shadow

கருணாநிதிக்கு கலக்கத்தை ஏற்படுத்திய மக்கள் நல கூட்டணி

vaikoகடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகோவின் முயற்சியால் தொடங்கப்பட்ட ‘மக்கள் நலக்கூட்டணி’ தமிழகத்தில் எடுபடுமா? என்ற சந்தேகத்தை பல அரசியல் விமர்சகர்கள் வெளிப்படையாகவே வைத்தனர். ஏனெனில் தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை மூன்றாவது அணிக்கு வெற்றி கிடைத்ததே இல்லை. இது கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நிரூபணம் ஆனது. ஆனால் தற்போது இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக இரண்டுமே மக்கள் நலக்கூட்டணியை பார்த்து கலக்கமடைந்துள்ளது. குறிப்பாக மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் நெருங்குவது திமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலக்கூட்டணி வலுவானால், ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் பிரிந்து மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தவே உதவும் என்பதுதான் திமுகவின் கலக்கத்திற்கு காரணம். எனவேதான் மதிமுகவை உடைக்கும் முயற்சியிலும், தேமுதிகவை வளைக்கும் முயற்சியிலும் திமுக கடந்த சில மாதங்களாக முயற்சித்து வந்தது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, மக்கள் நல கூட்டணியின் வளர்ச்சியை பார்த்து கருணாநிதி கலங்குவதாக கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: “மக்கள் நலக்கூட்டணி தொகுதி உடன்பாடுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. 6 மாதத்துக்கு முன்பே உருவாக்கப்பட்ட கொள்கை திட்ட கூட்டணியாகும். மக்கள் நலக்கூட்டணி,  ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாத பலமிக்க கவசத்தன்மை மிக்க, நம்பிக்கைத் தன்மை கொண்டது. 65 சதவீத இளைய தலைமுறையின் கருத்து தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி.

வெள்ளச்சேதத்தின் போது அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது. மக்களின் துயர் துடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழக வெள்ளச் சேதத்துக்கு நாங்கள் கேட்ட ரூ.50 ஆயிரம் கோடியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கவில்லை. எனவே செயலற்ற மாநில அரசையும், நிவாரணம் ஒதுக்காத மத்திய அரசையும் கண்டித்து வருகிற 31ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் கலந்து கொள்வார்கள்” என்று கூறினார்.

மேலும் அவரிடம் செய்தியாளர்கள்,   மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான நீங்கள் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளீர்கள். அதே நேரத்தில் திமுக  தலைவர் கருணாநிதியும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்து உள்ளாரே? என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த வைகோ, ‘‘நாங்கள் மதியம் விஜயகாந்தை சந்தித்துப் பேசினோம். அதன் பிறகு 3 மணி நேரத்துக்கு பிறகு திமுக  தலைவரும் அழைப்பு விடுத்து உள்ளார்.

நாங்கள் விஜயகாந்தை அழைத்தது அவருக்கு கலக்கத்தை உருவாக்கி உள்ளது. நாங்கள் சந்தித்த பிறகுதான் அவர் விஜயகாந்தை அழைக்க வேண்டுமா? அதற்கு முன்பே அழைத்திருக்கலாமே? கலைஞர், விஜயகாந்தை அழைத்ததற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதுகுறித்து விஜயகாந்த்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
 

Leave a Reply