shadow

நான் ஆண்டாளின் மகன்! என்னை சந்தேகப்படலாமா? வைரமுத்து உருக்கம்

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து கூறிய ஒரு கருத்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இப்போதைக்கு இந்த சர்ச்சையை சென்னை ஐகோர்ட் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான் ஆண்டாளின் மகன், அவரை பற்றி நான் தவறாக பேசுவேனா? என்று, தன்னை சந்தேகப்படலாமா? என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மேலும் கூறியதாவது:

உலக தமிழ் பெருமக்களே வணக்கம். என் மனம் உடைக்கப்பட்டு இருக்கிறது. எப்போதுமே என் நெஞ்சுக்குள்ளே கூவிக் கொண்டிருக்கும் ஒரு குயில் கடந்த 10 நாட்களாக மூர்ச்சையுற்று கிடக்கிறது. ஏன்? என்ன காரணம்? யார் செய்த பிழை? ஆண்டாளின் புகழ் பாட நான் ஆசைப்பட்டது தவறா?

3 மாதங்கள் நான் ஆண் டாளை நான் ஆராய்ச்சி செய்து ஆய்வு கட்டுரைகளை திரட்டியது பிழையா? ராஜ பாளையத்தில் ஸ்ரீவில்லிபுத் தூரில் அவள் பிறந்த மண்ணில் கட்டுரையை நான் ஆசை ஆசையாக ஓசையோடு அரங்கேற்றியது தவறா? நான் ஆண்டாளைப்பற்றி மட்டும் ஏன் கட்டுரை எழுதுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.

இது ஆண்டாளைப் பற்றி மட்டும் எழுதப்பட்ட கட்டுரை தொடர் அல்ல. 3 ஆயிரம் ஆண்டு நீண்டு பறந்து விரிந்து கிடக்கும் தமிழ் பெருவழியில் யார் யார் தமிழுக்கு தடம் அமைத்தவர்களோ அவர்களை எல்லாம் புதிய தலைமுறைக்கு, இணைய தலைமுறைக்கு, இளைய தலைமுறைக்கு ஆற்றுப்படுத்த ஆசைப்பட்டேன். தொல்காப்பியர் தொடங்கி நிகழ்கால படைப்பாளன் வரை ஒரு பருந்து பார்வையில், ஆராய்ச்சி பார்வையில் எழுதிப் பார்க்க ஆசைப்பட்டேன்.

இது வரையில் திருவள்ளூவர், இளங்கோவடிகள், கம்பர், திருமூலர், அப்பர், வள்ளலார், உ.வே.சாமி நாத ஐயர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்று பறந்து விரிந் திருக்கிறது அந்த செய்தி.

நாயன்மார்களில் அப்பரை தேர்ந்தெடுத்த நான், ஆழ்வார்களில் ஆண்டாளை தேர்ந்தெடுக்க ஆசைப்பட்டேன். 40 ஆண்டுகளாக என் நெஞ்சில் குவலையிட்டு கும்மியடித்துக் கொண்டிருக்கும் குரல் ஆண்டாளின் குரல். அவள் பாசுரங்களை பாடல் பாட பக்தி இல்லாத எனக்கு சக்தி பிறக்கிறது. தமிழ் பிறக்கிறது. அந்த ஓசையில் உணர்ச்சி இருக்கிறது. அந்த கவிதையில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. அழகியல் கொட்டிக் கிடக்கிறது என்றெல்லாம் ஆண்டாளை கொண்டாடி கொண்டாடி குதூகலித்தேன். ஆண்டாளின் பெருமைகளை எல்லாம் அங்கு உவந்து சொன்னேன்.

தமிழ் வெளியில் முதலில் கேட்ட விடுதலை பெண் குரல் ஆண்டாள் குரல் என்று அங்கு நான் பதிவு செய்தேன். என் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கும் உரிமை உனக்குத்தான் என்று கேட்ட முதல் பெண் குரல் ஆண்டாள் குரல் என்று சொன்னேன். மானிடர்கென்று பேச்சுப்படில் வாழ்விப்பேன் என்று சொன்னவள் என் தருலைகள் மாவிருஞ்சோலை மாயவனுக்கு மட்டும்தான் என்று பேசிய ஒரு பெருமகளின் குரலை அங்கு பதிவு செய்தேன்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் வரிந்தூத, முறை காண்ட பந்தலின் கீழ் மதுசூதனன் தம்பி கைத்தலம் பற்றி கனா கண்டேன் தோழிநான் என்ற பாடலை சொல்லி, பாசுரத்தை சொல்லி ஆண்டாள் பாசுரத்தில் தமிழ் வருவதை கொண்டாடினேன். அவளை சமூகவியல் பார்வையில் பார்த்தேன். சமய பார்வையில் பார்த்தேன். பல்வேறு காரணங்களை ஆராய்ந்து ஆராய்ந்து எழுதினேன்.

எத்தனையோ மேற்கோள்களை காட்டினேன். பல்வேறு அறிஞர்களை என்கருத்துக்கு பக்கத்துக்கு அழைத்து வந்தநான், கடைசியில் ஒரே ஒரு மேற்கோளை காட்டினேன். அந்த கட்டுரையை எழுதிய 86 வயது இந்திய பேராசிரியர் இன்னும் உயிருடன் இருக்கிறார். ‘ஆண்டாள் தேவதாசி ஸ்ரீரெங்கம் கோவிலில் வாழ்ந்து மரணம் அடைந்தார்’ என்று எழுதி இருக்கிறார்.

இந்த பார்வையை நான் ஏன் பதிவு செய்து இருக்கிறேன் என்றால் தேவதாசி என்பது உயர்ந்த குல பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமை அது. நான் மனிதனை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் கடவுளைத்தான் பெருமாளைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். எந்த மனிதனுக்கும் நான் கட்டுப்பட்டவள் அல்ல உயர்ந்த இடத்துக்கு சென்றுவிட்டேன். கடவுள் பக்கத்தில் சென்றுவிட்டேன். மனதுக்கு கட்டுப்பட்டு வாழேன் என்று சொன்ன உயர்ந்த குரல் அது.

அந்த உயர்ந்த குரல் எப்படி வந்தது என்றால், மனித கூட்டத்திடம் இருந்து விடுதலை பெற்று கடவுளை சென்றடைந்த ஒருவரின் குரல் என்பதை காட்டுவதற்காக அந்த வரிகளை மேற்கோளிட்டேன். ஒருவேளை அந்த வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்தான் பக்தர்கள் இதை தவறாக புரிந்து கொள்ளமாட்டார்கள் என்ற எச்சரிக்கையோடு பேசுகிறேன். அது என் கருத்து என்று சொல்லவில்லை. பேராசிரியர் நாராயணன் கேசவன் இருவரின் கருத்து.

மேற்கோள் காட்டிய நான் உயர்ந்த பொருளில் சுட்டி இருக்கிறேன். மூலத்தை எழுதியவர்கள் ஆண்டாளை போற்றியவர்கள் என்றால், மேற்கோள் காட்டியநான் இழிந்த பார்வை பார்த்தவன் ஆவேனா? மூலமே உயர்த்தி சொல்கிறதே? மேற்கோள் காட்டிய நான் இழிவுபடுத்தி விட்டேனா?

ஆண்டாள் எனது தாய். என் தாய் அங்கம்மாய் என்னை பெற்றதாய். ஆண்டாள் எனக்கு தமிழ்பால் ஊட்டிய தாய். ஆண்டாள் நான் கற்றதாய். இரண்டு தாய்களையும் நான் ஒரு நிலையில் வைத்து பார்க்கிறவன் அல்லவா?

என்னை தமிழ் சமூகம் சந்தேகப்படலாமா? நான் ஆண்டாளை இழிவு செய்வேனா? நான் அப்படி குற்றம் செய்பவனாக இருந்தால் அவள் பிறந்த மண்ணில் அதை சொல்லி இருப்பேனா? அங்கு கூடி நின்ற தாய்மார்கள் என்னை கூடி நின்று கொண்டாடினார்கள்.

அவ்வளவு கொண்டாடப்பட்ட கட்டுரையை யாரோ மதம் வெந்த அரசியலுக்காகவோ, அரசியல் கலந்த மதத்துக்காகவோ திரித்து பரப்பிவிட்டார்கள். தேவதாசி என்ற சொல்லில் தேவ என்ற வார்த்தையை மறைந்து வைரமுத்து ஆண்டாளை தாசி என்று சொல்லிவிட்டார் என்று பரப்பினார்கள். மேலும் பரப்பியவர்கள் தாசி என்ற சொல்லை வேசி என்று பரப்புகிறார்கள்.

இப்படிப்பட்ட கூட்டத்தில் தமிழ் வளர்க்க வேண்டுமே என்று வெட்கப்படுகிறேன். நான் உயர்வாக சொன்னதை தாழ்வாக சொன்னதாக சித்தரித்து காட்டுவது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறேன். இதனால் எனக்கு சொல்லால் வந்த இழிவுகள் அதிகம். செயலால், எழுத்தால் எத்தனையோ இழிவுகளை தாங்கி கொண்டேன். எல்லா வி‌ஷயங்களையும் நான் குறித்துக் கொள்ளேன். என்னை ஆதரித்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. இந்த வாசகத்தை ஏற்றுக் கொண்டால் ஆண்டாளையும் புரிந்து கொள்வீர்கள். இந்த வைரமுத்துவையும் புரிந்து கொள்வீர்கள்.

என் தமிழால் யாரையும் புண்பட்டுவிடக்கூடாது என்று வருத்தம் தெரிவித்து விட்டேன் செய்யாத குற்றத்துக்காக வருத்தம் தெரிவித்த பிறகும் இழிவுபடுத்தவில்லை என்று தமிழ் சமுகம் புரிந்து கொள்ளும்.

இவ்வாறு வைரமுத்து அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *