shadow

கிங், கிங்மேக்கர், ஜோக்கர்? இந்த மூன்றில் விஜயகாந்த் யார்?

vijayakanthதேமுதிகவின் திருப்புமுனை மாநாடு நேற்று முன் தினம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எதிர்பார்த்ததைபோலவே விஜயகாந்த் கூட்டணி குறித்து தெளிவாக எதையும் கூறாமல் அவரும் குழம்பி, வந்திருந்த தொண்டர்களையும் குழப்பியுள்ளார். தேர்தல் கூட்டணி குறித்து எந்தவித முடிவையும் அவர் இந்த மாநாட்டில் அறிவிக்க வாய்ப்பில்லை என ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கூறியதுபோலவே இந்த மாநாட்டில் அவர் வழக்கம்போல் வந்திருந்த கூட்டத்தினர்களிடம் ‘நான் கிங் மேக்கராக இருக்க வேண்டுமா? கிங் ஆக இருக்க வேண்டுமா? என கிக்’காக கேட்டார். அவருடைய கேள்விக்கு ஏற்கனவே செட்டப் செய்து வைத்திருந்த முன்பகுதியில் இருந்த கூட்டத்தினர் விஜயகாந்த் கிங் ஆகத்தான் இருக்க வேண்டும் என கூறினர். இந்த தேர்தலில் விஜயகாந்த், கிங் ஆக இருக்க போகிறாரா? கிங் மேக்கராக இருக்க போகிறாரா? அல்லது ஜோக்கராக மாற போகிறாரா? என்பதை தேர்தல் முடிவில்தான் தெரியும்.

இந்த மாநாட்டில் விஜயகாந்த் பேசியதன் முழுவிபரம்:

காஞ்சீபுரம் குலுங்கி விட்டது. இதற்கு இந்த கூட்டமே சான்று. இதற்காக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். என் தொண்டர்களை நான் அறிவேன். பார்த்தசாரதி எம்.எல்.ஏ. சொன்னாரே ‘வெட்டிவா என்றால் தலையை கொண்டு வருவேன்’ என்று அது தான் என் தொண்டர்கள். ராணுவம் போல் இருப்பவர்கள் என் தொண்டர்கள். என் குடும்பம் சிறியது. பணத்தை சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

எனக்கும், என் மனைவிக்கும் ஒரு வேளை சாப்பாடு போட மாட்டீர்களா? இது தான் வேண்டும். 234 தொகுதிகளிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் இல்லையென்று ஜெயலலிதா சொன்னார். இப்போது இந்த கூட்டத்தை பார்த்து உங்களுக்கு கண்கள் கட்டி விட்டதா? ஆட்சியில் இருப்பதால் தான் இடைத்தேர்தலில் ஜெயிக்கிறீர்கள். பர்கூர் தொகுதியில் ஏன் தோற்றீர்கள்.

சட்டசபைக்கு நான் போனால் கேள்வி வேற மாதிரி இருக்கும். 2004-ல் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பூஜ்ஜியம் பெற்றீர்களே? ஜீரோ பன்னீர்செல்வம் இருக்கிற வரை இந்த நாடும், உங்கள் கட்சியும் உருப்படாது. சாலைகள் எப்படி இருக்கு? குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு 20 லிட்டர் தண்ணீர் கொடுப்பேன் என்றார்கள். ஆனால் ஆட்சியின் கடைசியில் செய்கிறீர்கள். ஊழல் செய்த கை நிற்காது. அதற்கு எடுத்து காட்டு தான் இந்த ஆட்சி.

சினிமாவில் நடிக்க தெரியும். மக்களிடம் எனக்கு நடிக்க தெரியாது, ஏமாற்ற தெரியாது. விஜயகாந்த் என்ன சொல்வார்? மவுனமாக இருக்கிறார் என்கிறார்கள். இந்த விஜயகாந்த் அமைதியாக, தெளிவாக இருக்கிறார். மக்களை அடமானம் வைக்க மாட்டேன். என் தொண்டர்களை எப்படி விலைக்கு வாங்க நினைத்தீர் கள் என்பதும் எனக்கு தெரியும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். கண்ணை முடி கிணற்றில் குதித்து விடு என்று தலைவர் சொன்னால், தலைவர் குடும்பத்தை பார்த்துக்கொள்வார் என்று குதித்து விடுவார்கள். குடும்பத்தை விஜயகாந்த் காப்பாற்றுவான் என்று நினைப்பீர்கள். தலைவரை பற்றி தொண்டர்களுக்கு தெரியாதா? நல்ல மனிதர் என்று நீங்கள் சொல்வதை எப்போதும் காப்பாற்றுவேன். விஜயகாந்த் எப்போதும் ஏழை மக்களுக்காகத்தான் வாழ்ந்தான் என்று தான் இருக்க வேண்டும். இதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அ.தி.மு.க. நல்ல கட்சியா? புதிய வாக்காளர்கள் எந்த பக்கம் என்பதை சொல்ல வேண்டும்.

நீங்கள் சொல்லுங்கள், நான் கிங் மேக்கராக இருக்க வேண்டுமா? ‘கிங்’ ஆக இருக்க வேண்டுமா? கிங் ஆக இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இது குறித்து பின்னர் முடிவு செய்வோம். நான் கிங்காக இருந்தால் நீங்களும் கிங் தான்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்

Leave a Reply