shadow

UPSC தேர்வின் டாப்பர் டீனா டாபி சொல்லும் 5 வெற்றி ரகசியங்கள்!

11கடந்த மே மாதம் 11 ம் தேதி, UPSC IAS சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியானது. இதில் மாநிலத்தில் முதலாம் இடம் பெற்றவர், டெல்லி, லேடி ஶ்ரீராம் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த, டீனா டாபி. அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், சாதிக்க நினைக்கும் இளம் பெண்களுக்கு தன்னுடைய ஆலோசனையை கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

”இந்த உலகம் ஆண்களால் நிரம்பியது. அவர்களின் ஆதிக்கத்தால் செயல்படுகிறது. இதில் பெண்கள் தங்களுக்கான இடத்தை வலுவாக பதிக்க வேண்டியது, அவசியமாகிறது. உங்களை நோக்கி வரும் விமர்சனங்களையோ, எதிரான வார்த்தைகளையோ உங்களை முன்னேற்றும் விதமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதை உங்கள் முன்னேற்றத்தில் காட்டுங்கள். எதற்காகவும் கவலைப்படாதீர்கள். வேதனையில் சுழலாதீர்கள். எதிர்க்கும் மன தைரியத்தை விட, அதை ஏற்றுக் கொண்டு முன்னேற்றத்தினை காட்டி, எதிர்வினையைத் தெரிவியுங்கள். உங்களுடைய உயரத்தை யாருக்காகவும் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

ஆரம்பத்தில் நான் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலமாக பல செய்திகளை படித்தபோது மனதளவில் பாதிப்படையவே செய்தேன். என்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதான அச்சமும், கவலையும் அதிகமானது. என்னால் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டேன். பிறகு, யோசனை செய்து நிதானத்திற்கு வந்தேன். நான் எடுத்திருக்கும் மதிப்பெண், என்னுடைய மதம் என என்னைச் சுற்றி உள்ள பல விஷயங்களைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் இருந்த வருத்தம் தற்போது குறைந்திருக்கிறது என்றே சொல்வேன். அதை உணர்ந்து, புரிந்து அதனூடே பயணிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது, அந்த வருத்தங்கள் மறைந்திருக்கின்றன என்றே நினைக்கிறேன்.” என்றவருக்கு பணி புரிய கிடைத்திருக்கும் இடம் ராஜஸ்தான்.

”என்னுடைய சொந்த ஊரில் எனக்கு போஸ்டிங் கிடைக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை. எங்கு சென்றாலும், மனிதர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கான கலாசாரத்தை கடைபிடித்துதான் வருகிறார்கள். இதற்காக நான் கவலைப்படவில்லை. நான் எங்கு போனாலும், எங்கு வேலை பார்த்தாலும் ஆண், பெண் பாலின வேறுபாட்டிற்கு எதிராகவே வாழ்வேன். எந்த மாவட்டத்தில் எனக்கான பணியினை கொடுத்தாலும், என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவே ஆசைப்படுகிறேன். என்னை நிறைய பேர் ரோல் மாடலாக நினைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. UPSC படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, ஸ்மார்ட்டாகப் படியுங்கள். அதாவது, உங்களுடைய பலம் எது.. பலவீனம் எது என்பதை தெரிந்து கொண்டு படியுங்கள். எனக்கு கணிதம் அவ்வளவாக வராது. ஆனால், எனக்கு என்ன வருமோ அதில் சிறந்த முறையில் செயல்பட்டேன்’ என்கிறார் டீனா.

UPSC  படிப்பவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்களை பகிர்கிறார் டீனா டாபி

* பலமுறை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். முக்கியமாக கீ-வேர்டுகளை அன்டர்லைன் செய்து படிக்க வேண்டும். நமக்கு எந்த சப்ஜெக்ட் நன்றாக வருமோ அதில் அதிகமாக கவனம் செலுத்தவேண்டும். அதற்காக வராதவைகளை விட்டு விடக்கூடாது. அதை கூர்ந்து கவனித்துப் படிக்க வேண்டும்.

* நாளிதழை உங்கள் நண்பராக்கிக் கொள்ளுங்கள். தினமும் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ மறக்காமல் படியுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நேரங்கள் தேவைப்படலாம். அதாவது ஒருவர் ஒருமணி நேரம் படிப்பதை, சிலர் அரை மணி நேரம் ஆக்கலாம் அல்லது இரண்டு மணி நேரம் படிக்கலாம். இப்படி, ஒவ்வொருவரின் பழக்கமும் மாறும். அதற்கு தகுந்தாற் போல உங்கள் படிப்பில் கவனம் செலுத்தலாம்.

* சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய செய்திகளை ஒன்று சேர்த்துப் படிக்கும் போது உங்களுக்கு தினசரி படித்த அனுபவம் கை கொடுக்கும். அதே போல டைம் டேபிள் போட்டு படிப்பது இன்னும் உங்களுடைய படிப்பை எளிதாக்கும்.

* ஒவ்வொருவரும் டார்கெட் வைத்துக் கொண்டு படிப்பது நல்ல பலன் தரும். இரண்டு வாரம், ஒரு மாதம் என உங்களுடைய திறனுக்கு ஏற்றவாரு டார்கெட் வைத்துக் கொள்வது உங்களுடைய வெற்றிக்கான வழியாக அமையும்.

* UPSC என்பதே ஒன்றுடன் ஒன்று பிணைந்ததுதான். எனவே, ஒவ்வொரு சிலபஸையும் தொடர்புபடுத்தி படிப்பதன் மூலமாக கேள்விகளை மிக எளிதாக கையாளலாம். ஸ்மார்ட் ஸ்டடியை நீங்கள் கடைபிடியுங்கள். 

Leave a Reply