shadow

தமிழகத்தில் புளுகுமூட்டை ஆட்சி நடந்து வருகிறது. விஜயகாந்த் கண்டன அறிக்கை

vijayakanthகடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எந்தவித பணியையும் ஆற்றாமல் தூங்கி கொண்டிருந்த விஜயகாந்த், திடீரென தேர்தல் நெருங்குவதை அடுத்து தினந்தோறும் ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தையும், தமிழக அரசு அதற்கு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார். இதே நிலை கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்தபோது அப்போதெல்லாம் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

விஜய்காந்த் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரம் இதோ:

தமிழகத்தில் தண்ணீர், தண்ணீர், தண்ணீரென குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது, ஒவ்வொரு நாளும் குடிநீர் கேட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். சென்னை மாநகரில் ஐந்தாறு நாட்களுக்கு ஒருமுறையும், சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பத்து பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும்தான் குடிநீர் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல இடங்களில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யும் அவலநிலை உள்ளது. அதிலும் வழக்கமாக விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பாதியளவே விநியோகிப்பதாகவும், அதிலும் கழிவுநீர் கலந்துவருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் லாரிகளின் வாயிலாக விநியோகிக்கப்படும் குடிநீரைக்கூட ஒரு குடம் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்வதாக மக்கள் கூறுகின்றனர்.

ஏழை, எளிய மக்கள் லாரிகளிலும், வேன்களிலும் தண்ணீரை விலைகொடுத்து வாங்குவதால், கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை தண்ணீருக்காக செலவு செய்யும் அவலநிலை தமிழகத்தில் உள்ளது. அதிமுக அரசே ஒரு லிட்டர் தண்ணீரை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யும் தண்ணீர் வியாபாரியாகி விட்டது. இந்த லட்சணத்தில்தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி இருக்கிறது. வீடுதோறும் இருபது லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கை காற்றோடு, காற்றாக போனதா? கடந்த ஒருமாதத்தில் மட்டும் சென்னையில் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கேன்குடிநீர் தேவை சுமார் ஒருகோடி லிட்டரிலிருந்து, ஒருகோடியே ஐம்பது இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளதென்றும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட தனியார் கேன்குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், தற்போது அதன் எண்ணிக்கை சுமார் 600யை தாண்டியதாகவும் கூறப்படுகிறது.  

இந்த நான்காண்டுகால அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களையும், புள்ளி விவரங்களையும் கூறி, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது, பணிகள் நடைபெறுகிறது, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேம்படுத்தப்பட்டுள்ளது, என வாய்ஜாலம்காட்டி, புளுகுமூட்டையை அவிழ்த்துவிட்டு, அனைவரையும் ஏமாளியாக்க பார்க்கிறது அதிமுக அரசு. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதா? என்றால் இல்லை என்பதே தமிழகமக்களின் பதிலாக இருக்கிறது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, “பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகமே இருண்டு விட்டது” என்பதைப்போல உள்ளது அரசின் செயல்பாடு. சென்னைக்கு குடிநீர் வழங்கும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு மட்டும் 1220 கோடி ரூபாய் கடன் உள்ளது. அப்படியானால் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும், தமிழ்நாடு குடிநீர் வழங்கும் வாரியத்திற்கு எத்தனை ஆயிரம்கோடி ரூபாய் கடன் இருக்கும்? இந்தநிலையில் புதிய குடிநீர் திட்டங்களை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தேவையான நிதிஆதாரம் எங்கே இருந்து வரும்? இத்துறையின் அமைச்சர் இதற்கு பதிலளிப்பாரா?

2013 ஏப்ரல் 16ஆம் தேதி 110விதியின்கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நான்காண்டுகளுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்றார். ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேலாகி தற்போதுதான் ஒப்புதலே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அருகே உள்ள பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அத்திட்டம் என்னவானதென்றே தெரியவில்லை. மேலும் அன்றைய தினமே எட்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் நிலையும் அதோகதியாகிவிட்டது. அதிமுக ஆட்சியில் அறிவிப்புகளுக்கோ பஞ்சமில்லை, மக்களின் அவலங்களுக்கோ முடிவில்லை. எனவே தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை உண்மையாகவே தீர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.                               

Leave a Reply