shadow

TN_20141009140030989842

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கின்றனரோ, அந்த அளவுக்கு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். வள்ளலாரின் வாழ்க்கை அப்படிப்பட்டது தான். வள்ளலாரின் பெற்றோர் இல்லறத்தில் இருந்தபடியே சிவதொண்டு செய்து வந்தனர். தாய், தந்தையின் இந்த சேவை குணம், வள்ளலாரின் மனதில் சிறுவயதிலேயே பதிந்து விட்டது. அதன் விளைவு தான், இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் வடலுார் சத்திய ஞான சபையின் அடுப்பு. பசித்தவர்க்கு உணவளிக்க வேண்டும் என்ற பண்பை, வள்ளலார் தன் பெற்றோரிடமிருந்து கற்று, அதையே அவர் உலகிற்கும் பாடமாக போதித்தார்.

சிதம்பரம் அருகிலுள்ள மருதுாரில் வசித்த ராமையா பிள்ளை, ஆசிரியராகவும், கிராமத்தின் கணக்கு வழக்குகளையும் பார்த்து வந்தார். இவர், ஏற்கனவே ஐந்து முறை மணம் முடித்து, மனைவியரை இழந்தவர். ஆறாவதாக சின்னம்மையை மணந்தார். இத்தம்பதியின் ஐந்தாவது பிள்ளை தான் ராமலிங்க அடிகளார். ஒருமுறை, ராமையா பிள்ளையின் வீட்டுக்கு சிவயோகி ஒருவர் வந்தார். அவரை வரவேற்று உணவளித்த சின்னம்மைக்கு, திருநீறு அளித்த துறவி, ’உனக்கு ஆன்மிக சக்தி நிறைந்த அருட் குழந்தை ஒன்று பிறக்கும்…’ என்று ஆசி வழங்கினார். அதன்படியே சிறிது காலத்தில், சின்னம்மை கர்ப்பமானார். அக்.,5, 1823ம் ஆண்டு, வளர்பிறை துவிதியை திதியில் பிறந்தார் ராமலிங்க அடிகளார். பெற்றோர் அவருக்கு ராமலிங்கம் என, பெயரிட்டனர். இவருக்கு முன், சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள் மற்றும் உண்ணாமுலை ஆகிய நான்கு குழந்தைகள் இருந்தனர். வள்ளலார் பிறந்த ஆறாவது மாதத்தில், தந்தை இறந்து விட்டார். சிறிது காலம் பிள்ளைகளுடன் தம்பி வீட்டில் தங்கிய சின்னம்மை, பின், சென்னையில் குடியேறினர். மூத்த மகன் சபாபதி, ஒரு புலவரிடம் பாடம் படித்தார். புராண சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்பது அவரது எண்ணம்; அதன்படி, சொற்பொழிவாளராகவும் ஆகி விட்டார்.

தன் தம்பியையும், தன் ஆசிரியரிடமே சேர்த்து விட்டார். ஆனால், ராமலிங்கம் படிப்பில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. இந்நிலையில், ஒரு நாள், உடல்நலக்குறைவால் சபாபதியால் சொற்பொழிவுக்கு செல்ல முடியவில்லை. அதனால், தன் தம்பியை அனுப்பி வைத்தார். அங்கு சென்ற ராமலிங்கம் மிக அருமையாகப் பாடல்கள் பாடி, அதற்கு அற்புதமாக விளக்கமும் அளித்தார். ஒரு சிறுவனுக்குள் இவ்வளவு திறமையா என்று எல்லாரும் வியந்தனர். சரியாகப் படிக்காத தன் தம்பி, இவ்வளவு ஞானமுள்ளவனா என்று ஆச்சரியப்பட்டார் சபாபதி. சரியாகப் படிக்காத பிள்ளைகளை, திறமையற்றவர் கள் என்று எடை போட்டு விடாதீர்கள். படிப்பு முக்கியமே என்றாலும், நல்ல பழக்கங்களே, குழந்தைகளின் வாழ்வை சிறப்பாக்குகிறது. வள்ளலாரின் குழந்தைப் பருவ வரலாறு உணர்த்தும் பாடம் இதுதான்.

Leave a Reply