மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கும் அஜீத், தனது நான்கு தம்பிகள், குடும்ப வக்கீல் சந்தானம், மற்றும் வீட்டு வேலைக்காரர் அப்புக்குட்டி ஆகியோர்களுடன் வாழ்ந்து வருகிறார். தனது தம்பிகளின் நல்வாழ்விற்காக திருமணமே செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வருகிறார்.

அதே ஊரில் தாதாவாக இருக்கும் வில்லன் பிரதாப் ராவத்துக்கும் அஜீத்தும் காய்கறி மார்க்கெட்டில் டெண்டர் எடுக்கும் விஷயத்தில் மோதல் வெடிக்கிறது. இதனால் அஜீத்தை போட்டுத்தள்ள வில்லன் தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில் அஜீத்தின் தம்பிகள் அண்ணனுக்கு தெரியாமல் காதலிக்கின்றனர். ஆனால் அண்ணனுக்கு திருமணம் நடந்தால்தான் தங்களுக்கு திருமணம் ஆகும் என்பதால் அஜீத்துக்கு திருமணம் செய்து வைக்க சந்தானத்தின் உதவியை தம்பிகள் நாடுகின்றனர். சந்தானமும் அவர்களுக்கு உதவுவதாக வாக்குறுதி அளிக்கிறார்.

இந்நிலையில் அஜீத் சிறுவயதில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், தனது தம்பிகளுக்காகத்தான் காதலை தியாகம் செய்துவிட்டதாகவும் சந்தானத்திற்கு தெரியவருகிறது. ஆனால் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டதால் அதே பெயரை உடைய கோப்பெருந்தேவி (தமன்னா) என்ற பெயருடைய பெண்ணை அஜீத்திற்கு அறிமுக செய்து வைத்தால் அஜீத்துக்கு மீண்டும் காதல் வர வாய்ப்பு உள்ளது என்ற நினைத்த சந்தானம் கோஷ்டியினர் தமன்னாவை தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டிலேயே தங்க வைக்கின்றனர்.

அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே இருவருக்கும் காதல் அரும்புகிறது. திருமணம் குறித்து தனது தந்தையிடம் பேசுவதற்காக அஜீத்தையும் அவருடைய தம்பிகளையும் தமன்னா தன்னுடைய வீட்டிற்கு ரயிலில் அழைத்து செல்லும் வழியில் வில்லன் கோஷ்டியினர் அஜீத்தை கொலை செய்ய முயல்கின்றனர். அஜித்தை கொல்ல வரும் ஒருவன் தவறி தமன்னாவை தாக்கிவிட தமன்னா மயக்கமாகி கீழே விழுகிறார்.

தமன்னாவிற்கு என்ன ஆயிற்று, அஜீத் தமன்னா காதல் நிறைவேறியதா? அஜீத்தை கொல்ல வந்தது யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு வித்தியாசமான க்ளைமாக்ஸில் பதில் சொல்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.

நீண்ட நாட்களுக்கு பின்னர் கிராமத்து வேடம் அஜீத்துக்கு. கெட்டப் நன்றாகவே பொருந்துகிறது. இவர் பேசும் பஞ்ச் டயலாக் ஒவ்வொன்றுக்கும் தியேட்டரில் நல்ல வரவேற்பு.

தமன்னாவிற்கு கொஞ்சம் கனமான வேடம்தான் சமாளித்து நடித்திருக்கிறார். இவரை சுற்றியேதான் பாதி கதை நகர்கிறது. ஹீரோயினுக்கு இவ்வளவு அழுத்தமான கேரக்டர் ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் இருப்பது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

சந்தானத்தின் நகைச்சுவை டைமிங்காக இருப்பதால் ரசிக்க முடிகிறது. தம்பிகளின் நடிப்பும் ஓகே. வேலைக்காரராக வரும் அப்புக்குட்டி வேடம் மிகப்பொருத்தம்.

வில்லன் வேடத்தில் வரும் அதுல்குல்கர்னி அசத்தல் நடிப்பு வியப்பளிக்கிறது.

தேவிஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் கிராமத்து பின்னணி இசை இவருக்கு சுத்தமாக வரவில்லை. இளையராஜதான் இந்த படத்திற்கு சரியான தேர்வாக இருந்திருக்கும்.

சிறுத்தை சிவா படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றுள்ளார். அதற்காகவே பாராட்டலாம். படத்தில் பெரிதாக மெசேஜ் எதுவும் இல்லையென்றாலும் ஒரு நல்ல பொழுதுபோக்குபடம்.

மொத்தத்தில் வீரம் ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு படம்.

Leave a Reply