vijay_2193420g

கத்தி திரைப்படத்தில் கோலா கம்பெனிகளை எதிர்த்து, நிஜத்தில் கோலா விளம்பரத்தில் நடித்தது பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் விஜய் பதிலளித்துள்ளார்.

விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமான Vijay_cjv பக்கத்தில் விஜய், ரசிகர்களின் கேள்விக்கு சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். இதோ, ட்விட்டர் தளத்தில் விஜய்யிடம் ரசிகர்கள் எழுப்பிய சில சுவாரசியமான கேள்விகளும், பதில்களும்..

கேள்வி: புதுமுக இயக்குநர்களுக்கு நீங்கள் ஏன் வாய்ப்பு அளிப்பதில்லை?

பதில்: இது வரை நடித்துள்ள 58 படங்களில், 28 படங்கள் புதுமுக இயக்குநர்கள் தான். ஒ.கே வா அண்ணா ?

கேள்வி: ‘கத்தி’ படம் கொடுத்தமைக்கு நன்றி. அனிருத்துடன் பணியாற்றியது குறித்து?

பதில்: சின்ன வயது. நிறைய ஆற்றல்.

கேள்வி: தலைவா.. நம்ம பயந்து ஒதுக்கிறோமா இல்ல பாய பதுங்குறோமா?

பதில்: பயமும் இல்லை பதுங்கவும் இல்லை. அனுபவம் தேடுகிறோம். அவ்வளவு தான்.

கேள்வி: சமீபகாலமாக உங்களது படங்களை வைத்து பலர் பிரச்சினைகளை எழுப்பும்போது உங்கள் மனதில் என்ன ஓடும்?

பதில்: இதில் என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்காகவும் அதன் பின்னணியில் உழைக்கும் மக்களுக்காக வருந்துவேன்.

கேள்வி: இன்னும் 10 வருடங்களில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: கடவுள் எழுதிய எனது வாழ்க்கை புத்தகத்தில் நம்பிக்கை இருக்கிறது. புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது. எல்லா பக்கத்தையும் சந்தோஷமாக கடக்கிறேன். என்ன நடக்கும் என்று என்னால் கூற முடியாது. பலனை எதிர்பார்க்காமல் என்னுடைய கடமையைச் சரியாக செய்ய ஆசைப்படுகிறேன்.

கேள்வி: பணம், புகழ் என அனைத்திலும் வெற்றி. அடுத்தது என்ன?

பதில்: திருப்பி கொடுப்பது. நீங்கள் கொடுத்த இந்த அதிகமான அன்புக்கு நான் என்னால் முடிந்ததை எல்லாம் திருப்பி கொடுக்க வேண்டும். கொடுப்பேன்.

கேள்வி: சமீபத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?

பதில்: ஜிகர்தண்டா மற்றும் த்ரிஷ்யம்.

கேள்வி: இணையத்தில் ரசிகர்களின் சண்டைகள் அதிகரிக்கிறது. உங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறுங்கள்

பதில்: ஆம். இது துரதிஷ்டவசமானது. இம்மாதிரி சண்டையில் ஈடுபடுவதை விடுத்து, சமூக பிரச்சினைகளில் கவனம் செலுத்தி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று எனது ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: உங்களது ரசிகர்கள் குறித்து?

பதில்: வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல. தோல்வியில் என்னை தட்டிக் கொடுத்தவர்கள் என் ரசிகர்கள். நடிகன் – ரசிகன் தாண்டிய உறவு எங்களுடையது.

கேள்வி: நிறைய பிரச்சினைகள் இருந்தும் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். எப்படி இந்த சக்தி?

பதில்: அமைதி தான் எப்போதுமே பெரிய சக்தி.

கேள்வி: உங்களது ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: உழைத்திடு.. உயர்ந்திடு.. உன்னால் முடியும்.

கேள்வி: உங்களது எதிர்ப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: எதிரியையும் நேசிப்போம். நான் அவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கேள்வி: முதலில் கோக் விளம்பரத்தில் நடித்தீர்கள். தற்போது அதற்கு எதிராக ‘கத்தி’ படத்தில் நடித்துள்ளீர்கள். ஏன் இந்த எதிர்மறை?

பதில்: மக்கள் இதே போல அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளும்போதும் கேள்வி எழுப்பினால் நான் மகிழ்வேன். ஆம், நான் இதற்கு முன் அந்த விளம்பரத்தில் நடித்தேன். சச்சின், ஆமிர்கான் போன்ற மிகப்பெரிய பிரபலங்களும் நடித்துள்ளனர். ஆனால் நான் தற்போது அந்த பிராண்டை விளம்பரப்படுத்துவதில்லை. கத்தி கதையைக் கேட்ட போது அதன் கருத்து எனக்குப் பிடித்திருந்தது. அதை ஜீவா கதாபாத்திரம் வழியாகப் பேசியுள்ளேன்.

கேள்வி: சூப்பர் ஸ்டார் தலைப்பு பிடித்திருக்கிறதா… இளைய தளபதி தலைப்பு பிடித்திருக்கிறதா…

பதில்: நான் நடிக்க ஆரம்பித்தவுடன் மக்களுக்கு என்னை பிடித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். தற்போது நான் எதிர்பார்த்தை விட மேலாக உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. உங்களுடைய இந்த அன்பிற்கு முன்னால் எனக்கு எந்தவொரு தலைப்பும் பெரிதாகத் தெரியவில்லை

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *