காக பழியை அப்பாவி இளைஞர்கள் 3 பேர் மீதும் சுமத்தி அவர்களை என்கவுன்டரில் போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். கடைசியில் இளைஞர்கள் நிலை என்ன? அவர்களை அழைத்து வந்த சமுத்திரக்கனி என்ன ஆனார்? என்பது மீதி கதை.

‘லாக்கப்’ என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கியதுமே விறுவிறுப்பும் தொடங்கிவிடுகிறது. முதல் பாதியில் குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி நான்கு இளைஞர்களையும் ஆந்திரா போலீசார் செய்யும் சித்ரவதை காட்சிகள் அனைத்தும் மனதை பதைபதைக்க வைக்கின்றன.

போலீசார் நினைத்தால் ஒருவன் செய்யாத குற்றத்தை, எப்படியும் ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்ற வழிமுறைகளை இப்படத்தில் அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருக்கிறார் வெற்றிமாறன். படத்தில் பல்வேறு திருப்பங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் பதற்றத்தையும், பயத்தையும் கொடுக்கின்றன.

ஒரு குற்றமும் செய்யாமல் போலீசாரிடம் அடிவாங்கி சித்ரவதை அனுபவிக்கும் அப்பாவி இளைஞர்களாக தினேஷ், முருகதாஸ் உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கிஷோர், சமுத்திரகனி ஆகியோரும் தங்களுடைய பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கிஷோரிடம் சமுத்திரகனி விசாரணை செய்யும் காட்சிகள் எல்லாம் அருமை. படத்தில் எந்தவொரு இடத்திலும் செயற்கைத்தனம், மேக்கப் இல்லாமல் இயல்பான காட்சிகளாகவே எடுத்திருக்கிறார். ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் படத்திற்கு உயிரோட்டமாக இருந்திருக்கிறது. இந்த படத்தை எடுத்த வெற்றிமாறனும், தனுஷும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மொத்தத்தில் ‘விசாரணை’ தீவிரம்.

Leave a Reply