shadow

vikatanவிகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் நேற்று மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79. இவருக்கு ஆறு மகள்கள், ஒரு மகன். இவரது மகன் பா.சீனிவாசன் தற்போது விகடன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். விகடன் குழு தலைவரின் மறைவிற்கு CTN தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

விகடன் தலைவர் பாலசுப்பிரமணியம் தனது 21வது வயதில் விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்று தனது பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தி வாசகர்களை கவர்ந்தார். தமிழில் முதன்முதலாக ஜூனியர் விகடன் என்ற அரசியல் வார இதழை தொடங்கியவர் இவர்தான். அரசியல் குறித்து இவர் எழுதிய துணிச்சலான கட்டுரைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த1987-ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு அட்டைப்பட நகைச்சுவை துணுக்கு எம்.ஜி.ஆரையே கோபப்பட வைத்தது.  எம்.ஜி.ஆர். அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று தான் ஒரு வெற்றிகரமான பத்திரிகையாளர் என்ற சாதனை படைத்தார்.

தமிழ் இதழியலில் மிகப் பெரும் தாக்கத்தை நிகழ்த்திய ‘விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்’, விகடன் நிறுவனர் அமரர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களால் துவங்கப்பட்டது. எனினும், இந்த திட்டத்திற்கு முழு வடிவம் கொடுத்து அத்திட்டத்தை மேலும் மெருகூட்டிட்டினார். இவரால் இன்று ஆயிரக்கணக்கானோர் பத்திரிகையாளராக மாறியுள்ளனர்.

தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான முயற்சியாக இப்போதும் பேசப்படும் ‘முத்திரைக் கதைகள்’ திட்டத்தைத் துவங்கியவர் இவர்தான். ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட மிகப் பிரபலமான எழுத்தாளர்களுக்கு முதல் களம் அமைத்துத் தந்தவர். திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவித்த பண்பாளர். இவரும் ஓர் எழுத்தாளரே. ‘சேவற்கொடியோன்’ என்ற புனைப்பெயரில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

தந்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களின் வழியைப் பின்பற்றி திரைத்துறையிலும் முத்திரை பதித்த திரு எஸ்.பாலசுப்ரமணியன் தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, முத்துராமன் நடித்த ‘எல்லோரும் நல்லவரே’ போன்றவை இவர் இயக்கிய சில படங்களாகும்.

Leave a Reply