shadow

PANCHAMUGA ANCHANEYAR

அனுமனுக்கு அவரது வாலில் அதிக வலிமை உண்டு. எனவே பக்தர்கள் ஆஞ்சநேயரின் வால் தொடங்கும் இடம் முதல் வால் நுனி வரை தினமும் ஒரு பொட்டு சந்தனம் வைத்து குங்குமம் வைத்து வழிபட்டு வர வேண்டும். நுனி வரை சந்தனம் வைத்து முடிந்த நாளில் வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வது நன்மை தரும்.

வெண்ணெய்  சாத்தும் முறை

வெண்ணெய் சாத்தி ஆஞ்நேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணை எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராம நாம ஜெய பத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்க்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.

16  வகை  அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் பெரிய ஆஞ்சநேயர் திருவுருவம் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து அனுமன் ஜெயந்தி அன்று சுசீந்திரம் வந்து இவரை வழிபடுகிறார் கள். அனுமன் ஜெயந்தி அன்று காலை ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறும். மேலும் நல்லெண்ணெய், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்பு சாறு, மாதுளை சாறு, எலுமிச்சை பழச்சாறு, களபம், கஸ்தூரி, மஞ்சள்தூள், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் என 16 வகையான ஷோடஷ அபிஷேகமும் நடத்தப்படும். பின்னர் கழுத்தளவு நிறையும் அளவுக்கு வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகமும் நடைபெறும்.

உயர்ந்த சிம்மாசனம்

சீதையை விடுவித்து, போரை தவிர்க்கும்படி ராவணனிடம் கூறி வருவதற்காக ராமரின் தூதுவனாக இலங்கைக்கு வந்திருந்தார் அனுமன். தான் கொண்டு வந்த செய்தியை ராவணனிடம் கூற, அவனது அரசவைக்குள் நுழைந்தார். தூதனாக வருபவர் களுக்கு எதிர் ஆசனம் கொடுத்து மதிப்பதே அரச மரபு. ஆனால் ராவணன், அனுமனை குரங்குதானே என்று ஏளனமாக எண்ணி மதிக்க மறுத்தான். அவருக்கு ஆசனமும் அளிக்கவில்லை. சமயோசித புத்தி கொண்ட அனுமன், தன் வாலை சுருட்டி உயரமான ஆசனமாக்கி, அதன்மேல் அமர்ந்து தான் வந்த நோக்கத்தை தெரிவித்தார். அவ்வாறு ஆஞ்ச நேயர் அமர்ந்திருந்த ‘வால்’ ஆசனம், ராவணன் அமர்ந்திருந்த இருக்கையை விட இருமடங்கு உயரமானதாக இருந்தது.

செந்தூரம்  இடுவது ஏன்?

ஒரு முறை சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்தார் அனுமன். இதனை பார்த்ததும் சீதாதேவியிடம் சென்று, ‘அன்னையே! தாங்கள் நெற்றியில் செந்தூரம் இடுவதற்கான காரணம் என்ன?’ என்று வினவினார். அதற்கு சீதாதேவி, ‘எனது கணவன் ராமன் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நான், நெற்றியில் செந்தூரம் இடுகிறேன்’ என்று பதிலளித்தார். அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனுமன், கருணைக் கடலான ராமர் என்றும் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டார்.

இதனால் தான் ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும் எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழுவதும் பூசுகின்றனர். அதை பக்தர்கள் இட்டுக் கொள்ள தருகின்றனர்.

Leave a Reply