shadow

மீண்டும் கருணாநிதியின் குரல் ஒலிக்கும். முரசொலி விழாவில் வைகோ முழக்கம்


முரசொலிக்கு நூற்றாண்டு விழா நடக்கும் போதும் உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்கள் வந்து வாழ்த்துவார்கள். அப்போது கருணாநிதி நூறாண்டுகள் கடந்து பல நூறாண்டுகள் வாழ்வார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்று வைகோ பேசியதாவது:

”வரலாற்று சிறப்புமிக்க நாளில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இங்கே திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாகவே நினைத்துக் கொண்டு பேசுகிறேன்.

பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக இருந்த போது என் உடல்நலக் குறைவு அறிந்து உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் ஒன்றரை மாதம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டதோடு, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேனா இல்லையா என்பது மருத்துவர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது நான் அவருக்கு 10 பக்க கடிதம் எழுதினேன்.

உடல் நலம் சரியாகி வந்த போது நான் தான் உன்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தேன் என்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டார். 10 பக்க கடிதம் எழுதியதைக் கூறினேன்.

அண்ணனாக இருந்த நான் வைகோவுக்கு தாயும் ஆனேன். அதற்கு காரணமான நோய்க்கு நன்றி என்றார் கருணாநிதி.

நான் பொடா சிறையில் இருந்து வெளியே வந்த போது பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியே வா என்று முரசொலியில் எழுதியவர் கருணாநிதி.

மீண்டும் கருணாநிதியின் குரல் ஒலிக்கும். என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று அந்தக் குரல் ஒலிக்கும்.

முரசொலிக்கு நூற்றாண்டு விழா நடக்கும் போதும் உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்கள் வந்து வாழ்த்துவார்கள். அப்போது கருணாநிதி நூறாண்டுகள் கடந்து பல நூறாண்டுகள் வாழ்வார். முரசொலி வாழ்க” என்று வைகோ பேசினார்.

Leave a Reply