ஐ.சி.சி., “ரேங்கிங்’ பட்டியலில் முதல் முறையாக “நம்பர்-1′ இடத்தை  இந்தியாவின் விராத் கோஹ்லி பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் போட்டிக்கான புதிய “ரேங்கிங்’ பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் விராத் கோஹ்லி முதல் முறையாக “நம்பர்-1′ இடம் பெற்றார். சமீபத்தில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு சதம் உட்பட 344 ரன்கள்(சராசரி 114.66) குவித்த இவர், மொத்தம் 857 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார்.

இதன் மூலம் சச்சின், தோனிக்கு பின் முதலிடம் பெறும் மூன்றாவது இந்திய வீரரானார். ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி 3வது இடம்(835 புள்ளி) பிடித்தார். இரண்டாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா(844 புள்ளி) உள்ளார். ஷிகர் தவான் 12 இடங்கள் முன்னேறி 11வது இடம் பெற்றார். ரோகித் சர்மா 15வது இடம் பிடித்தார்.

பந்துவீச்சில் பாகிஸ்தானின் “சுழல்’ நாயகன் சயீத் அஜ்மல் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீசின் நரைன் உள்ளார். இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

“ஆல்-ரவுண்டர்’ பட்டியலில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் முதல் இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான அணிகளின் பட்டியலில் இந்தியா(123 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா(114) இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply