shadow

house_loan_2235127f

நடுத்தர வர்க்கத்தின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்குவது வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்தான். வீட்டுக் கடனுக்கான எதிர்பார்ப்புகள் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக எகிறிக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக வீட்டுக் கடன் அறிவிப்புகளாக இருந்தாலும் சரி, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளாக இருந்தாலும் சரி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லாத் துறையினரிடமும் காணப்படுவதைப் போல ரியல் எஸ்டேட் துறையிலும் காணப்படும். அண்மையில் வெளியான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ரியல் எஸ்டேட் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் என்ன சேதியைச் சொல்கிறது?

வட்டி குறைப்பும் மகிழ்ச்சியும்

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் மிகவும் குஷியாவார்கள். காரணம், இதனையடுத்து வங்கிகள் வட்டி விகிதங்களை உடனே குறைக்கும். வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைந்தால், சொந்த வீடு வாங்கும் கனவில் உள்ளவர்கள் அதற்கான முயற்சியில் இறங்குவார்கள். வீட்டுக் கடனுக்காக வங்கிகளை அணுகுவார்கள்.

இதன் காரணமாக வீடுகள் விற்பனையும் அதிகரிக்கும். வட்டி விகிதம் குறைவதால் அது வீடு வாங்குபவர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதால் விற்பவர்கள்- வாங்குபவர்கள் என இரு தரப்புக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அண்மையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவிப்பில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே தற்போது ரியல் எஸ்டேட் துறையில் உடனடியாக எந்தத் தாக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது. தற்போது வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்காமல் போனதற்கு என்ன காரணம்?

பணவீக்கம் காரணம்

“ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காததால் தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமும் இல்லை பாதகமும் இல்லை. வட்டி விகிதங்களைக் குறைத்திருந்தால் சாதகமாக இருந்திருக்கும். இதனால் வீட்டுக் கடன் வாங்குவது அதிகரித்திருக்கும். ஆனால், ரெப்போ ரேட் குறைக்கப்படும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

நவம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைந்திருந்தது. டிசம்பர் மாதத்திலும் பணவீக்கம் குறைந்து ஒரு நிலையான தன்மை ஏற்பட்டால் உடனடியாக வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப் புள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சூசகமாக தெரிவித்திருக்கிறார்” என்கிறார் ஓய்வு பெற்ற வங்கி துணைப் பொது மேலாளர் எஸ்.கோபால கிருஷ்ணன்.

புத்தாண்டில் வட்டி குறையும்

அப்படியெனில் வீடு வாங்க உத்தேசித்துள்ளவர்கள் பிப்ரவரியில் வெளியிடப்படும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்காக காத்திருக்க வேண்டுமோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவரையிலும் காத்திருக்கத் தேவையில்லை என்கிறார் எஸ்.கோபாலகிருஷணன். “அதுவரையிலும் காத்திருக்காமல் புத்தாண்டு தொடக்கத்திலேயே வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்றே தெரிகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநரும் இதைச் சூசகமாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

எனவே இப்போது குறைக்கவில்லையே என வருத்தப்படத் தேவையில்லை. இன்னும் சில வாரங்கள் சென்றால் ரெப்போ ரேட் நிச்சயம் குறையும். இதை நிதியமைச்சகமும் விரும்புவதால் ஜனவரியில் நிச்சயம் நடக்கும். ரெப்போ ரேட் குறையும்போது வீட்டுக் கடன் வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் வரும் காலங்களில் ரியல் எஸ்டேட் துறைக்கும் சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

ரியல் எஸ்டேட்டுக்குச் சாதகமா?

பெருநகரங்களில் கட்டிய பல வீடுகள் இன்னும் விற்பனை ஆகாமல் இருப்பது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே வட்டி விகிதங்களைக் குறைத்தால் வீடு விற்பனை மெல்ல மெல்ல அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். ஜனவரியைத் தொடர்ந்து பிப்ரவரியில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையிலும் ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமான அறிவிப்புகள் வெளியானால் துறையின் வளர்ச்சி வேகம் பிடிக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையினர்.

Leave a Reply