shadow

காஞ்சிபுரம் மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பாரா விஜயகாந்த்? பிரேமலதா பதில்
premalatha
திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவடைந்துள்ள நிலையில் இந்த கூட்டணியில் தேமுதிகவை இணைக்க காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் யாருடன் கூட்டணி, யார் தலைமையில் கூட்டணி, போன்ற விபரங்களை காஞ்சிபுரம் மாநாட்டிலோ அல்லது மாநாடு முடிந்த ஒரு வாரத்திலோ விஜயகாந்த் அறிவிப்பார் என  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்

காஞ்சிபுரம் தே.மு.தி.க. மாநில மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட வந்த பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ”தே.மு.தி.க.வின் தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்டணி குறித்த அறிவிப்பை மாநாட்டின்போதோ, மாநாடு முடிந்த ஒரு வாரத்திலோ கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி என்று பல்வேறு அணிகள் தற்போது தேர்தல் களத்தில் உள்ளன. பலரும் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைத்துள்ளனர். தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு தொண்டர்கள் ஆற்றிய அயராத பணியே இதற்குக் காரணம். யாருடன் கூட்டணி என்பதையும், அந்தக் கூட்டணி தே.மு.தி.க. தலைமையில் இருக்குமா என்பதையும் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

தி.மு.க –  காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்ட 30 நிமிடங்களிலேயே வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஊழலில் ஊறிய, கடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமான இரு கட்சிகளும் இணைந்துள்ளதாகவே பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பிறந்த மண்ணில் நடைபெறும் இம் மாநாடு, தமிழக அரசியலில் அவர் ஏற்படுத்தியது போன்ற திருப்புமுனையை மீண்டும் ஏற்படுத்தும். அதற்காகவே இம் மாநாட்டுக்கு ‘அரசியல் திருப்புமுனை மாநாடு’ என்று பெயர் வைத்துள்ளோம். மாநாட்டில் பிற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். யார் யார் பங்கேற்கிறார்கள் என்பதை மாநாட்டின்போது நீங்களே நேரில் பார்க்கலாம்.

தமிழக அரசு அறிக்கை அரசியலை நடத்தி வருகிறது. மத்திய அரசு அளித்த நிதியில் பொதுமக்களுக்கு ரூ.5,000 அளித்துவிட்டு தாங்கள் அளித்ததுபோல மாநில அரசு காட்டி வருகிறது. மாநில அரசின் மெத்தனத்தால்தான் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்” இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Leave a Reply