shadow

MEDICINES_772074f

உயிர் காக்கும் மருந்துகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை சிவப்பு நிற பட்டையில் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட உள்ளது. மேலும், ‘விலை கட்டுப்பாட்டின் கீழ் இந்த மருந்து கொண்டுவரப்பட்டுள்ளது‘ என்ற வாசகமும் இடம்பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும் என்று கடந்த 2003ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், உயிர்காக்கும் மருந்துகளை பட்டியலிட்டு அவற்றுக்கு விலை கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும் என்று அறிவுறுத்தியது. இருப்பினும் இது செயல்வடிவம் பெறவில்லை. நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் விலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மருந்து பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 348 மருந்துகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எனவே, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மருந்துகள் பலவற்றை இந்த பட்டியலில் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன்படி தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய புதிய பட்டியலை தயாரித்து வருகிறது. ரத்தக்கொதிப்பு, வலி நிவாரணம், மன அழுத்தம், எச்ஐவி, நிமோனியாவுக்கான மருந்துகள் உட்பட 100க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் சேர்க்கப்பட உள்ளது. எனவே, இவற்றின் விலை விரைவில் குறைய உள்ளது.

இந்நிலையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு அரசு நிர்ணயித்த விலை சிவப்பு பின்னணியில் கருப்பு நிற கொட்டை எழுத்தில் பளிச் என தெரியும் வகையில் பொறிக்கப்பட உள்ளது. மேலும், ‘விலை கட்டுப்பாட்டின் கீழ் இந்த மருந்து கொண்டுவரப்பட்டுள்ளது’ என்ற வாசகமும் இருக்கும். இது புத்தாண்டு பரிசாக வரும் ஜனவரியில் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மருந்து விலையை கண்காணிப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. 600க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் 6,000க்கும் மேற்பட்ட பெயர்களில் அந்தந்த மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக ஊரக பகுதிகளில் இப்பிரச்னை பெரும் சிக்கலாக இருக்கிறது. மருந்து விலையை கொட்டை எழுத்தில் பொறிப்பதன் மூலம் நுகர்வோர் இதை எளிதாக கண்டறியலாம்’’ என்றார்.

புகார் தர இலவச எண்:

மருந்துகள் குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்கப்பட்டால் இதுகுறித்து நுகர்வோர் நேரடியாக தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு புகார் செய்ய 1800 111255, 1800 114424 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோல், நுகர்வோர் சில மருந்துகளை முழு அட்டையாக அல்லாமல் சில்லரையில் வாங்கும்போது அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதியை கவனித்து வாங்க முடிவதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் முடிவு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply