shadow

vin_2408342g

மிக நீளமான மேம்பாலம் பழுதடைந்தால் என்ன நடக்கும்? ஒன்று கேட்பாரற்றுக் கிடக்கும்; அல்லது மிக மோசமான விபத்து நிகழும்வரையில் நெடுஞ்சாலைத் துறை உட்பட யாருக்கும் பாலம் பழுதடைந்திருப்பதே தெரியாது. ஆனால் தென்கொரியாவின் தலைநகரமான சியோலில் 1970-களில் கட்டப்பட்ட ஒரு மேம்பாலம் சியோல் நகரின் மிகப் பிரம்மாண்டமான வணிகச் சந்தைக்கு இட்டுச்செல்லும் பாலமாக விளங்கியது.

2009-ல் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டபோது அந்தப் பாலம் பழுதடைந்திருப்பது தெரியவந்தது. இனி இந்தப் பாலம் கனரக வாகனப் போக்குவரத்துக்குப் பயன்படாது என அரசால் அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பாலத்தை இடித்துவிடலாம் என அரசு முடிவெடுத்தது.

அதற்கு முன்பாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தது. 9,661 சதுர மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தைத் தகர்ப்பதற்குப் பதிலாகப் பாதசாரிகளின் நடைபாதையாகவும், பொதுமக்களுக்கான இடமாகவும் மாற்றலாமே எனும் புதிய பார்வை ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2015-ல் புதிய வடிவமைப்பு போட்டிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

சாமானிய மக்களுக்கான பாலம்

போட்டியில் எம்.வி.ஆர்.டி.வி. எனும் நெதர்லாந்தைச் சேர்ந்த கட்டிடக்கலை நிறுவனத்தின் பரிந்துரை வெற்றி பெற்றிருக்கிறது. சியோல் விண் தோட்டம் (Seoul sky garden) என பெயரிடப்பட்ட இத்தோட்டத்தில் 254 வகைப்பட்ட மரங்கள், செடிகள், கொடிகள் மற்றும் பூ செடிகள் உருவாக்கும் திட்டத்தை எம்.வி.ஆர்.டி.வி. நிறுவனம் முன்வைத்துள்ளது.

இந்த மேம்பாலம் பழுதடைந்ததால் கடந்த பத்தாண்டுகளாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சாமானிய மக்கள் அருகிலுள்ள ரயில் நிலையத்தைச் சென்றடைய 25 நிமிடங்கள் நடக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்தப் பாலம் புதுப்பிக்கப்பட்டால் வெறும் 11 நிமிடங்களில் அருகிலுள்ள ரயில் நிலையத்தைச் சென்றடைந்துவிடலாம். ஆகப் பொருளாதார ரீதியில் மேம்பாலச் சீரமைப்புக்கானச் செலவைக் காட்டிலும் 1.83 மடங்கு கூடுதல் லாபம் நேரம் சேமிப்பின் மூலம் கிடைக்கும் எனத் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

நகரின் பாலைவனச் சோலை

பூங்கா, தோட்டம் மட்டுமின்றித் தேநீர் விடுதி, பூக்கடைகள், காய்கறிச் சந்தைகள், பசுமை நூலகம், பசுமைக்குடில், பொருட்காட்சி எனச் சூழலியல் பாதுகாப்பையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது போட்டியை வென்ற கட்டிடக்கலை நிறுவனம். இவை தவிரப் படிக்கட்டு, லிஃப்ட், எஸ்கலேட்டர் வசதிகளுடன் கூடிய புதிய வகைக் கட்டிடங்களும் எழுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளது.

“சியோல் நகர வாசிகளின் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் விதத்தில் இந்த மேம்பாலம் புதுப்பிக்கப்படும்” என பால மறுசீரமைப்பு பணியின் முதன்மை கட்டிடக்கலை நிபுணரான வினி மாஸ் தெரிவித்தார்.

“கான்கிரீட் கட்டிடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நகர மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் பசுமை பாலைவனச் சோலை இந்தப் பாதை. அதுமட்டுமின்றி, இங்கு வளர்க்கப்படும் செடிகள், சுற்றுப்புற பூங்காக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விண் தோட்டம் ஒட்டுமொத்த சியோல் நகரைப் பசுமையாக்கும் முயற்சி” என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்

Leave a Reply