Chennai Today News

நடிப்பதை விட குடும்பத்தை நிர்வகிப்பது கஷ்டம் -நடிகை வித்யாபாலன் பேட்டி

‘டர்ட்டி பிக்சர்’ இந்தி படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் வித்யாபாலன். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. வித்யாபாலனுக்கும் டெலிவிஷன் நிறுவன நிர்வாகி சித்தார்த்துக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் திரையில் வலம் வருகிறார்.
திருமணத்துக்குப்பிறகு எனது உடம்பு எடை போட்டு விட்டது. ஆனால், இப்போதுதான் நான் நெளிவுசுழிவுடன் பார்க்க அழகாக தெரிகிறேன். என்னை நானே ரசிக்கும்போது மற்றவர்கள் ரசிக்கமாட்டார்களா என எதார்த்தமாக பேசுகிறார் வித்யாபாலன்.

இனி அவருடனான ஜாலி அரட்டை கச்சேரி:

சித்தார்த்துடன் காதல் மலர்ந்தது எப்படி?
சித்தார்த் என்படத்துக்கு தயாரிப்பாளராக இருந்த போது நாங்கள் காதலிக்கவில்லை. முதலில் விருது வழங்கும் விழா ஒன்றில் அறிமுகமானோம். அவர் தயாரித்த படத்தில் நடித்த போது எங்களுக்குள் காதல் இல்லை. அதன் பிறகு நெருக்கமானார். சித்தார்த்தை மணந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறேன். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை.

திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறதா?
குடும்பமான பின்பு நிறைய பொறுப்புகள் வந்திருக்கிறது. மாமியார் வீட்டில் நன்றாக நடத்துகிறார்கள். சினிமாவில் நடிப்பதை விட குடும்பத்தை நிர்வகிப்பது கஷ்டம் எல்லா வேலைகளையும் நான் தான் பார்க்க வேண்டியுள்ளது. படப்பிடிப்பு இருக்கும் போது கூட வீட்டில் வேலைக்காரிக்கு போன் செய்து என்ன சமையல் என்று விசாரிக்கிறேன். கணவரும் அவரது பெற்றோரும் எனக்கு ஆதரவாக இருப்பதால் திருமணத்தால் என் சினிமா வாழ்க்கை பாதிக்கவில்லை. திருமணம் ஆகிவிட்டதால் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பது இல்லை. எந்த கதாபாத்திரம் என்றாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். தாம்பத்ய வாழ்க்கையில் எத்தனை கஷ்டம், சிக்கல்கள் வந்தாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன்.

தொடர்ந்து நடிக்க என்ன காரணம்?
இப்போதைய ஆண்களும், திருமணமான பெண்களைத்தான் அதிகமாக ரசிக்கிறார்கள். அதற்கு காரணம், திருமணத்துக்குப்பிறகுதான் பெண்கள் தங்கள் அழகில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதனால்தான் அவர்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள் ஆண்கள். அதனால் நானும் முன்பைவிட எனது அழகை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும், குழந்தையே பெற்றுக்கொண்டாலும் எனது அழகை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். அதனால், என்னை ரசிகர்கள் ரசிக்கிற காலம் வரை சினிமாவில் கதாநாயகியாக அரிதாரம் பூசிக்கொண்டேயிருப்பேன்.

சில்க் ஸ்மிதாவாக நடித்தது பற்றி?
சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு என்னை தேடி வந்தது. சில்க் கேரக்டரில் நடிக்க நான் தயங்கவில்லை. ஆனால் உண்மையிலேயே அப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டினேன். எதிர்பார்த்ததைவிட படம் ஹிட் ஆனது. படத்தின் பெயர்தான் டர்ட்டி (அழுக்கு) என்றிருந்ததே தவிர அழுக்கான படம் கிடையாது. இதில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தது. சில்க் ஸ்மிதாவை வாழ்க்கையில் உயர்த்துவதாக கூறி அவரை தவறான வழியில் பயன்படுத்தி சீரழித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு முடிவும் இருந்தது. அப்படத்தை பார்த்தவர்கள் அதை உணர்ந்திருப்பார்கள். சில்க் போல் வேடம் ஏற்று நடித்தேனே தவிர என் வாழ்க்கை அவரது வாழ்க்கைபோல் கிடையாது. அதிர்ஷ்டவசமாக அவரைபோல் என்னை யாரும் சீரழிக்கவில்லை.

நடிகையாக வேண்டுமென்பது சிறுவயது கனவா?
நான் நடிகையாக வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. என் கனவு பலித்துவிட்டது. என் நடிப்பிற்கான அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. ஷபானா ஆஸ்மியும், ஜெயா பச்சனும் தான். அவர்களைப் போல் நிறைய கேரக்டர் ரோல்களில் நடித்து, இன்னும் நிறைய சாதிக்க விரும்புகிறேன் என்றார் வித்யாபாலன்.