shadow

virginஎப்போது விடுமுறை விடுவார்கள்?’ என்று கம்பெனியின் ஹாலிடே காலண்டரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதுதான் இந்தியாவில் பணிபுரியும் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்களின் நிலைமை.

பல தனியார் நிறுவனங்களில் அரசு விடுமுறை நாட்களில் கூட விடுமுறை விடப்படுவது இல்லை. அரசு ஊழியர் என்றால் சனிக்கிழமை அரைநாள் விடுமுறை கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் அதுவும் இல்லை. வாரம் ஆறு நாட்களும் வேலைப் பார்த்தாக வேண்டும். நேரமும், கன்னாபின்னாவென இருக்கும். மொத்தத்தில் தனியார் நிறுவன ஊழியர்களின் மனம், எப்போதும் ஒரு விடுமுறையை நோக்கிய ஏக்கத்துடனேயே இருக்கிறது.

ஆனால் யூரோப்பிய நிறுவனமான விர்ஜின் (Virgin), தனது ஊழியர்கள் கட்டற்ற விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது. அதாவது இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். எதற்கும் அனுமதி வாங்க வேண்டியது இல்லை. திரும்பி வந்து பணியில் சேருவதற்கும் வரைமுறை எதுவும் இல்லை. எப்போது விடுமுறை போரடிக்கிறதோ, அப்போது வேலையில் சேர்ந்துகொள்ளலாம். சில மணி நேரம், சில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்கள் வரையில் கூட அந்த விடுமுறை இருக்கலாம். ஒரு பிரச்னையும் இல்லை.

”ஊழியர்கள் எத்தனை நாட்கள் விடுமுறை எடுத்துகொள்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. அவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலை, உரிய நேரத்தில், உரிய தரத்தில் செய்து முடிக்கப்படுகிறதா என்பதைப் பார்த்தால் போதுமானது. நாங்கள் ‘காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை’ என்று எங்கள் பணி நேரத்தை வரையறுத்துக்கொள்ளவில்லை. அதேபோல, இப்போது விடுமுறை எடுப்பதையும் ஊழியர்களின் விருப்பமாக விட்டுவிட்டோம். இது அவர்களின் மனதில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன். இனிமேல் அவர்கள் சுதந்திரமானவர்களாக உணர்வார்கள். பணிபுரியும் திறன் அதிகரிக்கும்” என்கிறார் விர்ஜின் குழும நிறுவனங்களின் தலைவர் ரிச்சர்டு பிரான்சன்.

உண்மையில் ’கட்டற்ற விடுமுறை’ என்ற இந்த திட்டத்தை தனது ஊழியர்களுக்கு முதலில் அறிமுகப்படுத்தியது, பிரபல இணையதள தொலைக்காட்சி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தான். இதைப்பற்றி டெலிகிராஃப் பத்திரிகையில் வந்த கட்டுரை ஒன்றை விர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்டு பிரான்சனின் மகள் ஹோலி படிக்கிறார். அதை தனது தந்தைக்கு அனுப்பி வைக்கிறார். அவர், ‘இந்த ஐடியா நல்லா இருக்கே’ என்று தன் நிறுவனத்திலும் அறிமுகப்படுத்திவிட்டார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள விர்ஜின் குழும நிறுவனங்களில், இந்த கட்டற்ற விடுமுறை திட்டம் அறிமுகமான பிறகு ஊழியர்களின் பணித்திறன் அதிகரித்திருப்பதாக கூறுகிறார் ரிச்சர்டு.

நம் ஊர் நிறுவனங்களில் இப்படிப்பட்ட திட்டங்கள் எப்போது வருமோ?

Leave a Reply